மேற்கு வங்க மமதா காட்டு தர்பாரில்

கோணல்களை மறைக்க கொக்கரிப்பு!

‘மமதை’ – இப்படியும் பெயர் வைப்பார்களா பெற்றோர்கள்? வைத்திருக்கிறார்களே! மமதை யின் ஒட்டுமொத்த உருவமாக ஒருவரைப் பெற்று வளர்த்திருக்கிறார்களே! மமதா என்ற பெயருக்கு என்ன அர்த்தமோ தெரியவில்லை. ஆனால் அவரைப் பற்றி அறிந்த எவரும் ‘மமதை’ என்று தான் மொழிபெயர்ப்பார்கள்.

மத்திய புலனாய்வு அமைப்புகளுக்கு மாநிலத் தில் இடமில்லை என சில மாதங்களுக்கு முன்பு கொக்கரித்த முதல்வர்களில் இவரும் ஒருவர். அது ஏன் என்பது பிப்ரவரி 4-ம் தேதி புலனானது. அவர் வெகுநாட்களுக்குப் பிறகு மத்திய புலனாய்வுத் துறை சிபிஐ-க்கு எதிராக மீண்டும் களமாடினார். இம்முறை மாநில முதலமைச்சராக.

ஊழலுக்கு ஊழல் ஆதரவு!

நாட்டின் எதிர்காலத்தைச் சூன்யமாக்கித் தங்கள் எதிர்காலத்தைக் காப்பாற்ற, இப்போதைய மத்திய அரசை எதிர்த்தே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கும் கட்சிகளும், அமைப்புகளும், ஊழலின் ஒட்டுமொத்த உருவங்
களும் அவருக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தன.

மேற்கு வங்க மாநில உயர்நீதி மன்றத்தில் நடந்த சாரதா நிதி மோசடி வழக்கை உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி ‘சிபிஐ’க்கு மாற்றவேண்டும் எனக் கோரிக்கை வைத்தவர்களே தற்போது மத்திய அரசை வசைபாடுகிறார்கள்.

சாரதா நிதி – பின்னணி என்ன?

தனது இளமைக் காலத்தை நக்ஸலைட்டாகக் கழித்த சங்கராதித்ய சென் பிற்காலத்தில் தனது முக அமைப்பை அறுவை சிகிச்சையால் திருத்திக் கொண்டு, சுதிப்தோ சென் எனப் பெயர் மாற்றிக் கொண்டான். அவன் தலையெழுத்தும் மாறியது. 2010ல் மேற்கு வங்கத்தில் அவன் ஆரம்பித்தது தான் பல நிறுவனங்களை உள்ளடக்கிய சாரதா குழுமம். அதில் எல்லாவித தொழில்களுக்கும் இடமிருந்தது.

அது சங்கிலித் தொடர் வணிக (பல்முனை சந்தைப் படுத்துதல்) முறையைக் கையாண்டது. அதாவது ஒருவன் தன்னிடத்தில் இருப்பதை  இழந்து விட்டு, அடுத்தவனின் பணத்தை அபகரிக்க வேண்டும். இப்படி ஆரம்பத்தில் இணைந்தவர்கள் அடுத்தடுத்து இணைந்தவர்களின் முதலீட்டை விழுங்கி வளர்ந்தனர். அந்நிறுவனம் பிரபலமானது. நான்கே ஆண்டுகளில் (2013-ல்) உச்சத்தை எட்டி, குட்டு வெளிப்பட்டு, அதல பாதாளத்தில் வீழ்ந்தது.

நம் நாட்டு மக்களின் முதலீடான ரூ.30 ஆயிரம் கோடியை விழுங்கிய சாரதா நிதி மோசடியின் பாதிப்புகள் மேற்கு வங்கம் தாண்டி பிற மாநிலங்களிலும் உணரப்பட்டது. அந்நியச் செலாவணி மோசடி, பயங்கரவாத முதலீடு என வெளிநாடுகளின் தொடர்பும் இதில் உண்டு. (பார்க்க பெட்டிச்செய்தி)

திருடன் கையில் சாவி

கொல்கத்தா உயர்நீதிமன்ற மேற்பார்வையில் சாரதா நிதி மோசடியை விசாரிக்க மேற்கு வங்க மாநில அரசு -2013ல் அன்று ராஜீவ்குமார் தலைமையில் ஒரு சிறப்பு விசாரணைக் குழுவை நியமித்தது. வழக்கை உடனே சிபிஐக்கு மாற்ற வேண்டுமென அப்போதைய மத்திய காங்கிரஸ் அரசு கேட்டுக் கொண்டது (இப்போது ராஹுல் மமதா பக்கம்).

அப்போதே சிபிஐ விசாரணையைத் தலைகீழாக நின்று எதிர்த்தது மமதாவின் திருணமூல் அரசு.

