மேற்கு வங்கத்தில் ராம நவமி கொண்டாட்டத்தில் வன்முறையை தூண்டியது யார், வெளியாட்களா? – அரசு அறிக்கை அளிக்க கொல்கத்தா உயர் நீதிமன்றம் உத்தரவு

மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத் மாவட்டம் பெல்தங்கா மற்றும் சக்திபூரில் கடந்த 17-ம் தேதி ராம நவமியை முன்னிட்டு ஊர்வலம் நடைபெற்றது. அப்போது அங்குள்ள ஒரு மசூதி வழியாக ஊர்வலம் சென்றபோது இரு தரப்பினரிடையே வன்முறை வெடித்தது.
இதில் 19 பேர் காயமடைந்தனர். இந்த வன்முறை சம்பவம் குறித்துஎன்ஐஏ அல்லது சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி முஸ்லிம் ராஷ்ட்ரிய மஞ்ச் அமைப்பு உட்பட பலர் கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு தலைமை நீதிபதி டி.எஸ்.சிவஞானம் மற்றும் நீதிபதிஹிரான்மே பட்டாச்சார்யா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான அமிதேஷ் பானர்ஜி வாதிடும்போது, “முர்ஷிதாபாத் மாவட்டத்தில் கடந்த 12-13 தேதிகளில் வன்முறை நிகழ்ந்தது. இதையடுத்து தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த போதிலும் 17-ம் தேதி மீண்டும் மோதல் வெடித்தது” என்றார். பின்னர் நீதிபதிகள் கூறியதாவது: முர்ஷிதாபாத் மாவட்டத்தில் ராம நவமிக்கு முன்பாக இதுபோன்ற மோதல் ஏற்பட்டதில்லைஎன மனுதாரர்கள் தெரிவித்துள்ளனர். அப்படியானால், இந்த வன்முறையில் வெளியாட்கள் சம்பந்தப்பட்டிருக்கிறார்களா என்ற கேள்வி எழுகிறது. ராம நவமியை முன்னிட்டு நடந்த 6 மணி நேரகொண்டாட்டத்தின்போது அமைதிகாக்க முடியாதவர்கள் மக்கள் பிரதிநிதிகளைப் பெற தகுதியற்றவர்கள். இந்தப் பகுதியில் வரும் மே 4 மற்றும் 13 ஆகிய தேதிகளில் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், இப்பகுதியில் மக்கள் அமைதியாகவும் நல்லிணக்கத்துடனும் வாழ முடியாத நிலை ஏற்பட்டால், தேர்தலை ரத்து செய்ய நேரிடும்.
தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், இரு பிரிவினர் இப்படி சண்டையிட்டுக் கொள்கிறார்கள் என்றால், அவர்களுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் தேவையில்லை என்று கருதுகிறோம். இந்த வன்முறையை தூண்டியது யார்? இதில் வெளியாட்களுக்கு தொடர்பு இருக்கிறதா? என்பது குறித்து மாநில அரசு விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கின் அடுத்த விசாரணை 26-ம் தேதி நடைபெறும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.