ராமர் கோயிலுக்கு ஒரே மாதத்தில் ரூ.25 கோடி நன்கொடை வழங்கிய பக்தர்கள்

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் பிராண பிரதிஷ்டை கடந்த மாதம் 22-ம் தேதி நடைபெற்றது. கோயிலுக்குள் குழந்தை ராமர் சிலை வைக்கப்பட்டது. மறு நாள் முதல் பக்தர்கள் கோயிலில் தரிசனம் செய்து வருகின்றனர். அந்த வகையில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் ரூ.25 கோடிக்கும் அதிகமான நன்கொடைகளைப் பக்தர்கள் வழங்கி உள்ளனர். இதுகுறித்து ராமர் கோயில் அறக்கட்டளை அதிகாரி பிரகாஷ் குப்தா நேற்று கூறியதாவது:

ராமர் கோயிலுக்கு பக்தர்கள் அதிகளவில் நன்கொடை வழங்கி வருகின்றனர். அதில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் என்பதற்காக ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (எஸ்பிஐ) வங்கியுடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளோம். அதன்படி, கோயில் வளாகத்தில் வங்கி அதிகாரிகள் பல இயந்திரங்களை வைத்து பக்தர்கள் தரும் நன்கொடைகளை அறக்கட்டளை கணக்கில் வரவு வைக்கின்றனர். எனினும், பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால், கூடுதல்ஊழியர்கள் நியமித்து நன்கொடைகளை பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கோயில் வளாகத்தில் தற்போது 4 தானியங்கி பணம் எண்ணும் இயந்திரத்தை எஸ்பிஐ நிறுவியுள்ளது.

ராமர் கோயிலுக்கு ரொக்கமாகவும், தங்கம், வெள்ளி பொருட்களாகவும், செக், டிராப்ட் மூலமாகவும் பக்தர்கள் நன்கொடை வழங்கிவருகின்றனர். ஆனால், ஆன்லைன்மூலம் வங்கியின் கோயில் அறக்கட்டளை கணக்குக்கு அனுப்பப்படும் நன்கொடைகள் குறித்து எங்களுக்கு தெரியவில்லை. ராமர் மீது பக்தர்கள் அளவுகடந்த பக்தி வைத்துள்ளனர். அதற்காக தங்கம், வெள்ளியால் செய்யப்பட்ட பல பொருட்களை நன்கொடையாக வழங்குகின்றனர். அவற்றில் பல பொருட்கள் கோயிலில் பயன்படுத்த முடியாதவையாக இருக்கின்றன. எனவே, நகைகள், பாத்திரங்களாக பக்தர்கள் நன்கொடையாக வழங்கினால் பெற்றுக் கொள்வோம்.

கடந்த ஜனவரி 23-ம் தேதிமுதல் இதுவரை 60 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் ராமர்கோயிலில் தரிசனம் செய்துள்ளனர். ராம நவமியின் போது பக்தர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும். அதற்கேற்ப கோயில் அறக்கட்டளை ஏற்பாடுகளை செய்து வருகிறது. இவ்வாறு பிரகாஷ் கூறினார். அறக்கட்டளையைச் சேர்ந்த மற்றொரு அதிகாரி அனில் மிஸ்ராகூறும்போது, ‘‘இதுவரை கோயிலுக்கு 10 கிலோ தங்கத்திலான பொருட்கள் நன்கொடையாக வந்துள்ளன. தங்கம், வெள்ளி மற்றும் விலை உயர்ந்த உலோகபொருட்களை மத்திய அரசிடம் ஒப்படைக்க முடிவெடுத்துள்ளோம். அவற்றை உருக்கி பராமரிக்கும் நோக்கில் மத்திய அரசிடம் அவை வழங்கப்படும்’’ என்று தெரிவித்தார்.