ஆர்.எஸ்.எஸ் சாமான்யர்களையும் அசாதாரமானவர்களாக மாற்றுகிறது. அந்தவகையில் சாதாரண குடும்பத்தில் பிறந்து, சமூகப் பணியும் செய்து, தனது குடும்பத்தையும் திறம்பட நடத்தி, சங்க கார்யகர்த்தர்களுக்கு முன்னுதாரணமாக செயல்பட்ட, பு.ந.சங்கரராமன் ஜியைப் பற்றி இந்த இதழில் அறிவோம்…
தற்போது கரூர் மாவட்டத்தில் உள்ள குளித்தலையில் 1944 ஏப்ரல் 20 அன்று, பு.ம. நடராஜ சர்மா −- தைலம்மாள் தம்பதியினருக்கு மகனாக பிறந்தார், பு.ந.சங்கரராமன் ஜி. தந்தை அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் படித்தபோது, சிறை சென்ற விடுதலைப் போராளி.
சங்கரராமன் ஜி, துவக்கக் கல்வியை திருச்சியில் “ஸ்ரீ அமரபாரதி வித்யா பீடம்” என்ற ஸம்ஸ்கிருத பள்ளியில் பயின்றார். பிறகு, தெப்பக்குளம் பிஷப் ஹீபர் பள்ளியில் உயர்நிலைக் கல்வியைப் பெற்றார். பள்ளி இறுதித் தேர்வில் பள்ளியின் இரண்டாவது மாணவனாக வெற்றி பெற்று, ஸம்ஸ்கிருதம், ஹிந்தி, தமிழ், ஆங்கிலம் மொழிகளில் தேர்ந்தவராகவும், கணிதம், அறிவியல் பாடங்களில் ஞானம் உள்ளவராகவும் வெளியே வந்தார்.
அதன்பிறகு, 1959 −- 1962ல், அரியமங்கலம் சேஷசாயி தொழில்நுட்பக் கல்லூரியில் கட்டுமானப் பொறியியல் படித்துத் தேறினார். கல்லூரி காலத்தில் என்.சி.சி (ரைபில்ஸ்) பிரிவில் “சி” சான்றிதழ் பெற்றார். 1962ல், ராணுவ அதிகாரிகள் பயிற்சித் தேர்வில் தேறி, டெஹ்ராடூன் “இந்தியன் மிலிட்டரி அகாடமி”யில் பயிற்சி பெற்றார்.
பாரத நாட்டின் மீது சீன ஆக்கிரமிப்புத் துவங்கியபோது, 1962ல், லடாக் (லத்தாக் -சரியான உச்சரிப்பு) போர்முனையில் விமானம் மூலம் “ஏர் டிராப்” செய்யப்பட்டார். அந்தப் போர்முனையில்தான், ராணுவத்திற்கு உதவி செய்ய வந்த ஆர்.எஸ்.எஸ் ஸ்வயம்சேவகர்கள் தொடர்பு ஏற்பட்டது. சிறுவயது முதலே தேசபக்தர்கள் சூழலில் வளர்ந்ததால், மஹாத்மா காந்தி சொன்ன “தேசிய புனர் நிர்மாண இயக்கம்” இதுதான் என்று, அவர் மனதில் ஆழமாகப் பதிந்தது. போர் முடிந்தபிறகு, வீரர்களை ஊக்குவிக்கும் பொருட்டு பல அரசியல் தலைவர்கள், கலைஞர்கள் வந்தபோது ஜனசங்கத்தின் விஜய்குமார் மல்ஹோத்ரா ஆற்றிய உரை, பழகிய முறை இவரைக் கவர்ந்தன.
1963ல், குடியரசு தின அணிவகுப்பைக் காண அகாடமியில் இருந்த இவரது குழுவினர் அனைவரும் டெல்லி அழைத்துச் செல்லப்பட்டனர். அப்போது விஜய்குமார் மல்ஹோத்ரா மூலம், டெல்லியில் ஒரு ஷாகாவில் 1963 ஜனவரி 23 அன்று சங்கத்தில் அறிமுகம் ஆனார். 1963ல், பாரத குடியரசுதின அணிவகுப்பில், ஸ்வயம்சேவகர்கள் சங்க சீருடையில் வாத்தியங்கள் முழங்க, கலந்து கொண்டதைப் பார்த்தார். அகாடமிக்குத் திரும்பி ராணுவப் பயிற்சிகளில் மூழ்கி இருந்தாலும், இவரது மனநிலை ஆர்.எஸ்.எஸ் பற்றியே இருந்தது.
போர்முனை, அகாடமி அனுபவங்களுடன் வெளிவந்த சங்கரராமன் ஜி, தமிழக பொதுப்பணித்துறை பொறியாளராக மாநிலம் முழுவதும் பல பெரிய நீர்ப்பாசன திட்டங்களில் வேலை செய்து வந்தார். 1970ல், திருச்சியில் காவிரிப்பாசனப் பகுதிக்கு மாற்றலாகி வந்தார். கோவிந்தன் ஜி, உத்தமராஜ் ஜி, இராம கோபாலன் ஜி, சூரி ஜி ஆகியோர் சங்க வழிமுறைகளைப் பயிற்றுவித்தனர்.
