ராமர் கோயில் பெயரில் நன்கொடை மோசடி

விஸ்வ ஹிந்து பரிஷத் (விஎச்பி) அமைப்பு செய்தித் தொடர்பாளர் வினோத் பன்சால் நேற்று கூறியதாவது: அயோத்தியில் ராமர் கோயில் கும்பாபிஷேகம் ஜனவரி 22-ல்நடைபெறவுள்ளது. இந்த நிலையில், ராமர் கோயிலின் பெயரைச் சொல்லி பக்தர்களிடம் நிதி மோசடி நடைபெறுவது தெரியவந்துள்ளது.. மோசடி நபர்கள் கோவிலின் பெயரில் நன்கொடை கோரி சமூக வலைதளங்களில் போலி செய்திகளை வெளியிடுகின்றனர்.

இந்த செய்திகளில் கியூஆர் கோடும் இடம்பெற்றுள்ளது. அதனை பக்தர்கள் தங்களது மொபைல்போனில் ஸ்கேன் செய்து ராமர் கோயிலுக்கு நன்கொடை செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இதனைஉண்மை என நம்பி பொதுமக்கள் ஸ்கேன் செய்து அனுப்பும்பணம் மோசடியாளர்களின் வங்கிகணக்கிற்கு நேரடியாக சென்று விடுகிறது.

இந்த விவகாரம் தொடர்பாக உள்துறை அமைச்சகம், டெல்லி மற்றும் உத்தர பிரதேசத்தில் உள்ள காவல் துறை தலைவர்களிடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. ராமர் கோயியிலுக்காக நன்கொடை வசூலிக்க ஸ்ரீராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா இதுவரை யாருக்கும் அதிகாரம் அளிக்கவில்லை. எனவே, கியூஆர் கோடு போன்ற டிஜிட்டல் நிதி மோசடிகளில் பக்தர்கள் ஏமாற வேண்டாம். பொதுமக்கள் விழிப்புடனும், கவனமாகவும் இருக்க வேண்டும். இவ்வாறு வினோத் பன்சால் தெரிவித்தார்.