மனு ஸ்மிருதி; உண்மைப் பொருளும் பரப்புரையின் உட்பொருளும்

இந்த ஜனநாயக யுகமே வியக்கும்வண்னம் பின்வருமாறு பரிந்துரை செய்வது யார்? சாட்சாத் ’மனுஸ்மிருதி’! “அனைத்து அறங்களுக்கும் வேதமே அடிப்படை. வேதத்தில் அறத்தைப் பற்றி முழுமையாகக் கூறப்பட்டுள்ளது. அதனால் அறத்தின் தத்துவத்தை அறிந்து கொள்ளக்கூடிய சாதனம் வேதமே.

வேதத்திலிருந்து அறத்திற்கு தொடர்புடைய எந்த விஷயத்திற்காவது தெளிவு கிடைக்கவில்லையென்றால் ஸ்மிருதியிலிருந்து அதைத் தெரிந்து கொள்ள முயற்சி எடுக்க வேண்டும். அதிலும் வெற்றி கிடைக்கவில்லையென்றால் சான்றோர்களின் செயல்களைப் பிரமாணமாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

குறிப்பிட்ட சூழ்நிலைகளில் சான்றோர்களால் எடுக்கப்பட்டுள்ள முடிவுகளைச் சரி என்று ஏற்றுக்கொண்டு, அதைப் பின்பற்ற வேண்டும். இதிலும் எங்காவது, ஏதாவது குறைபாடிருந்தால், இந்த நிலைமையில் எது சரி எது தவறு என்று தனது தூய்மையான உள்மனதைக் கேட்டு அதன்படி நடக்கவேண்டும்.”
இதோ அந்த நூலின் மூல வரிகள்: வேத: அகிலோ தர்மமூலம் ஸ்ம்ருத சீலே ச தத்விதாம்ஆசாரஸ்சைவ ஸாதூனாம் ஆத்மனஸ் துஷ்டி ரேவ ச.மனு ஸ்மிருதி 2.6. பெண்ணுக்கு மனு ஸ்மிருதி அளிக்கும் இடம் என்ன, பாருங்கள் :
“ஆசிரியரைவிட, ஆசார்யர் பத்து மடங்கு பூஜிக்கத் தகுந்தவர். ஆசார்யரை
விட நூறு மடங்கு பூஜிக்கத் தகுந்தவர் தந்தை. தந்தையைவிட ஆயிரம் மடங்கு பூஜிக்கத் தகுந்தவர் தாயார்”.இதோ அந்த நூலின் மூல வரிகள்:உபாத்யாயாந்த ச ஆசார்ய ஆசார்யாணாம் ச தம் பிதாஸஹஸ்ரம் து பித்ரூன் மாதா கௌரவேன அதிரிச்யதே.  மனு ஸ்மிருதி 2.145பெண்ணைப் போற்று. அது உன் குலத்துக்கே சுபிட்சம். சொல்வது யார்? கேளுங்கள்:“பெண்களுக்கு மதிப்பளிக்
கும் இடத்தில் தேவதைகள் வசிக்கின்றனர். அவர்களுக்கு மதிப்பளிக்கப்படாத இடங்களில் செய்யப்படும் அனைத்து (அறச்) செயல்களுக்கும் பலன் கிடைக்காது. பெண்கள் துயருற்றிருக்கும் குலம் அழிந்துவிடும். அவர்கள் துயரற்றிருந்தால் அந்தக் குலம் எப்பொழுதும் செழிப்புடன் இருக்கும்”.யத்ர நார்யஸ்து பூஜ்யந்தே          ரமந்தே தத்ர தேவதா:யத்ர ஏதாஸ்து ந பூஜ்யந்தே
ஸர்வா: தத்ராபலா: க்ரியா:    மனு ஸ்மிருதி 3.56.பெண்களுக்குப் பொருளாதாரப் பாதுகாப்பு அவசியம் என்று பேசும் அந்த நூல் இப்படி பெண்ணுக்கு சொத்துரிமையை ஆணித்தரமாகப்  பரிந்துரைக்கிறது: “சகோதரர்கள் தத்தமது சொத்தின் நான்கில் ஒருபங்கை தங்க
ளுடைய மணமாகாத சகோதரிகளுக்கு அளிக்கவேண்டும். அவ்வாறு செய்யாதவர்கள் கீழ்த்தரமானவர்களாக கருதப்படுவர்.” மனு ஸ்மிருதி 9.118.
மனு ஸ்மிருதி நூலில் உள்ள ஒரு செய்யுளை வைத்து  பெண்களுக்கு எதிரான பல கருத்துக்களை அந்த நூல்  பேசுவதாக சிலர் நிந்தனை செய்கின்றனர். அது இது:“குழந்தைப் பருவத்தில் தந்தையும், இளமைப் பருவத்தில் கணவனும், வயதான காலத்தில் மகனும் பெண்ணைக் காப்பாற்றுகின்றனர். பெண்ணுக்கு சுதந்திரமாக இருப்பதற்கான உரிமை இல்லை.” பிதா ரக்ஷதி கௌமாரே பர்த்தா ரக்ஷதி யௌவனே ரக்ஷந்தி ஸ்தவிரே புத்ரா ந ஸ்த்ரீ  வாதந்த்ர்யமர்ஹதி.
மனு ஸ்மிருதி 9.3. மேற்கண்ட செய்யுளின் இறுதி அடியை மட்டுமே வைத்துக்கொண்டு, பெண் வாழ்நாள் முழுவதும் ஆண்களின் அடிமையாகவே வாழவேண்டும் என்று மனுஸ்ம்ருதி வலியுறுத்து வதாக நிந்தனையாளர்கள் கூறுகின்றனர்.

