பாரதத்தின் பெருமிதம் பன்மைத்தன்மையே ஆர்.எஸ்.எஸ் தலைவர் தெளிவுரை

ஆர்.எஸ்.எஸ் நிறுவனர் டாக்டர் ஹெட்கேவார் ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்று சிறை சென்றுள்ளார். ஏராளமான ஸ்வயம்சேவகர்கள் `வெள்ளையனே வெளியேறு’ போராட்டத்தில் பங்கேற்று சிறை சென்றுள்ளனர். சுதந்திரப் போராட்டத்திற்கு ஸ்வயம்சேவகர்கள் அளித்த பங்களிப்பை இருட்டிப்பு செய்வது எவ்வகையிலும் ஏற்புடையதல்ல.

ஆரர்.எஸ்.எஸ் அகில பாரத தலைவர் டாக்டர் மோகன் பாகவத் அஸ்ஸாமில் 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். பல்வேறு தரப்பினருடனும் கலந்துரையாடினார். ஆசிரியர்கள், எழுத்தாளர்கள், தொழிலதிபர்கள், ஊடகவியலாளர்கள் ஆகியோர் அடங்கிய கூட்டத்தில் அவர் பேசியதாவது:

இந்தத் தேசத்தை நேசிக்கக்கூடிய அனைவரும் ஹிந்துக்களே. `பாரதம்’ என்று சொல்வதில் பெருமைப்படுபவர்கள் ஹிந்துக்களே. `ஹிந்து’ என்ற வார்த்தையை மத கண்ணோட்டத்தில் பார்க்கக்கூடாது. இது கலாச்சார ரீதியான வார்த்தை. `பாரத்’ என்றாலும், `ஹிந்து’ என்றாலும் ஒன்றுதான். பாரதம் இப்போதே ஹிந்து ராஷ்ட்ரமாகத்தான் உள்ளது. இதை அதிகாரப்பூர்வமாக பிரகடனப்படுத்த வேண்டியதில்லை.

யாருக்காவது தீங்கு விளைவிக்க வேண்டும் என்ற அடிப்படையில் ஆர்.எஸ்.எஸ் தொடங்கப்படவில்லை. தனிமனித ஒழுக்கத்தை மேம்படுத்துவதற்காகவும், பாரதத்தை விஸ்வ குருவாக உயர்ந்தோங்க வைக்க வேண்டும் என்பதற்காகவும்தான் ஆர்.எஸ்.எஸ் தொடங்கப்பட்டது. ஆர்.எஸ்.எஸ் பற்றி உண்மைக்குப் புறம்பான தகவல்கள் பரப்பப்படுகின்றன. அவற்றை பொருட்படுத்தக் கூடாது. ஷாகாவுக்கு நேரில் வந்து பாருங்கள். ஆர்.எஸ்.எஸ்.ஸின் செயல் பாட்டையும் நடவடிக்கைகளையும் நேரில் உணர்ந்து கொள்வீர்கள்.

பன்மைத்தன்மை பாரதத்தின் பெருமிதமாக உள்ளது. பஞ்சப் பரிவர்த்தனையை ஆர்.எஸ்.எஸ் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தில் முன்னெடுத்துள்ளோம். சமூக நல்லிணக்கம், குடும்ப நல்லெழுச்சி, ஒழுக்கம் சார்ந்த கட்டுப்பாடு, சுயசார்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவை முக்கிய 5 அம்சங்களாகும். இதில் குடும்பத்தின் பங்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.

ஒவ்வொரு குடும்பத்தினரும், தத்தமது முன்னோரைப் பற்றி நன்கு அறிந்திருக்க வேண்டும். இதுகுறித்து எதிர்கால சந்ததியினரிடம் எடுத்துரைக்க வேண்டும். இந்த பாரம்பரியம் தொடர்ந்து நீடிக்க வேண்டும். லஸித் போர்புகான், ஸ்ரீமாந்த சங்கர்தேவ் ஆகியோர் ஒரு குறிப்பிட்ட பிராந்தியத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், அவர்கள் தேசத்திற்கே முன் உதாரணங்களாக விளங்குகிறார்கள்.

