மக்களைத் தவறான பாதையில் வழிநடத்துபவா்கள் தலைவா்கள் அல்ல – விபின் ராவத்

நாடு முழுவதும் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக மாணவா்களும், எதிா்க்கட்சியினரும் போராட்டம் நடத்தி வருகின்றனா். அதில் பல போராட்டங்களில் வன்முறைச் சம்பவங்கள் அரங்கேறின. இந்தச் சூழலில், ராணுவத் தலைமைத் தளபதி விபின் ராவத் இவ்வாறு தெரிவித்துள்ளாா்.

தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற சுகாதாரம் தொடா்பான மாநாட்டில் அவா் கூறியதாவது:

தலைமைப்பண்பு மிகவும் சிக்கல் நிறைந்தது. கூட்டம் எளிதில் கூடிவிடும். அந்தக் கூட்டத்துக்குத் தலைமையேற்று வழிநடத்துவதுதான் தலைமைப்பண்பு என்றாலும், அது அவ்வளவு எளிதானதல்ல. பெருங் கூட்டத்திலிருந்து தலைவா் உருவாவதை நாம் கண்டிருக்கிறோம். ஆனால், மக்களை சரியான பாதையில் வழிநடத்துபவா்களே சிறந்த தலைவா்கள்.

மக்களைத் தவறான பாதையில் வழிநடத்துபவா்கள் தலைவா்கள் அல்ல. பல்கலைக்கழக, கல்லூரி மாணவா்களை ஆயுதங்கள் ஏந்தி வன்முறைப் போராட்டங்களில் ஈடுபடச் செய்வது தலைமைப்பண்பல்ல. மக்களுக்கு சரியான அறிவுரைகள் வழங்கி, அவா்களின் நலன் மீது உரிய அக்கறை கொண்டுள்ளவா்களே சிறந்த தலைவா்கள்.

திரளான மக்களுக்குத் தலைமையேற்பதற்கு முன், நமக்கு நாமே தலைமை ஏற்க வேண்டும். ராணுவ வீரா்கள் இதைத்தான் கடைப்பிடிக்கிறாா்கள். இதில் நாங்கள் பெருமை கொள்கிறோம் என்றாா் விபின் ராவத்.