மங்கலம் அருளும் ‘சோப க்ருது’

பனிரெண்டு ராசிகளில் சூரியன் ஒவ்வொரு ராசிக்கும் பெயர்ச்சி ஆகக்கூடிய காலங்களை தமிழில் ஒவ்வொரு மாதமாகக் குறிப்பிடுகிறோம். சூரிய பகவான் உச்சம் பெறக்கூடிய ராசியான மேஷத்தில் சூரியன் நுழையக்கூடிய காலத்தை சித்திரை மாதம் எனக் குறிப்பிடப்படுகிறது. அந்த வகையில் ஏப்ரல் மாதம் 14ம் தேதி தமிழ் புத்தாண்டான சித்திரை ஒன்று பிறக்க இருக்கிறது. இந்த ஆண்டு ‘சோப க்ருது’ தமிழ்ப் புத்தாண்டாகும். தொன்று தொட்டு கொண்டாடப்பட்டு வரும் இந்த புகழ்பெற்ற தமிழ்ப் புத்தாண்டு பல சுவையான தகவல்களை நமக்கு அள்ளியும் தருகிறது. இறைவன் இறைவி திருமணங்கள் புத்தாண்டில் பக்தர்களுக்கு கிடைத்திட்ட அருட்கொடைகள். திருவிடைமருதூரில் தேர் திருவிழா மற்றும்  மதுரையில் சுந்தரேஸ்வரருக்கு மீனாட்சி தேவியை மகிமையாக திருமணம் செய்வதும் புத்தாண்டின் சிறப்பம்சங்கள். பிரம்மதேவனால் பிரபஞ்சம் உருவான நாளாக தமிழ்ப் புத்தாண்டு தமிழ் சமூகத்தினர் சிலரிடையே  கொண்டாடப்படுகிறது. அதேசமயம், ‘நல்லிணக்கத்தின் இளவரசர்’ தேவேந்திரன் அமைதி மற்றும் மனநிறைவை உறுதிப்படுத்த இந்த நாளில் பூமிக்கு விஜயம் செய்தார் என்றும் சிலர் நம்புகிறார்கள். எனவே, இந்நாள் ஆண்டின் மிகவும் சாதகமான மற்றும் குறிப்பிடத்தக்க நாளாகக் கருதப்படுகிறது.

தமிழ் புத்தாண்டின் போது சமையல் பதார்த்தங்களில் மாங்காய் பச்சடி (வெல்லம், மிளகாய், வேப்பிலை, உப்பு, பூக்கள் மற்றும் புளி ஆகியவற்றின் கலவை), அப்பளம், பாயசம், தேங்காய்ப்பால், பருப்பு வடை, அவியல், தயிர், வேப்பம் பூ ரசம் போன்றவை நிச்சயம் இடம்பெறுகின்றன. இன்று பெரியவர்களின் ஸ்பெஷல் ஆசீர்வாதமாக குழந்தைகளுக்கு பரிசுகளும் பணமும் வழங்கப்படுகிறது. குடும்பத்தோடு பக்தர்கள் கோயில்களுக்குச் சென்று இறையருளை பெறுகிறார்கள்.

விஷுக்கனி அமைத்தல் என்பது பாரம்பரியமாக பல இல்லங்களில் புத்தாண்டின் மங்களகரமான முதல் பார்வை என்று அழைக்கப்படுகிறது. முந்தைய நாள் இரவே நகைகள், பழங்கள், வெற்றிலைகள், ரொக்கம், பூக்கள் நிரப்பப்பட்ட ஒரு தட்டு இவற்றை பெரிய கண்ணாடியில் தெரியும் படியாக அமைத்து  புத்தாண்டு முதல் நாள் இவை அனைத்தும் முதன் முதல் பார்க்கப்படுவதை உறுதிசெய்ய அலங்கரிக்கப்பட்டு வைக்கப்படுகிறது.  இந்த அமைப்பில் “விஷுக்  கனியை” முதலில் தரிசிப்பது வரவிருக்கும் ஆண்டில் செழிப்பையும் மகிழ்ச்சியையும் அழைக்கும் என்று நம்பப்படுகிறது. பலர் தங்களுடைய வீடுகளையும் சுற்றுப்புறங்களையும் பொடித்த அரிசி மாவால் செய்யப்பட்ட ‘கோலம்’ மூலம் அழகுபடுத்துகிறார்கள். இந்த கோலத்தின் நடுவில் ‘குத்துவிளக்கு’ ஒன்று வைக்கப்படுகிறது. இது ஒருவரின் வாழ்க்கையில் இருளை அகற்றுவதைக் குறிக்கிறது. அனைவரும் பளிச் எனப் பிரகாசமான புதிய ஆடைகளை அணிந்துகொண்டு, ‘புத்தாண்டு வாழ்த்துகள்’ என்று பரஸ்பரம் ஒருவரையொருவர் வாழ்த்திக்கொண்டு புதிய முயற்சிகள் அல்லது வணிகங்களைத் தொடங்குவதற்கு மிகவும் சாதகமான நாளாக இப்பொன்னாளைக் கருதுகின்றனர்.

அனைவருக்கும் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்.

ஆர். கிருஷ்ணமூர்த்தி