மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் ஜெப புத்தகத்துடன் வந்த கிறிஸ்துவர்கள்

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் மொபைல் போன் மற்றும் மாற்று மதம் தொடர்பான பொருட்களை கொண்டு செல்ல தடை உள்ளது. கோவிலுக்கு வெளியே மற்றும் பல இடங்களில் போலீசார் சோதனையிட்டே பக்தர்களை உள்ளே அனுமதிக்கின்றனர்.

நேற்று முன்தினம் காலை அம்மன் சன்னிதி அருகே வரிசையில் நின்றிருந்த பெண்கள் சிலர், கையடக்க புத்தகத்தை வைத்து, மெல்லிய குரலில் முனகிக் கொண்டிருந்தனர். அங்கிருந்த ஊழியர், அவர்களின் செயலில் சந்தேகப்பட்டு விசாரித்த போது, அவர்கள் கிறிஸ்துவர்கள் எனத் தெரிந்தது.

அவர்களை கோவில் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தார். அப்போது, அந்த பெண்கள், ‘சர்ச், பள்ளிவாசலுக்கு மாற்று மதத்தினர் செல்கின்றனர்… கோவிலுக்கு மாற்று மதத்தினர் வரக்கூடாதா’ என கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த அதிகாரிகள், ‘பிற மதத்தவருக்கு கோவிலில் அனுமதி கிடையாது என்பது காலம் காலமாக பின்பற்றும் நடைமுறை. அறநிலையத்துறை விதிப்படி அதை பின்பற்றி தான் ஆக வேண்டும்’ என்றனர். இதை தொடர்ந்து அவர்கள் வெளியே சென்றனர். போலீஸ் சோதனையை மீறி அவர்கள் எப்படி ஜெப புத்தகத்துடன் கோவிலுக்கு வந்தனர் என ஹிந்து அமைப்புகள் கேள்வி எழுப்பியுள்ளன.