“வழக்கில் எந்த முன்னேற்ற மும் இல்லை; சதிச் செயல் நிரூபிக்கப்படவில்லை; பணம் போன வழி தெரியவில்லை; ஊழல் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படவில்லை!” என்று குறிப்பிட்டு -2014ல் அன்று உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி தாக்குர் வழக்கை சிபிஐக்கு மாற்றி உத்தர விட்டார்.

வழக்கு கை நழுவிப் போவதாகத் தெரிந்த உடன் அதற்கு முன் அனைத்து ஆதாரங்களையும் அழிக்கத் துடித்த மேற்கு வங்கக் காவல்துறை திருடனின் கையிலேயே சாவியைக் கொடுத்தது. ஆம், சிறப்பு விசாரணைக் குழு அதிகாரி சாரதா நிதி வழக்கு தொடர்பான முக்கிய ஆதாரங்களான ‘மடிக் கணினி’, ‘அலைபேசி’ உள்ளிட்டவற்றை அவ்வழக்கில் முக்கிய குற்றவாளியான  சுதிப்தோ சென்னிடம் ஒப்படைத்தார்.

சிபிஐ அதிர்ச்சி வழக்கை விசாரிக்கத் தொடங்கிய ‘சிபிஐ’ மாநில அரசின் இத்தகைய முறைகேடுகளைக் கண்டு அதிர்ச்சி அடைந்து, கொல்கத்தா நகரக் காவல்துறை ஆணையர் ராஜீவ்குமாருக்கு விசாரணைக்கான 4 அழைப்பாணைகளை அனுப்பியது. அவர் சிபிஐ விசாரணைக்கு உட்பட மறுத்தார்.

எந்தரீதியிலும் சிபிஐ விசாரணையை முடக்க வேண்டும், அதில் அரசியல் ஆதாயம் தேடவேண்டும் என்பதே மமதாவின் திட்டம், உத்தரவு. எனவே பிப்ரவரி 4ம் தேதி கொல்கத்தாவில் உள்ள ராஜீவ்குமாரின் அலுவலகத்திற்கு நேரடியாகச் சென்ற சிபிஐ குழுவை மாநிலக் காவல்துறை சிறை எடுத்தது. சிபிஐக்கு எதிராக மமதா தர்ணாவில் ஈடுபட்டார்.உள்துறையின் ஒழுங்கு நடவடிக்கை

இதனிடையே மத்திய உள்துறை அமைச்சகம் மேற்குவங்க மாநில ஆளுநரிடம் பணியாளர் ஒழுங்கு முறைக்கு எதிராக, மமதாவின் அரசியல் நாடகத்தில் சீருடையுடன் பங்கேற்ற காவல்துறை உயரதிகாரிகள் ஐவர் பட்டியலைக் கேட்டுள்ளது. அவர்களோடு, ராஜீவ்குமார் மீதும் விரைவில் மத்திய அரசின் ஒழுங்கு நடவடிக்கைகள் பாயலாம்; அவர்களது பதக்கங்கள் திரும்பப் பெறப்படலாம்; பதவி உயர்வு தடுக்கப்படலாம்; தற்காலிகப் பணி நீக்கம் செய்யப்படலாம் என செய்திகள் வருகின்றன.

அதை அறிந்த மமதா, ‘மத்திய அரசு காவல்துறை அதிகாரிகளின் பதக்கங்களைப் பறித்தால், அவர்களுக்கு மாநிலத்தின் மிக உயரிய விருதான ‘வங்க விபூஷன்’ வழங்குவேன், மத்திய அரசு எனக்கு மடல் எழுதினால் அதற்குக் காட்டமாகப் பதில் எழுதுவேன்’ என்றெல்லாம் மத்திய அரசை எச்சரித்துள்ளார்.

சாதாரண ஒரு காவல்துறை ஆணையருக்கு ஆதரவாக மாநில முதலமைச்சரே தர்ணாவில் ஈடுபட்டார்; குற்றப்பழி சுமந்திருக்கும் அந்தக் காவல் அதிகாரியோ அவர் அருகில் கால் மேல் கால் போட்டு அமர்ந்திருந்தார். ராஜீவ்குமாரிடம் அப்படி என்ன தான் ரகசியம் இருக்கிறதோ?

கோடிகள் கொட்டி மமதாவின் கிறுக்கல்களை (ஓவியங்களாம்!) வாங்கிக் கொண்டதாம் சாரதா சீட்டு நிறுவனம். நல்ல கணக்குக் காட்டுகிறார்கள், நல்ல போக்குக் காட்டுகிறார்கள்!

அப்போதைய குஜராத் முதலமைச்சரான மோடி சிபிஐ விசாரணைக்கு ஒத்துழைத்தார். அவரது அமைச்சரவையைச் சேர்ந்த அமித் ஷா கைதான பின்பும் அமைதி காத்தார். ஆனால் மமதாவின் மடியில் என்ன கனம்? எதனால் சிபிஐ விசாரணையைக் கண்டு இத்தனை பயம்? விரைவில் புரியும்.