போலி ஹலால் சான்று அளித்த நான்கு பேர் அதிரடி கைது

உத்தர பிரதேசத்தில் போலி ஹலால் தர சான்றிதழ் அளித்த, ஹலால் கவுன்சிலைச் சேர்ந்த நான்கு பேரை, அம்மாநில சிறப்பு அதிரடி படையினர் கைது செய்தனர்.

உ.பி.,யில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இஸ்லாமிய ஷரியத் சட்டத்தின்படி, அசைவ உணவுப் பொருட்களுக்கு ஹலால் சான்று வழங்கப்படுகிறது. ஹலால் என்பது அரபு வார்த்தை. இது ஆங்கிலத்தில், ‘அனுமதிக்கத்தக்கது’ என்ற பொருளில் பயன்படுத்தப்படுகிறது.

இத்தகைய, ஹலால் தர சான்றுடன் கூடிய உணவுப் பொருட்களின் தயாரிப்பு, வினியோகம் மற்றும் விற்பனை ஆகியவற்றுக்கு உ.பி., அரசு கடந்த ஆண்டு நவம்பரில் தடை விதித்தது. இந்நிலையில், மத உணர்வை பயன்படுத்தி பொருட்களின் விற்பனையை அதிகரிக்க, போலி ஹலால் சான்றிதழை சில நிறுவனங்கள் வழங்கியுள்ளதாக புகார் எழுந்தது.

இதுதொடர்பாக லக்னோ போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

முதற்கட்ட விசாரணையில் மும்பையில் உள்ள ஹலால் கவுன்சில் ஆப் இந்தியா நிறுவனத்தைச் சேர்ந்த அதிகாரிகள், ஹலால் தர சான்றிதழ் தருவதற்கு, அதிக பணம் கேட்டு மிரட்டியதுடன், போலி சான்றிதழ் அளித்ததும் தெரியவந்தது. இதுதொடர்பாக அந்த அமைப்பைச் சேர்ந்த மவுலானா முதாசீர், ஹபிப் யூசுப் படேல், அன்வர் கான், முஹமது தாஹீர் ஆகிய நான்கு அதிகாரிகளை, உத்தர பிரதேச அரசின் சிறப்பு அதிரடிப் படையினர் மஹாராஷ்டிர மாநிலம் மும்பையில் கைது செய்தனர்.