‛மீண்டும் ஓட்டுச்சீட்டு முறைக்கு மாற முடியாது’: 100% ஒப்புகை சீட்டுகளை எண்ணக்கோரிய மனுக்கள் தள்ளுபடி

லோக்சபாவுக்கு தேர்தல் நடந்து வருகிறது. தற்போது ஒரு தொகுதியில் 5 ஓட்டுச்சாவடிகளில் பதிவாகும் ஓட்டுகள், ‛விவிபாட்’ இயந்திரத்தில் பதிவாகும் ஒப்புகை சீட்டுகளுடன் ஒப்பிட்டு பார்க்கப்படுகிறது. அனைத்து ஓட்டுச்சாவடிகளில் பதிவாகும் ஒப்புகை சீட்டுகளையும் எண்ண உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, தீபாங்கர் தத்தா அமர்வு விசாரித்தது.

கடந்த 24ம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, தேர்தல் கமிஷனின் துணை தேர்தல் கமிஷனர் திலேஷ் குமார் வியாஸ் நேரில் ஆஜராகி அமர்வின் தொழில்நுட்ப கேள்விகளுக்கு பதிலளித்தார். இதனையடுத்து, உச்சநீதிமன்றம், தேர்தல்களை கட்டுப்படுத்தும் ஆணையம் அல்ல. அரசியலமைப்பு சட்ட அமைப்பான தேர்தல் கமிஷனின் செயல்பாடுகளில் உத்தரவிட முடியாது எனக்கூறி நீதிபதிகள் தீர்ப்பை ஒத்தி வைத்தனர். இந்நிலையில், இந்த வழக்கில் நீதிபதிகள் தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள் அனைத்து ஓட்டு உறுதிச்சீட்டுகளையும் எண்ணக்கோரி தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். மீண்டும் பழையபடி ஓட்டுச்சீட்டு முறைக்கு மாற வேண்டும் என்ற கோரிக்கையையும் நிராகரித்தனர்.

மேலும் தேர்தல் ஆணையத்திற்கு இரண்டு உத்தரவுகளை பிறப்பித்தனர். அதன்படி, ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் சின்னங்களை பொருத்திய பிறகு அதனை சீல் வைத்து பாதுகாக்க வேண்டும். சீல் வைக்கப்பட்ட ஓட்டுப்பதிவு இயந்திரங்களை ஓட்டுப்பதிவு முடிந்த பிறகு, குறைந்த பட்சம் 45 நாட்களுக்கு பாதுகாக்க வேண்டும்.
அடுத்ததாக, தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட 7 நாட்களுக்குள் சந்தேகம் இருந்தால் வேட்பாளர், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தை சரிபார்க்க கோரலாம் . சீல் வைக்கப்பட்ட இயந்திரத்தை தேர்தல் ஆணையத்தில் தொழில்நுட்ப வல்லுநர்களை வைத்து சரிபார்க்கும் வாய்ப்பை ஏற்படுத்தி தர வேண்டும். இயந்திரத்தை சரிபார்க்க கோரிக்கை வைத்த வேட்பாளரே முழு செலவையும் ஏற்க வேண்டும். இயந்திரம் பழுதடைந்தது உறுதி செய்யப்பட்டால், வேட்பாளரின் செலவுத்தொகை திருப்பி தரப்படும் என உத்தரவிட்டனர்.

தொடர்ந்து, மின்னணு ஓட்டு இயந்திரம், ஒப்புகை சீட்டு இயந்திரம் ஆகியவற்றின் நம்பகத்தன்மையை நீதிமன்றம் சரிபார்த்தது. தொழில்நுட்ப ரீதியாக மற்றும் அறிவியல் ரீதியாக என அனைத்து விசாரணையையும் நடத்தினோம். அறிவியல் பூர்வமான விமர்சனமே தேவை. கண்மூடித்தனமாக அனைத்தையும் சந்தேகிக்க முடியாது. மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம், ஒப்புகைச்சீட்டு இயந்திரம் ஆகியவற்றின் நம்பகத்தன்மையை உறுதி செய்கிறோம் எனவும் நீதிபதிகள் தங்களது உத்தரவில் தெரிவித்தனர்.