மூன்று சீனப் பொருட்களுக்கு பொருள் குவிப்பு தடுப்பு வரி

மத்திய அரசு, சீனாவின் மூன்று பொருட்கள் மீது ‘பொருள் குவிப்பு தடுப்பு வரி’யை ஐந்து ஆண்டு களுக்கு விதித்துள்ளதாக, வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அண்டை நாடான சீனாவில் இருந்து மலிவு விலையில் அதிகளவில் இறக்குமதி செய்யப்படும் வீல் லோடர்கள், ஜிப்சம் டைல்ஸ் மற்றும் தொழிற்துறை லேசர் இயந்திரங்கள் ஆகிய பொருட்களுக்கு மத்திய அரசு பொருள் குவிப்பு தடுப்பு வரி விதித்துஉள்ளது. வர்த்தக அமைச்சகத்தின் விசாரணை பிரிவான டி.ஜி.டி.ஆர்., எனப்படும் வர்த்தக தீர்வுகளுக்கான பொது இயக்குனரகத்தின் பரிந்துரைகளைத் தொடர்ந்து, அரசு இந்நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

டி.ஜி.டி.ஆர்., மேற்கொண்ட தனித்தனி ஆய்வுகளில், இப்பொருட்கள், இந்திய சந்தைகளுக்கு சாதாரண மதிப்புக்கும் குறைவான விலையில், அந்நாட்டில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்டு வருவது தெரிந்தது.

இதன் காரணமாக உள்நாட்டு தொழில்துறைகள் பாதிப்படைந்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, பொருள் குவிப்பு தடுப்பு வரி விதிக்க டி.ஜி.டி.ஆர்., பரிந்துரைத்ததை, நிதியமைச்சகம் ஏற்று இவ்வரியை விதித்துள்ளது.

கடந்த மாதம் வெளியிடப்பட்ட மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியத்தின் அறிவிப்பின்படி, இப்பொருட்கள் ஏற்றுமதி ரத்து செய்யப்படாவிட்டால் அல்லது, நிபந்தனைகளுக்கு ஏற்ப மாற்றியமைக்கப்படாவிட்டால், அல்லது திருத்தப்படாவிட்டால், பொருள் குவிப்பு தடுப்பு வரி ஐந்து ஆண்டுகளுக்கு விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.