முத்தன்ன வெண்நகையாய் முன்வந்தெதிரெழுந்தென்
அத்தன் ஆனந்தன் அமுதன் என்று அள்ளூறித்
தித்திக்கப் பேசுவாய் வந்துன் கடைதிறவாய்
பத்துடையீர் ஈசன் பழ அடியீர் பாங்குடையீர்
புத்தடியோம் புன்மைதீர்த்து ஆட்கொண்டாற் பொல்லாதோ
எத்தோ நின் அன்புடைமை எல்லோம் அறியோமோ
சித்தம் அழகியார் பாடாரோ நம் சிவனை
இத்தனையும் வேண்டும் எமக்கேலோர் எம்பாவாய்.
பாடல் விளக்கம்:
முத்துப் போன்ற ஒளியான பல்வரிசை உடையவளே ! எல்லார்க்கும் முன்பாகவே எழுந்திருந்து, “என் அத்தன், ஆனந்தன், அமுதன்” என்று இனிக்க இனிக்க எப்போதும் பேசுவாய் ! ஆனால் இன்று என்ன ஆயிற்று உனக்கு ? சிவநாமம் பாடி உன் வீட்டு வாசலில் வந்து நிற்கிறோம். கதவைத் திற ! என்று கூறுகிறார்கள் தோழியர்.
அதற்கு, துயிலணை மேல் படுத்திருப்பவள், “இறைவனின் அடியார்களாய் முதிர்ச்சி பெற்ற தோழியரே !நோன்புக்குப் புதியவளாகிய என்னுடைய குற்றத்தை நீக்கி என்னையும் அடியார் ஆக்கிக்கொண்டால் குற்றமா ?” என்கிறாள்.
அதற்குத்தோழியர், நீ இறைவன் பால் வைத்துள்ள அன்பு எங்களுக்குத் தெரியாதா என்ன ? உள்ளம் ஒழுங்கு பட உள்ளவர்கள் நம் சிவபெருமானைப் பாடாது போவாரா என்ன ? நேரம் வீணாக்காமல் சிவனைப்பாடித் தொழ எங்களுடன் வருவாயாக என்று கூறுகின்றனர்.
முத்தண்ண வெண்ணகையாய்: முத்து தமிழ் நாட்டின் சொத்து. தென்பாண்டி நாட்டாராம் மாணிக்க வாசகருக்கு முத்தின்
பால் நினைவு சென்று நிமலன் பால் பக்தி வைத்த நேரிழையாரின் பற்களின் வெண்மையினையும் வரிசையினையும் நினைந்தது. மனம் தூய்மையாய் இருப்பவர் சிவ பரம்பொருளை மனத்தினால் நினைத்து வாயினால் பாடி பின் பரவுவார் என்பது “சித்தம் அழகியார் பாடாரோ நம் சிவனை” என்னும் முத்தான தொடரால் சத்தாகப் பெற்றது. திருநீறு – ருத்திராக்ஷம்
அணிதல், சிவனைப் பாடுதல், சிவ கதை கேட்டல், ஆச்சார்யனுக்கு வழிபாடு செய்தல் போன்றவை சிவன் அடியவர்களின்
பத்து செயல்களில் சில. அத்தன் அமுதன் ஆனந்தன் என்று அள்ளூறித் தித்திக்கப் பேசுவார் முன்னிற்பவரான தோழிகளுடன் நோன்பு நோற்றலின் நிமித்தம் தூக்கம் துறந்து அவர்களுடன் இணைந்து சிவத்தொண்டுக்குத் தயாராக வேண்டும் என்பது கருத்து.
ஆர்.கே.