மக்கள் நேரடியாக பலன் பெறும் திட்டம் – காஷ்மீரில் துரிதப்படுத்துகிறது மத்திய அரசு

ஜம்மு – காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட நிலையில், தனிநபர் பயன்பெறும் திட்டங்களை விரைந்து செயல்படுத்த, மத்திய அரசு தீவிரமாக உள்ளது.

நம்பிக்கை:

ஜம்மு – காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து, கடந்தாண்டு, ஆக., 5ல் நீக்கப்பட்டது. ‘நாடு முழுவதும் நடைமுறையில் உள்ள சட்டங்கள், நலத் திட்டங்கள் ஜம்மு – காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்களுக்கு கிடைக்கும்’ என, தெரிவிக்கப்பட்டது. சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு, ஏழு மாதங்களாகியுள்ள நிலையில், மக்களின் நம்பிக்கையை பெறும் வகையில், நலத் திட்டங்களை விரைவுபடுத்த மத்திய அரசு தீவிரமாக உள்ளது.

இது குறித்து, மத்திய உள்துறை அமைச்சக உயரதிகாரி ஒருவர் கூறியதாவது: கேபினட் செயலர் ராஜிவ் கப்பா தலைமையில், சமீபத்தில் உயர்நிலை குழு கூட்டம் நடந்தது. இதில், மத்திய உள்துறை, ஊரக வளர்ச்சி துறை, சிறுபான்மையினர் நலத் துறை உள்பட பல்வேறு அமைச்சக செயலர்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் உயரதிகாரிகளும் பங்கேற்றனர்.

ஜம்மு – காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்களில், சாலை, போக்குவரத்து, மின்சாரம் உள்பட அனைத்து உள்கட்டமைப்பு நலத் திட்டங்கள் செயல்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. குறிப்பாக மக்களின் நம்பிக்கையை பெறும் வகையில், தனிநபர் நலத் திட்டங்களை மிக வேகமாக செயல்படுத்துவது குறித்து ஆராயப்பட்டது.

சிறப்பு அந்தஸ்து:

கல்வி உதவித் தொகை, அனைவருக்கும் வீடு உள்ளிட்ட திட்டங்கள் மூலம், மக்களுக்கு நேரடியாக பலன் கிடைக்கும். மேலும் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதால், தங்களுக்கு பலன் கிடைத்துள்ளது என்ற நம்பிக்கை மக்களுக்கு ஏற்படும். இந்த திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு என்பது ஒரு பிரச்னையே இல்லை. ஆனால், வேறு சில பிரச்னைகள் குறித்து அதிகாரிகள் தெரிவித்தனர். தற்போது, மிகவும் குறைந்த வேகம் கொண்ட இணையதள வசதியே அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், மக்களை சென்றடைவது சுலபமல்ல என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.

அரசின் புள்ளி விபரங்கள் படி, 2019 – 2020 நிதியாண்டில், கல்வி உதவித் தொகை கேட்டு, ஜம்மு – காஷ்மீரில் இருந்து, 5.17 லட்சம் விண்ணப்பங்கள் வந்தன. ஆனால், அதில், 8,294 பேருக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. அதேபோல், ஊரகப் பகுதிகளில், அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ், 62 ஆயிரத்து, 932 வீடுகள் கட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுஉள்ளது. ஆனால், இதுவரை, 36 ஆயிரத்து, 780 வீடுகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு, அதில், 122 மட்டுமே முடிக்கப்பட்டுள்ளன.

முடிவு:

இதற்கு முக்கிய காரணம், இந்த இரண்டு யூனியன் பிரதேசங்களில் உள்ள மக்கள் தொடர்பான முழுமையான தகவல்கள் அரசிடம் இல்லை. பல்வேறு துறைகளிடம் உள்ள புள்ளி விபரங்கள் மற்றும் மத்திய உள்துறை அமைச்சகத்திடம் உள்ள புள்ளி விபரங்கள் இடையே, பெரிய வித்தியாசம் உள்ளது. அதனால், உண்மையான பயனாளிகளுக்கு பலன் கிடைக்கும் வகையில், ஆன்லைன் மூலமாக மனுக்களை பெற்று, சரிபார்க்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

கல்வி உதவித் தொகை, அனைத்து வீடுகளுக்கும் சமையல், ‘காஸ்’ உள்ளிட்ட திட்டங்களை முழுமையாக செயல்படுத்த தேவையான நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.