மகான்களின் வாழ்வில் ஓர் அற்புத ஆற்றல்!

சுவாமி விவேகானந்தர் ‘என்ஸைக்ளோபீடியா பிரிட்டானிகா’வின் (ஆங்கில கலைக் களஞ்சியம்) புதிய பதிப்பைப் படிக்க ஆரம்பித்திருந்தார். அவரது அறையில் அந்தக் கலைக் களஞ்சியத்தின் பெரிய தொகுதிகளைக் கண்ட சரத்சந்திரர் சுவாமிஜியிடம், அப்பப்பா! இத்தனை தொகுதிகளையும் படிக்க ஓர் ஆயுட்காலம் போதாதே” என்றார்.

நான் ஏற்கனவே பத்துத் தொகுதிகளைப் படித்து முடித்து விட்டேன். அவற்றிலிருந்து நீ என்ன வேண்டுமானாலும் கேள். நான் பதில் சொல்கிறேன்” என்றார் சுவாமிஜி.

சரத்தும் விடவில்லை. ஒவ்வொரு தொகுதியிலிருந்தும் விதவிதமாகக் கேள்வி கேட்டார். சுவாமிஜி உடனுக்குடன் பதில் கூறியது மட்டுமல்ல, நூலில் காணப்பட்ட அதே வாக்கியங்களை அப்படியே கூறினார்.

ஓ! இது மனித சக்திக்கு அப்பாற்பட்ட விஷயம்” என்று வியந்து கூறினார் சரத்.

இதில் வியப்பு என்ன இருக்கிறது? இதில் அற்புதம் எதுவும் இல்லை. இது மனித சக்திக்கு அப்பாற்பட்டதும் அன்று. முற்றிலும் பிரம்மச்சரியத்தைக் கடைப்பிடிக்கின்ற ஒருவன் ஒன்றை ஒருமுறை கேட்டால் போதும். படித்தால் போதும். அதனை அப்படியே ஒப்பிக்க அவனால் இயலும். எத்தனை வருடங்கள் கழிந்தாலும் அது மறக்காது.” என்றார் விவேகானந்தர்.