முதியோர் இல்லங்கள்

கனிகளிடம் பரிவு வளர்க்கும் பிஞ்சுகள்

வீட்டின் பெயரோ அன்னை இல்லம்; அன்னை இருப்பதோ முதியோர் இல்லம்.’ இது சென்னை ஆட்டோவின் முதுகில் படித்த வாசகம். இந்த நிலை மாற, இதோ ஒரு இளைஞர் கூட்டம். ஆம்! விவேகானந்தர் வழியில் தியாகமும் தொண்டும் தனது இரு கண்களாக் கொண்ட விவேகாmudhumaiனந்த வித்யாலயாவின் முன்னாள் மாணவர் கூட்டம்.

1999ம் ஆண்டு டிசம்பர் மாதம் தூய அன்னை சாரதா தேவி ஜெயந்தி அன்று, சென்னை நன்மங்கலம் முதியோர் இல்லத்திற்கு உணவு அளிக்கச் சென்ற குரோம்பேட்டை விவேகானந்த வித்யாலயா மாணவர்கள், அங்கிருந்த தாத்தா, பாட்டிகள் நிலை கண்டு இதயம் கனத்தனர். அன்று முதல் அந்த இல்லப் பணியில் தங்களை முழுமையாக இணைத்துக் கொண்டனர்.

தீபாவளித் அன்று தீபாவளி மருந்தளித்தல், தாத்தா பாட்டிகளோடு வெடி வெடித்துக் கொண்டாடுதல், புத்தாடை வழங்குதல், அவர்கள் விரும்பும் உணவைச் சமைத்து அளித்தல் என்று தொடங்கிய பணி பதினெட்டு ஆண்டுகளாகத் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

பொங்கல் விழா, புத்தாண்டு, எல்லாமே எங்களுக்கு எங்கள் தாத்தா பாட்டிகளோடுதான் என்கிறது, இந்த இளைஞர் கூட்டம். தாத்தா பாட்டிகளோடு பேசுதல், அரட்டை அடித்தல், கடிதம் எழுதுதல், தொலைபேசியில் குடும்பத்தாரோடு பேச வைத்தல், அவர்களிடம் உள்ள கலைகளைக் கற்றுக்கொள்ளுதல் என இவர்கள் பணி நீண்டுகொண்டே போகிறது.

இந்த இளைஞர்கள், தாங்கள் மட்டும் அன்றி தங்கள் பெற்றோர், குடும்பத்தாரோடு, பிறந்த நாள், மணநாள், எல்லாமே இங்குதான் கொண்டாடி மகிழ்கின்றனர். தாத்தா, பாட்டிகளைக் கலை நிகழ்ச்சிகளுக்கு அழைத்துச் செல்வது சிறப்புச் செய்தி.

‘உங்களுக்கு ஒரு தாத்தா, ஒரு பாட்டி ….. எங்களுக்கோ, நாற்பது தாத்தா பாட்டிகள்!’ என்று பெருமையுடன் கூறும் இந்த ‘சுஷாந்தி சேவா’ இளைஞர்கள், மனிதனை உருவாக்கும் கல்வி பெற்றவர்கள் என்பதில் ஐயம் இல்லை.