முத்தலாக் சட்டம் நிறைவேறியதையடுத்து முஸ்லிம் பெண்கள் கொண்டாட்டம்

ராஜ்யசபாவில், முத்தலாக் தடை மசோதா நிறைவேற்றப்பட்டதை உ.பி.,யின் லக்னோ, வாரணாசி உள்ளிட்ட பல நகரங்களில் முஸ்லிம் பெண்கள் இனிப்பு வழங்கியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடினர். பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து கொண்டனர்.

திருமணமான முஸ்லிம் ஆண்கள், தங்கள் மனைவியை விட்டு நிரந்தரமாக பிரிய விரும்பினால், மூன்று முறை, ‘தலாக்’ கூறி, விவாகரத்து செய்யும் நடைமுறை அமலில் இருந்தது. முத்தலாக் முறைக்கு தடை விதித்து, 2017ல், அவசர சட்டம் இயற்றப்பட்டது. இதை சட்டமாக்கும் வகையில் கொண்டு வரப்பட்ட மசோதா, லோக்சபாவில் நிறைவேறியது. ராஜ்யசபாவில் நிறைவேறவில்லை. இதனால், அவசர சட்டம் காலாவதியானது.

மக்களவை தேர்தலில், பா.ஜ., வெற்றி பெற்று, மீண்டும் ஆட்சி அமைத்தது. முத்தலாக் தடை சட்ட மசோதாவை நிறைவேற்ற முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இதன்படி, எதிர்க்கட்சிகளின் அமளிக்கு இடையே, கடந்த வாரம், லோக்சபாவில், மசோதா நிறைவேறியது. ராஜ்யசபாவிலும், முத்தலாக் தடை சட்ட மசோதாவை தேஜ கூட்டணி அரசு நிறைவேற்றியது.

முஸ்லிம் பெண்கள் கொண்டாட்டம்

முத்தலாக் மசோதா பார்லிமென்டில் நிறைவேற்றப்பட்டதை, நாட்டின் பல்வேறு பகுதிகளில் முஸ்லிம் பெண்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். உ.பி.,யின் லக்னோ, மீரட், வாரணாசி உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளில் முஸ்லிம் பெண்கள் கொண்டாடினர்.

அனைத்து பெண்களுக்கும் விதிகள் சமமாக இருக்க வேண்டும். மதம் சார்ந்த எந்த வேறுபாடும் இருக்கக்கூடாது. இதற்காக பொது சிவில் சட்டம் கொண்டு வர வேண்டும் என்று ஜீனத் என்ற பெண் கூறினார்.

முத்தலாக் தடை மசோதா சாத்தியமானதை கண்டு முஸ்லிம் பெண்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். இதன் மூலம் முத்தலாக் என்ற அச்சம் அவர்களின் மனதில் இருந்து அகழும் என சமூக ஆர்வலர் சையத் ஜரீன் கூறினார்.

முத்தலாக் மசோதா நிறைவேற்றப்பட்டதை, வாரணாசியில் இனிப்பு வழங்கியும், பட்டாசு வெடித்து உற்சாகமாக கொண்டாடினர்.