யோகா காப்புரிமை இல்லாதது, உலகளாவியது; பிரதமர் மோடி

பிரதமர் நரேந்திர மோடி, நான்கு நாள் அரசு முறைபயணமாக அமெரிக்கா சென்றுள்ளார்.அங்கு, நியூயார்க் நகரில் உள்ள ஐ.நா., தலைமையகத்தில் நடந்த ஒன்பதாவது சர்வதேச யோகா தினத்தில் நேற்று பங்கேற்றார். ஐ.நா., தலைமையக வளாகத்துக்குள் கடந்த ஆண்டு டிச., மாதம் நிறுவப்பட்ட மகாத்மா காந்தியின் மார்பளவு உருவச்சிலைக்கு, பிரதமர் மாலை அணிவித்து மரியாதை செய்தார். பின், நடந்த யோகா பயிற்சியில் பங்கேற்று அவர் பேசியபோது, யோகா என்றால் ஒன்று படுவது. கடந்த ஒன்பது ஆண்டுகளுக்கு முன், சர்வதேச யோகா தினத்தை ஆண்டுதோறும் ஜூன் 21ம் தேதி கொண்டாட வேண்டும் என்ற என் விருப்பத்தை இதே இடத்தில் பரிந்துரைத்தது நினைவுக்கு வருகிறது. இதற்கு ஒட்டு மொத்த உலகமும் திரண்டு வந்து ஆதரவு அளிப்பதை பார்க்கும்போது பரவசமாக உள்ளது.இந்தியாவில் இருந்து மற்ற நாடுகளுக்கு பரவிய யோகக்கலை மிகவும் பழமையான பாரம்பரியம்.இதற்கு பதிப்புரிமையோ, காப்புரிமையோ கிடையாது.இதற்கு யாரும் பங்கு கோர முடியாது.வயது, பாலினம், உடற்தகுதி நிலைக்கு ஏற்றது.இது உலகளாவியது என்றார். இந்த நிகழ்வில், ஐ.நா., பொதுச்சபை தலைவர் சாபா கொரோசி, நியூயார்க் நகர மேயர் எரிக் ஆடம்ஸ், ஐ.நா., துணை பொதுச் செயலர் அமினா ஜெ.முகமது, ‘ஹாலிவுட்’ நடிகர் ரிச்சர்ட் கெரே உட்பட பல்வேறு துறை பிரபலங்களும், பொதுமக்களும் பங்கேற்றனர். இந்த நிகழ்வில், 135க்கும் அதிகமான நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஒரே இடத்தில் திரண்டு யோகா செய்தது, ‘கின்னஸ்’ சாதனையாக பதிவு பெற்றுள்ளது.