மக்கள் தொகை மசோதா

பா.ஜ.கவின் நாடாளுமன்ற உறுப்பினர் ராகேஷ் சின்ஹா, கடந்த வெள்ளிக்கிழமை மாநிலங்களவையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மக்கள் தொகைக் கட்டுப்பாட்டு மசோதாவை தாக்கல் செய்தார். அன்று நிறுவனங்கள் சட்டத் திருத்த மசோதாவும் மக்கள்தொகை ஒழுங்குமுறை மசோதாவும் தாக்கச் செய்யப்பட்டு விவாதத்திற்குப் பிறகு ஒத்திவைக்கப்பட்டது. அப்போது பேசிய ராகேஷ் சின்ஹா, ‘பாரதத்தில் மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்துவது இந்த மசோதாவின் நோக்கம். தொடர்ந்து மக்கள் தொகை அதிகரித்து வருவது கவலை தரும் விஷயம். மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தாவிட்டால், 30 ஆண்டுகளுக்குப் பிறகு மரியாதைக்குரிய வாழ்க்கையை நடத்த போதுமான வளங்கள் பாரதத்தில் இருக்காது’ என்று விளக்கினார். இந்த மசோதா ஒரு தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் என்ற கொள்கையை அறிமுகப்படுத்த முன்மொழிகிறது. கல்விப் பலன்கள், வரிவிதிப்பு, வீட்டுக் கடன், இலவச சுகாதாரம், சிறந்த வேலை வாய்ப்புகள் போன்ற பல்வேறு நடவடிக்கைகளின் மூலம் அதை செயல்படுத்த ஊக்குவிக்கிறது. இரண்டு குழந்தை கொள்கையை கடைப்பிடிக்காத தம்பதிகள் தேர்தலில் போட்டியிடுவதை தடை செய்தல், அரசு வேலைகளுக்கு தகுதியின்மை போன்றவற்றையும் அறிமுகப்படுத்துவது குறித்தும் விவாதிக்கிறது.