மக்கள் சொத்தை அபகரிக்க முயற்சிக்கும் காங்கிரஸ்: பிரதமர் மோடி குற்றச்சாட்டு

மத்திய பிரதேசம் மாநிலம் மொரீனா பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: இங்குள்ள மக்கள் தேசத்தை முதன்மையாக கருதுபவர்களை எப்போதும் ஆதரிப்பர். ஒரு பிரச்னையில் இருந்து விடுபட்டு வெளியே வந்துவிட்டால், அதில் இருந்து விலகி இருக்க வேண்டும் என ம.பி., மக்களுக்கு தெரியும்.

காங்கிரஸ் கட்சி வளர்ச்சிக்கு எதிரான கட்சி. மத்திய பிரதேசத்திற்கு பா.ஜ., புதிய அடையாளத்தை அளித்துள்ளது. காங்கிரசின் இருண்ட காலகட்டத்தைப் பார்க்கும்போது, பா.ஜ., ஆட்சியில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியை அதிகம் அனுபவித்து வருகிறோம். பா.ஜ.,வுக்கு தேசத்தை விட எதுவும் பெரிது கிடையாது. ஆனால் காங்கிரசுக்கு குடும்பம்தான் முதலில்; நாட்டிற்காக அதிகபட்ச பங்களிப்பையும், கடின உழைப்பையும், அர்ப்பணிப்பையும் செய்பவரை பின்னால் நிறுத்த வேண்டும் என்பதே காங்கிரசின் கொள்கை. எனவே, பல ஆண்டுகளாக, ஒரே பதவி ஒரே ஓய்வூதியம் போன்ற ராணுவ வீரர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற காங்கிரஸ் அனுமதிக்கவில்லை. பா.ஜ., அரசு அமைந்தவுடன் ஒரே பதவி ஒரே ஓய்வூதியம் திட்டத்தை அமல்படுத்தினோம். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் பெண்களின் தாலிக்கு ஆபத்து ஏற்படும். நாட்டு மக்களின் சொத்துகளை எக்ஸ்ரே எடுத்து கணக்கிட காங்., திட்டமிட்டுள்ளது. மக்களின் சொத்துகளை பறித்து தங்கள் ஓட்டு வங்கிக்கு கொடுக்க திட்டமிட்டுள்ளது. பரம்பரை சொத்துவரி தொடர்பான உண்மைகள் வெளிச்சத்திற்கு வருகின்றன. முன்பெல்லாம் பெற்றோரின் சொத்துகளில் ஒரு பகுதி, குழந்தைகளுக்கு கொடுக்கப்பட்டு, ஒரு பகுதி அரசு எடுத்துக்கொள்ளும்.

ஆனால், சொத்துகள் அரசுக்குப் போய்விடக் கூடாது என்பதற்காக, அப்போதைய பிரதமர் ராஜிவ், பரம்பரை சொத்துவரியை ரத்து செய்தார். மறைந்த முன்னாள் பிரதமர் இந்திராவின் சொத்துகளை தக்கவைக்க அவர் இந்த வரியை ரத்து செய்தார். தங்கள் சொத்துகளை காப்பாற்றிவிட்டு தற்போது நாட்டு மக்களின் சொத்துகளை அபகரிக்க முயற்சிக்கின்றனர். ஆட்சிக்கு வந்தால் பரம்பரை சொத்து வரியை அமல்படுத்த காங்., திட்டமிட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.