மலைவாழ் மக்களால் பயணிக்க முடியாத சாலை – 75 ஆண்டுகளாக மனமிறங்காத அதிகாரிகள்

திருப்பத்தூர் அருகே தார்ச்சாலை அமைத்து தரக்கோரி கடந்த 75 ஆண்டுகளாக மனு அளித்து வரும் மலைவாழ் மக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படுவது எப்போது ? என அப்பகுதி மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டம் ஜவ்வாதுமலையில் புதூர்நாடு, புங்கம்பட்டு நாடு, நெல்லிவாசல் நாடு என 3 ஊராட்சிகள் உள்ளன. இந்த 3 ஊராட்சிகளிலும் 36 குக்கிராமங்கள் உள்ளன. இங்கு, 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். மலைவாழ் மக்களின் பிரதான தொழிலாக விவசாயமும், கால்நடை வளர்ப்பும் உள்ளது. நாடு சுதந்திரம் அடைந் ததில் இருந்து மலைவாழ் மக்களுக்கு சரி யான சாலை வசதிகள் இல்லை, மக்கள் வாழ்வதற்கான அடிப்படை வசதிகள் இல்லை என இங்குள்ளவர்கள் பல ஆண்டுகளாக குற்றஞ் சாட்டி வருகின்றனர். ஜவ்வாது மலை மட்டுமின்றி வாணியம்பாடி அடுத்த நெக்னாமலை, ஆம்பூர் அடுத்த நாயக்கனேரி மலை பகுதியிலும் சாலை வசதியை மேம்படுத்தித்தர வேண்டும் என பொதுமக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

வேலூர் மாவட்டத்தில் இருந்து திருப்பத்தூர் தனி மாவட்டமாக பிரிக்கப்பட்டபோதிலும், மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் இன்னும் செய்யப்படவில்லை என்ற ஆதங்கம் இம்மாவட்ட மக்களிடம் அதிகம் உள்ளத. இதற்கிடையே, ஜவ்வாதுமலைக்கு உட்பட்ட புதூர்நாடு ஊராட்சியில் உள்ள விளாங்குப்பம் கிராமத்துக்கு செல்ல சரியான சாலை வசதி இல்லாததால் கடந்த 75 ஆண்டுகளாக அங்குள்ள மலைவாழ் மக்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகி, கிராமத்தையே காலி செய்து வேறு இடத்துக்கு சென்று விடலாமா? என்ற யோசனையிலும் இருப்பதாக அங்கு வசிக்கும் மலைவாழ் மக்கள் கூறுகின்றனர்.

இது குறித்து விளாங்குப்பம் மலை கிராமத்தைச் சேர்ந்த மக்கள் கூறியதாவது, ‘‘விளாங்குப்பம் கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. விவசாயம், கால்நடை வளர்ப்பு, கூலி வேலை போன்ற தொழில்களில் நாங்கள் ஈடுபட்டு வருகிறோம். விளாங்குப்பம் முதல் வழுதலம்பட்டு வரை ஏறத்தாழ 4 கி.மீ., தொலைவுக்கு சரியான பாதை வசதி இல்லை.

கரடு, முரடான சாலையில் தான் நாங்கள் பல ஆண்டுகளாக பயணித்து வருகிறோம். பெரியவர்கள் எப்படியோ சமாளித்துக் கொள்கிறோம். ஆனால், பள்ளி மாணவர்கள் நிலைமை பரிதாபமாக உள்ளது. விளாங்குப்பம் கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி மட்டுமே உள்ளது. உயர் கல்விக்கு வழுதலம்பட்டு பகுதி யில் உள்ள அரசுப்பள்ளிக்கு செல்ல வேண்டும்.

கரடு, முரடாக உள்ள 4 கி.மீ., தொலைவுக்கு மாணவ, மாணவிகள் நடந்து சென்று படிக்க வேண்டிய நிலை உள்ளது. இரு சக்கர வாகனத்தில் செல்ல வசதி இல்லாத மாண வர்கள் காலை 6.30 மணிக்கே வீட்டில் இருந்து புறப்பட்டால் தான் குறித்த நேரத்தில் பள்ளிக்கு செல்ல முடியும். அதேபோல, பள்ளி முடிந்து மாணவர்கள் வீடு திரும்ப மாலை 6 மணி ஆகிவிடுகிறது.

நடந்து வந்த களைப்பில் வீட்டுக்கு வரும் மாணவர்கள் வீட்டு பாடங்களை செய்ய முடியாமலும், படிக்க முடியாமலும் அவதிக் குள்ளாகின்றனர். இந்த பிரச்சினையில் அடுத்த நாள் காலை அப்படியே பள்ளிக்கு செல்ல வேண்டியுள்ளது. இது மட்டுமின்றி, விளாங்குப்பம் கிராமத் தில் விவசாய நிலங்களில் பயிரிடப்படும் விளை பொருட்களை சந்தைப்படுத்த விவசாயிகள் படும் இன்னல்களுக்கு அளவே இல்லை.

விளை பொருட்களை ஏற்றிச்செல்ல வாடகை வாகனம் கூட எங்கள் மலை கிராமத்துக்கு வருவதில்லை. இரு சக்கர வாகனங்களிலும், மிதி வண்டிகளிலும் எடுத்துச் சென்று விற்பனை செய்து பிழைப்பு நடத்தி வருகிறோம். மேலும், எங்கள் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் யாருக்காவது உடல் நலம் பாதிக்கப்பட்டால் அவர்களை டோலி கட்டித்தான் எடுத்து செல்ல வேண்டிய நிலை உள்ளது.

கர்ப்பிணிகள் பிரசவத்துக்கு செல்லும் போது பல சிரமங்களை நாங்கள் கடந்த 75 ஆண்டுகளாக அனுபவித்து வருகிறோம். எங்கள் நிலையை எடுத்துக்கூறி மாவட்ட ஆட்சியர் அலுவலகம், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், உராட்சி ஒன்றிய அலுவலகம், சட்டப்பேரவை உறுப்பினர், நாடாளு மன்ற உறுப்பினர் என பலரிடம் மனு அளித்தும் எந்த ஒரு தீர்வும் இதுவரை காணப்படவில்லை.

சாலை வசதி கேட்டு போராட்டம் கூட நடத்தி விட்டோம். ஆனால், எங்கள் கிராமத்துக்கான சாலை வசதி இன்னுமும் ஏற்படுத்தி தராமல் இருப்பது வேதனையளிக்கிறது. எனவே, மாவட்ட நிர்வாகம் இதில் உடனடியாக தலையிட்டு விளாங்குப்பம் முதல் வழுதலம்பட்டு கிராமம் வரை தார்ச் சாலை அமைத்து தர தேவையான நிதியை ஒதுக்கீடு செய்து, அதற்கான பணிகளை தொடங்க வேண்டும்’’ என்றனர். இது தொடர்பாக அதிகாரிகளிடம் விசாரித்த போது, ‘ஜவ்வாது மலைப்பகுதியில் உள்ள ஊராட்சிகளில் சாலை வசதிகளை உள்ளாட்சி அமைப்பு நிர்வாகம் தான் மேற்கொள்ள வேண்டும். புதூர்நாடு ஊராட்சியில் பல்வேறு இடங்களில் சாலை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. விளாங் குப்பம் பகுதியிலும் ஆய்வு நடத்தி சாலை வசதி செய்து தர உள்ளாட்சி அமைப்பு நிர்வாகத்துக்கு அறிவுறுத்தப்படும்’’ என்றனர்.