அக்காலத்தில் பெண்களுக்கு நல்ல மதிப்பு அளிக்கப்பட்டுவந்தது. குடும்பத்திலுள்ள மற்ற உறுப்பினர்கள் அவர்களுடைய அறிவுரைகளைக் கேட்டு நடந்துவந்தனர். வீட்டில் நடக்கக்கூடிய அனைத்துச் செயல்களையும் பெண்களே நல்லபடியாக நிறைவேற்றி வந்தமையால் அவர்களின் தேவை குடும்பத்திற்கு இன்றியமையாததாக இருந்தது. ஆகையால் வெவ்வேறு நிலைகளில் அவர்களுக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டியது அவசியமாகுமென்று மேலே குறிப்பிட்டுள்ள செய்யுளுக்குப் பொருள் கூற வேண்டும். நிலைமைக்கும் சூழ்நிலைக்கும் ஏற்றவாறு தந்தை, கணவன், மகன் ஆகியவர்கள் முறையே மகள், மனைவி, தாயார் ஆகியோருக்கு சேவை செய்வது அவரவர்களின் பொறுப்பு. மகளுக்குத் தக்க கல்வி அளித்து தகுந்த நேரத்தில் அவளுக்கு மணம் செய்விக்க வேண்டியது தந்தையின் பொறுப்பு. அதன் பிறகு, அவளைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பை அவளுடைய கணவன் ஏற்றுக்கொள்ள வேண்டும். வயது முதிர்ந்த காலத்தில் அவளை நன்கு பராமரிப்பது மகனுடைய பொறுப்பு.

தந்தை, கணவன், மகன் முறையே மகள், மனைவி, தாயைப் பேணிக் காக்கும் பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டுமென்பதுதான் இந்தச் செய்யுளின் சரியான பொருள். பெண் பிறரைச் சார்ந்திருக்க வேண்டுமென்றோ அல்லது ஆண்கள் அவர்களைத் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் வைத்து தமது மேலாதிக்கத்தைச் செலுத்துவார்கள் என்பதோ அல்ல. அதனால், பெண், குழந்தைப் பருவத்தில் தந்தைக்கும் மணமான பிறகு கணவனுக்கும் வயது முதிர்ந்த காலத்தில் மகனுக்கும் அடிமையாகி வாழ்நாள் முழுவதும் மற்றவர்களைச் சார்ந்தே வாழ்கிறாளென்று இதற்கு விளக்கமளிக்கக்கூடாது.
ஆதாரம்: முனைவர் எம். ராம ஜோயிஸ் எழுதிய ’சாஸ்வத ஜீவன்மூல்ய’ (வாழ்க்கை விழுமியங்கள்). அவர் முன்னாள் முதன்மை நீதிபதி, பஞ்சாப் / ஹரியானா உயர்நீதிமன்றம்; முன்னாள்  ஆளுனர் பிஹார்-, ஜார்க்கண்ட்.