மாற்றம் காணும் வெற்றிக்கான இலக்கணம்

மிளிரும் புத்தொளி தொடரின் 3வது பேட்டி இன்று சனிக்கிழமையும் நாளை ஞாயிற்றுக் கிழமையுமாக இரண்டு பகுதிகளாக வெளிவரும். இந்த வாரம் நாம் சந்திக்கும் பிரமுகர் ஆர். வெங்கடேஷ். 50 வயது இளைஞர். தினமலர் நாளிதழின் வாராந்திர  இணைப்பு   வெளியீடான ‘பட்டம் ‘- இளைஞர் மலரின் பொறுப்பாசிரியர். கணையாழியில் 1988ல் துவங்கிய இவரின் இலக்கிய – ஊடக பணி அனுபவ முதிர்ச்சியுடனும் அதே நேரம் இளமைத் துள்ளலுடனும் நடை போட்டுக் கொண்டு புதிய புதிய இலக்குகளைத் தேடித் தேடிப் பயணித்துக் கொண்டிருக்கிறது. கொரானாவிற்குப் பிந்தைய இளைஞர் உலகம் எப்படி இருக்கும் என்று அறிய அவருடன் விஜயபாரதம் சார்பாக உரையாடுபவர் ம். ஆர். ஜம்புநாதன்.

உங்கள் பார்வையில் கொரானா, பாதிப்புகள்.

ஸ்பானிஷ் ஃப்ளூ என்பதை நாம் பார்த்ததில்லை, முதலாம் உலகப் போர், இரண்டாம் உலகப் போர் ஆகியவற்றையும் பார்த்ததில்லை. இப்போது இவையனைத்தின் ஒட்டுமொத்த வடிவமாக வந்து வடிந்திருக்கிறது, கொரோனா. தனிமனித வேட்கையினால் ஏற்பட்ட பாதிப்பு இது. இயற்கையை மதிக்காமல், அதைக் கபளீகரம் செய்ய முனைந்ததன் விளைவு இது. இதன் பாதிப்புகள், நம்மை முற்றிலும் மாற்றியமைக்கக் கூடியது. இனிமேல் நம்மால் பழைய மாதிரி இருக்க முடியாது. ஒவ்வொரு நூற்றாண்டிலும் ஏதேனும் ஒரு சம்பவம் நடைபெற்று, மனித நாகரிகத்தையே மாற்றியமைத்துவிடும். அப்படிப்பட்ட ஒரு திருப்புமுனை நிகழ்வே, கொரோனா.

கல்வித்துறையில் ஏற்படக்கூடிய மாற்றங்கள்?

இதுவரை இருந்த ஒருசில படிப்புகளுக்கான மவுசு குறைந்துபோய்விடும். இனி உலகத்தில் வெற்றி என்பதற்கான இலக்கணம் மாறிவிடும். மருத்துவ அறிவியல், பயோ டெக்னாலஜி, ஜெனடிக் இன்ஜினியரிங் போன்ற துறைகள் முன்னணிக்கு வரும். மருந்தாளுநர்கள், மருத்துவ ஆய்வாளர்கள், மருத்துவர்கள், மனநல ஆலோசகர்கள், துணை மருத்துவ பணிகள் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் கூடும். இன்னொரு புறம், தொலைவில் இருந்தே பணி செய்வதற்குத் தேவைப்படும் தொழில்நுட்பங்கள், தொலைதொடர்பு வசதிகள், பாடமுறைகள், அதைச் சோதிக்கும் டெஸ்டிங் (தேர்வு) முறைகள் ஆகியவை பலம் பெறும். ஹோம் ஸ்கூலிங் அதிகமாகலாம். பெற்றோரே ஆசிரியராகவும் இருக்கவேண்டிய கட்டாயம் ஏற்படும்.

உருவாகி வரும் நல்வாய்ப்புகள் என்று எவற்றைக் கருதுகிறீர்கள்?

வேலைக்குப் போகும் மனநிலை மாறும். சுயமாக ஏதேனும் செய்து, தனக்கான வருவாயைத் தேடிக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் பிறக்கும். தனித் திறன்களை வளர்த்துக்கொள்ள மாணவர்கள், இளைஞர் விரும்புவார்கள்.  புத்சாலித்தனத்துக்கு மீண்டும் மவுசு கூடும். அதனால், புதிய கண்டுபிடிப்புகள், முன்னேற்றங்கள் ஆகியவற்றில் கவனம் குவியும்.

(நாளை நிறைவுறும் )