மஹாத்மா காந்தியின் அடிச்சுவடுகளை பின்பற்றும் மத்திய அரசு: ராஜ்நாத் சிங்

”பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், மத்திய பா.ஜ., அரசு செய்து வரும் அனைத்து பணிகளிலும், மஹாத்மா காந்தியின் சித்தாந்தங்கள் நிறைந்துள்ளன,” என, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். தலைநகர் புதுடில்லியில், மஹாத்மா காந்தி நினைவிடம் அருகே, காந்தி தர்ஷனில், அவரது 10 அடி உயர சிலையை, பா.ஜ., மூத்த தலைவரும், ராணுவ அமைச்சருமான ராஜ்நாத் சிங் நேற்று திறந்து வைத்தார்.

இதைத் தொடர்ந்து நடந்த நிகழ்ச்சியில், அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியதாவது:

வலிமையான, வளமான, துாய்மையான இந்தியாவை உருவாக்கியவர், மஹாத்மா காந்தி. அவரது அடிச்சுவடுகளை, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான, மத்திய பா.ஜ., அரசு பின்பற்றி வருகிறது. அமைதி, சமூக நல்லிணக்கம், ஒற்றுமை மற்றும் வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்ட மாற்றத்தை கொண்டு வருவதே எங்கள் சித்தாந்தம். ஜன்தன் வங்கிக் கணக்கு, ஆயுஷ்மான் பாரத், பிரதமரின் வீட்டு வசதி திட்டம், பிரதமரின் ஏழைகள் உணவு பாதுகாப்பு திட்டம், துாய்மை இந்தியா போன்ற திட்டங்கள், காந்தியின் யோசனைகளை அடிப்படையாகக் கொண்டவை.

ஒவ்வொரு இந்தியரின் இதயத்திலும், மஹாத்மா காந்தி வாழ்ந்து வருகிறார். மார்ட்டின் லுாதர் கிங், நெல்சன் மண்டேலா போன்ற சிறந்த தலைவர்கள், தங்கள் நாடுகளில் உள்ள மக்களின் முன்னேற்றத்திற்கான அவரது சிந்தனைகள் மற்றும் பார்வையிலிருந்து உத்வேகம் பெற்றனர்.

பிரதமர் மோடி தலைமையில், நாடு திட்டமிட்ட முன்னேற்றத்தில் கவனம் செலுத்தி வருகிறது. இதனால், உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதார நாடாக, நம் நாடு மாறியுள்ளது. மத்தியில், பா.ஜ., அரசு அமைந்ததில் இருந்து, நலிவடைந்த மக்களை உயர்த்துவது மட்டுமல்லாமல், அவர்களுக்கு அதிகாரம் அளித்து வருகிறது. அனைத்துத் தரப்பினரின் வளர்ச்சி தான், நாட்டின் பாதுகாப்பை வலுப்படுத்தும்.

மேலும், ஆண்களுக்கு இணையாக பெண்கள் அதிகாரம் பெறுவதையும், தேசத்தை கட்டமைப்பதில் அவர்களது பங்களிப்பையும் உறுதி செய்து வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.