மே.வங்க மகளிர் நிதி திட்டம் : ரூ. 48,000 கோடி மோசடி

பெண்களுக்கு நிதியுதவி அளிக்கும் திட்டம் பெரும்பாலான மாநிலங்களில் நடைமுறையில் உள்ளது. மேற்கு வங்காளமும் இதற்கு விதிவிலக்கல்ல. இந்த திட்டம் `லட்சுமி பண்டார்’ என்று குறிப்பிடப்படுகிறது. மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த பெண்களுக்கு நிதியுதவி அளிப்பதில் பிரச்சினை எதுவும் இல்லை. ஆனால் அதே நேரத்தில் பங்களாதேஷிலிருந்து சட்டவிரோதமாக ஊடுருவியவர்களுக்கு லட்சுமி பண்டார் தொகையை வழங்கியுள்ளது. மிகக்கடுமையான பொருளாதார முறைகேடாகும்.

மேற்கு வங்காள முதல்வர் மமதா பானர்ஜியும், அவரது திரிணாமுல் காங்கிரஸ் நிர்வாகிகளும், வாக்கு வங்கி அரசியலுக்காக சட்டவிரோதமாக ஊடுருவியவர்களுக்கு கேடயமாக செயல்பட்டு வருகிறார்கள். மேற்கு வங்காளத்தில் ஏறத்தாழ 1.6 கோடி பெண்கள் இத்திட்டத்தால் பயனடைகின்றனர் என புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. இதற்காக அரசு பல்லாயிரம் கோடி ரூபாயை செலவிடுகிறது. மாநில அரசின் நிதிச்சுமை திணறலுக்கு ஆளாகியுள்ளது.

இப்பின்னணியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ள தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது. வீடு வீடாகச் சென்று சரி பார்க்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. உண்மையான வாக்காளர்கள் மட்டுமே சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். போலி வாக்காளர்கள் நீக்கப்படுவார்கள் என்பதை தேர்தல் ஆணையம் தெளிவுபடுத்தியுள்ளது.

திரிணாமுல் காங்கிரஸ் நொண்டிச் சாக்கு கூறி, இதை எதிர்த்து வருகிறது. சட்டவிரோத குடியேறிகளுக்கு வாக்காளர் பட்டியலில் இடமில்லை என்பது உறுதிப்படுத்தப்படும் என்ற நிலையில் உரிய ஆவணங்கள் இல்லாத 1,500க்கும் மேற்பட்ட சட்டவிரோத பங்களாதேஷிகள் பாரதத்தை விட்டு ஓடி விட்டனர். இது ஒரு உதாரணம் மட்டுமே. இதைப்போல பல இடங்களில் நடைபெற்றுள்ளது. மேற்கு வங்காளத்தில் பங்களாதேஷிகள் ஆதார் அட்டை வைத்துள்ளனர்.

ரேஷன் அட்டை வைத்துள்ளனர். வாக்காளர் அடையாள அட்டை வைத்துள்ளனர். இன்னும் சொல்லப் போனால் சிலர் நில உடைமை தொடர்பான ஆவணங்களையும் வைத்துள்ளனர்.
தெற்கு 24 பர்கானா மாவட்டத்தில் உள்ள பதன்காளி என்ற கிராமப் பஞ்சாயத்தில் மட்டும், 3,500 போலி பிறப்புச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன என்ற திடுக்கிட வைக்கும் தகவல் அண்மையில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. பிஹாரில் 65 லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளனர்.

மேற்கு வங்காளத்தில் இதைக் காட்டிலும் அதிகம் பேரை நீக்க வேண்டிய நிலையில் உள்ளது. லட்சுமி பண்டார் திட்டத்தின் கீழ் ரூ.48,000 கோடி அளவுக்கு மோசடி நிகழ்ந்துள்ளது. எதிர்காலத்தில் இத்தகைய முறைகேடுகளுக்கு இடம் கொடுக்கக்கூடாது எனில், சட்டவிரோத குடியேறிகள் அனைவரும் அடையாளம் கண்டு அவர்களை உடனடியாக வெளியேற்ற வேண்டியது அவசியம்.

மமதா பானர்ஜியின் வாக்கு வங்கி அரசியல் தேசத்தின் ஒற்றுமைக்கும், ஒருமைப்பாட்டுக்கும் குந்தகம் விளைவிக்கும் வகையில் உள்ளது. ஒரு குறிப்பிட்ட மதத்தினரின் ஆதரவைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக, மமதா செய்துவரும் தில்லுமுல்லுகள் ஒன்றன்பின் ஒன்றாக அம்பலமாகி வருகின்றன.

இது திரிணாமுல் காங்கிரஸின் எதிர்காலத்தையே இருள வைத்துவிடும் என்று கொல்கத்தா அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

ஆர்கனைசர் ஆங்கில வார இதழிலிருந்து

தமிழில் : நிகரியவாதி