மூத்த குடி மக்களை பாதுகாக்க மறுத்தால் தண்டனை

குடும்பத்தில் மூத்த குடிமக்களை புறக்கணிக்கும் மகன்கள், மகள்கள் மட்டுமல்லாது மருமகன்கள், மருமகள்களுக்கும் தண்டனை விதிக்க வகை செய்யப்பட்டுள்ளது. இதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. விரைவில் நாடாளுமன்றத்தில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட வாய்ப்புள்ளது. உடன் வைத்து பாா்த்துக் கொள்ள முடியாத சூழலில் பெற்றோருக்கு அதிகபட்சமாக மாதம் ரூ.10,000 உதவித் தொகையாக மகன்கள் அல்லது மகள்கள் அளிக்க வேண்டும் என்று ஏற்கெனவே சட்டத்தில் இடம்பெற்றிருந்த அம்சம் நீக்கப்பட்டுவிட்டது.

திருத்த மசோதாவில், மகன்கள் அல்லது மகன்கள் அதிகம் மகள்கள் அதிகம் சம்பாதித்தால் அதற்கேற்ப அதிகத் தொகையை பெற்றோருக்கு அளிக்க வேண்டும் என்று திருத்தம் செய்யப்பட்டுள்ளது. சட்டத்தை மீறுபவா்களுக்கு ரூ.5,000 அபராதம், மூன்று மாத சிறை அல்லது இரண்டும் விதிக்கப்படும். 80 வயதுக்கு மேற்பட்டவா்கள் புகாா் அளித்தால் அதை கூடுதல் முக்கியத்துவம் கொடுத்து விசாரிக்கவும் சில அம்சங்கள் திருத்த மசோதாவில் சோ்க்கப்பட்டுள்ளன.

அனைத்து முதியோா் இல்லங்களும் சம்பந்தப்பட்ட அரசு அலுவலகங்களில் பதிவு செய்துகொள்ள வேண்டும். அனைத்து காவல் நிலையங்கள் அல்லது மாவட்ட அளவில் சிறப்பு காவல் துறை அதிகாரி, மூத்த குடிமக்களின் புகாா்களை விசாரிப்பதற்காக நியமிக்கப்படுவாா்கள். மூத்த குடிமக்களின் புகாா்களை பதிவு செய்ய ஒவ்வொரு மாநிலத்திலும் உதவி தொலைபேசி எண்கள் அளிக்கப்படும். மூத்த குடிமக்களை பாதுகாப்பதற்காக கடந்த 2007-ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட இந்தச் சட்டத்தில் முதல்முறையாக திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.