ராமகிருஷ்ண பரமஹம்சர்

ராமகிருஷ்ண பரமஹம்சர் சொன்ன ஒரு குட்டிக் கதை

ஒரு ஊரில் செல்வந்தன் இருந்தான். அவனுக்கு ஒரு தோட்டம் இருந்தது. அந்த தோட்டத்தில் ஒரு குளம் வெட்டி மீன்களை வளர்த்தான். ஒரு நாள் இரவு திருடன் ஒருவன் யாருக்கும் தெரியாமல் அந்த தோட்டத்தில் நுழைந்து மீன்களை பிடித்துக்கொண்டிருந்தான். இது செல்வந்தனுக்கு தெரியவர திருடனை பிடிப்பதற்கு ஆட்களை அனுப்பினான்.

காவலர்கள் வருவதை கண்ட திருடன், எந்த வகையிலும் தோட்டத்தில் இருந்து தப்பிக்க முடியாது, மாட்டிக்கொள்வது உறுதி என்று உணர்ந்தான். இனி தப்பிக்க வழி என்ன என்று யோசித்தான்! உடனே அருகில் கிடந்த சாம்பலை எடுத்து தன் உடல் முழுதும் பூசிக்கொண்டு ஒரு மரத்தின் கீழ் அமர்ந்து கொண்டான்.காவலாளிகள் தோட்டம் முழுதும் தேடியும் அவர்களால் திருடனை பிடிக்க முடியவில்லை. ஆனால் ஒரு மரத்தடியில் உடல் முழுதும் சாம்பல் பூசியிருந்த சாதுவைத்தான் அவர்கள் கண்டனர் .

மறுநாள் காலையில் செல்வந்தனின் தோட்டத்தில் ஒரு ஞானி எழுந்தருளியிருக்கிறார் என்ற செய்தி காட்டுத்தீ போல் பரவியது. மக்கள் கூட்டம் கூட்டமாக மலர்கள், காணிக்கை, பட்சணங்களுடன் அந்த தோட்டத்துக்கு சென்று வந்தனர். இதை கண்ட சாது வேடத்தில் இருந்த திருடன் மெய்சிலிர்த்துப் போனான்.

நானோ உண்மையில் ஒரு சாது அல்ல, சாதுவை போல் வேடம் தரித்த திருடன். அப்படி இருந்தும் மக்கள் என்னை உண்மையான சாது என்று நம்பி காணிக்கை வழங்குகின்றனர். என் மீது மதிப்பும் மரியாதையும் காட்டுகின்றனர். நான் உண்மையில் ஒரு சாதுவாக இருந்தால் இதைவிட மேலான சிறப்புகள் கிடைப்பதுடன் எனக்கு நிச்சயம் ஆண்டவனின் தரிசனமும், அருளும் கிட்டும் என்று தனக்குத் தானே பேசிக்கொண்டான்.

இப்படி அந்த திருடன் மேற்கொண்ட வெறும் வேடமே அவனது உள்ளத்தில் ஆன்மீக விழிப்பு உணர்வை உண்டாக்கியது. அன்று முதல் மனமாற்றம் பெற்று மேன்மை அடைந்தான்.

ஆசைகள் ஒருவன் மனதை விட்டு விலகும் போது ஆத்மாவிடம் தங்கியிருப்பது பிரம்மானந்தமே!