மே.வங்க சந்தேஷ்காலியில் சிபிஐ அதிகாரிகள் சோதனை: ஆயுதங்கள் பறிமுதல்

மேற்கு வங்கத்தின் சந்தேஷ் காலியில் அமலாக்கத் துறை (ஈ.டி)அதிகாரிகள் மீதான தாக்குதல் தொடர்பாக சிபிஐ நேற்று சோதனை நடத்தியது. இதில் கைத்துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

மேற்கு வங்கத்தில் பல கோடி ரூபாய் ரேஷன் பொருள் விநியோக ஊழல் தொடர்பாக மாநில முன்னாள் உணவு அமைச்சர் ஜோதி ப்ரியா மல்லிக் கைது செய்யப்பட்டுள்ளார். இவருடன் நெருங்கியத் தொடர்புடைய திரிணமூல் காங்கிரஸ் பிரமுகர் ஷாஜகான் ஷேக்கின் வீட்டை சோதனையிட, வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள சந்தேஷ்காலி கிராமத்துக்கு ஈ.டி. அதிகாரிகள் கடந்த ஜனவரி 5-ம் தேதி சென்றனர். அப்போது அந்த அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

இது தொடர்பாக சிபிஐ 3 வழக்குகளை பதிவு செய்துள்ளது. மாநில காவல் துறை பிடியில் இருந்த ஷாஜகான் ஷேக்கை கைது செய்துள்ளது.

இந்நிலையில் இந்த வழக்குகள் தொடர்பாக சந்தேஷ்காலியில் பல இடங்களில் சிபிஐ அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். இதில் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைத் துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப் பட்டன. ஈடி. அதிகாரிகள் மீதான தாக்குதல் தவிர ஷாஜகான் ஷேக் மற்றும் அவரது கூட்டாளிகள் மீது நில அபகரிப்பு, அச்சுறுத்தி பணம் பறித்தல் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பாகவும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத் தக்கது.