சட்டவிரோத ஊடுருவலைத் தடுத்து நிறுத்த வேண்டும். மதமாற்றத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். ஹிந்துக்கள் 3 குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும். இளைஞர்கள் சமூக ஊடகத்தை பொறுப்பாக பயன்படுத்த வேண்டும். வரம்பு மீறி செயல்படக்கூடாது.

ஆர்.எஸ்.எஸ் நிறுவனர் டாக்டர் ஹெட்கேவார் ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்று சிறை சென்றுள்ளார். ஏராளமான ஸ்வயம்சேவகர்கள் `வெள்ளையனே வெளியேறு’ போராட்டத்தில் பங்கேற்று சிறை சென்றுள்ளனர். சுதந்திரப் போராட்டத்திற்கு ஸ்வயம்சேவகர்கள் அளித்த பங்களிப்பை இருட்டிப்பு செய்வது எவ்வகையிலும் ஏற்புடையதல்ல. பாரதத்தை வளர்ந்த தேசமாக கட்டமைக்க தன்னலமின்றி ஒருங்கிணைந்து பாடுபடுவோம். இவ்வாறு அவர் பேசினார்.

இளைஞர்களிடையே டாக்டர் மோகன் பாகவத் பேசியதாவது: இளைஞர்கள், தேசத்தின் வரலாற்றை நன்கு படித்து புரிந்து கொள்ள வேண்டும். வளர்ச்சி ஒரே நாளில் ஏற்பட்டு விடாது. இது தொடர் நிகழ்வாகும். ஒரு நூற்றாண்டாவது அயராது உழைத்தால்தான் வளர்ச்சி நனவாகும்.

எனது பாதைத்தான் சரியானது என்ற பிடிவாதம் கூடாது. எனது பாதை சரியானது, உனது நிலைப்பாட்டில் உன் பாதையும் சரியானதுதான் என்ற மனோபாவத்தை புரிந்து கொள்ள வேண்டும். மற்ற பல நாடுகளில் பன்மைத்தன்மைக்கு இடமில்லை. ஆனால் பாரதம் இதற்கு இடமளிக்கிறது. பாகிஸ்தானில் உள்ள பஞ்சாபிகளும், சிந்திகளும், உருது மொழியை பயன்படுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டு விட்டனர்.

மனிதர்களை மேம்படுத்துவதற்காகவே ஆர்.எஸ்.எஸ் தொடர்ந்து பணியாற்றி வருகிறது. தனி மனிதர்களின் ஒழுக்கம் மேம்பட்டால், தேசம் தானாகவே எழுச்சியுறும். பசு பாதுகாப்பை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்ல வேண்டும். இதுகுறித்து இன்னும் ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.

அமெரிக்கா, சீனா போன்ற நாடுகள் வித்தியாசமான வெளியுறவுக் கொள்கையை பின்பற்றுகின்றன. தனக்கு நன்மை கிடைக்காவிட்டாலும், தனது எதிரிக்கு தீமை விளைய வேண்டும் என்ற அடிப்படையில் இந்த நாடுகள் செயல்படுகின்றன. ஆனால் பாரதம் இவ்வாறு செயல்படுவதில்லை.

பாரதத்தின் வெளியுறவுக் கொள்கை, பாரதத்தையே மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது. வேறு எந்த நாட்டுக்கு ஆதரவாகவோ அல்லது எதிராகவோ பாரதத்தின் வெளியுறவுக் கொள்கை உருவாக்கப்படவில்லை.

இதை புரிந்து கொள்ள வேண்டியவர்கள் புரிந்து கொண்டால் பிரச்சினை இல்லை. இவ்வாறு அவர் உரையாற்றினார்.

ஆர்கனைசர் ஆங்கில இணையத்திலிருந்து
தமிழில் : அடவி வணங்கி