ராகுல் காந்திக்கு தனிச்சட்டம் கிடையாது

தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, தூத்துக்குடியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தகுதி நீக்கம் குறித்து கேள்விக்கு பதில் அளித்த அவர், “இதேபோல லட்சத்தீவு எம்.பி ஒருவருக்கு, கொலை வழக்கில் தீர்ப்பு வந்தபோது உடனடியாக தகுதி நீக்கம் செய்யப்பட்டார். அதேபோலத்தான், ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் மற்றும் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பு வந்தபோது மக்கள் பிரதிநிதி அந்த பதவியில் நீடிக்கும் தகுதியை தானாக இழக்கிறார். உச்ச நீதிமன்ற உத்தரவு அடிப்படையில் மக்களவை சபாநாயகர் ராகுல் காந்தியை தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். ஒரு சாதாரண மனிதனுக்கு எந்தச் சட்டம் பொருந்துமோ, காங்கிரஸ் குடும்பத்தில் பிறந்த ராகுல் காந்திக்கும் அது பொருந்தும். தமிழகத்தில் அரசை எதிர்த்து விமர்சனம் செய்கிறவர்கள், மீம்ஸ் பதிவிடுபவர்கள், கார்ட்டூன் போடுபவர்களை எல்லாம் காவல் துறை அதிகாலை 2 மணிக்கு எல்லாம் சட்டத்தின் பெயரில் கைது செய்கின்றனர். அப்படியிருக்கும்போது, பாரதத்தில் இருக்கும் ஒரு உயரிய குடும்பம், காங்கிரஸ் குடும்பத்தில் பிறந்த ராகுல் காந்திக்கும் இது பொருந்தும் இல்லையா? அவருக்கு மட்டும் தனிச்சட்டம் நாட்டில் கிடையாது. சட்டத்தின் அடிப்படையில் 30 நாள் மேல்முறையீட்டுக்கு உள்ளது. அவர் மேல்முறையீடு செய்யலாம். உச்ச நீதிமன்றத்தில் தடை ஆணை பெறலாம். அதற்கான அனைத்து வழிமுறைகளும் உள்ளன. அதே காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கபில் சிபல், இதுகுறித்து விரிவாக பேசியிருப்பார். ராகுல் காந்தியைப் பொறுத்தவரை இது அவராகவே வரவழைத்துக் கொண்டது. ‘சௌக்கிதார் சோர் ஹே’ என்று சொன்னபோதே உச்ச நீதிமன்றம் எச்சரித்தது. இந்நிலையில் ‘மோடி’ என்ற துணைப் பெயரை கேவலப்படுத்தி, அசிங்கப்படுத்தியிருப்பதாக, அந்த சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் தான் சூரத்தில் அவதூறு வழக்குத் தொடர்ந்தார். மேலும் இந்த வழக்கில் தீர்ப்பு வரும்போது, ராகுல் காந்தியும் சூரத் நீதிமன்றத்தில் இருந்தார். அந்த தீர்ப்பின் அடிப்படையில் மக்களவை சபநாயகர் இந்த முடிவை எடுத்துள்ளார். சட்டம் என்பது அனைவருக்கும் பொருந்தும். அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ராகுல் காந்தி உட்பட சாதாரண மனிதன் வரை அனைவருக்கும் பொருந்தும். இதுதான் ஜனநாயகம்” என்று கூறினார்.