1975ல், “அவசரநிலை பிரகடனம்” இந்திரா காந்தியால் வெளியிடப்பட்டது. அவசரநிலை காலம் முழுவதும், அரியலூர் நிலநீர் ஆராய்ச்சியில் தலைமறைவாக இருந்தபடியே, சங்கம் கொடுத்த பணிகளை கோவிந்தன் ஜி மற்றும் உத்தமராஜ் ஜி குறிப்புகள்படி செய்தார். அவசர நிலை முடிவுக்கு வந்ததும், கம்பரசன்பேட்டையில் ஷாகா துவங்கினார். மைசூரில் உள்ள தமிழ்நாடு பொதுப்பணித்துறை பிரிவுக்கு மாற்றல் வந்தது. மைசூரில் சங்க காரியாலயத்தில் தங்கியபடி பொதுப்பணித்துறை பணி, சங்க காரியாலய சாயம் ஷாகா முக்கியசிக்ஷக் என இரண்டையும் செய்து வந்தார். பிறகு, சென்னைக்கு மாற்றல் வந்தது.
சென்னையில் இருந்தபோது, தினசரி அலுவலக நேரம் போக, மீதிநேரம் இந்து முன்னணி அலுவலகப் பொறுப்பு. இராம கோபாலன் ஜி, பாஷாவால் வெட்டப்பட்டு உயிர் மீண்ட பிறகு, அவரது குறிப்புகள்படி 1986 மே அன்று, விருப்ப ஓய்வு பெற்று, இந்து முன்னணி அலுவலகம் முழுநேர செயலாளரானார். டாக்டர்ஜி நூற்றாண்டில், தாலுகா பௌத்திக் பொறுப்பில் இருந்து கொண்டே, ஆண்டு முழுவதும் விஸ்தாரக்காக திருச்சி தாலுகா முழுவதும் உள்ள ஒவ்வொரு வீட்டுக்கும், பிரசுரங்களை விநியோகம் செய்து தொடர்பு கொண்டார்.
1992ல், அயோத்தி ராமர் கோயில் கரசேவைக்குப் பிறகு, சங்கத்தின் மீது தடை விதிக்கப்பட்டபோது, தடை நீங்கும் வரை விஸ்தாரக்காக இருந்தார். அதன் பிறகு, இதிஹாஸ சங்கலன சமிதி, பாரதிய கிசான் சங்கம் ஆகிய அமைப்புகளுக்கு அனுப்பப்பட்டார். பிறகு, இந்து முன்னணி நடத்திய தனுஷ்கோடி “ராமரக்ஷா மஹா மந்திர ஜப யக்ஞம்” பணிக்காக, சிறிது காலம் மீண்டும் இந்து முன்னணிக்கு அனுப்பப்பட்டார். குருஜி நூற்றாண்டில், “குருஜி ஸமக்ர” என்ற குருஜியின் எழுத்துத் தொகுப்பு பன்னிரண்டு பாகங்களையும், தமிழில் மொழி பெயர்த்துக் கொண்டு வந்த பணியில், பாகம் இரண்டு முழுவதையும் தமிழில் மொழி பெயர்த்தார். பன்னிரண்டு பாகங்களும் முழுமையாக வெளிவருவதற்காக, ஆறு மாதங்கள் சென்னை சக்தி காரியாலயத்தில், “குருஜி சிந்தனைக் களஞ்சியம்” வெற்றிகரமாக வெளிவரும் பணியில் இருந்தார்.
1981 டிசம்பரில் பிராத்மிக், 1982ல் சேலத்தில் முதலாம் ஆண்டு பண்புப்பயிற்சி முகாம், 1988ல் கர்நாடகா சென்னனஹள்ளியில் இரண்டாம் ஆண்டு பண்புப்பயிற்சி முகாம், 1989ல் மூன்றாவது ஆண்டு பண்புப்பயிற்சி முகாம் முடித்தார்.
1983 மார்ச் 24ல், ஆனந்தி அம்மாளை திருமணம் செய்தார் பு.ந.சங்கரராமன் ஜி, கரசேவைக்கும், 1992 கன்னியாகுமரி − காஷ்மீர் ஏக்தா யாத்திரைக்கும், தமிழ் நாட்டில் இருந்து சென்ற ஒரே பெண்மணி, இவரது மனைவி தான். ராஷ்டிர சேவிகா சமிதியில் திருச்சி ஜில்லா செயலாளர், திருச்சி கோட்டச் செயலாளர், பிராந்த சம்பர்க பிரமுக் என பல பொறுப்புகளில் சமிதியில் இருந்துள்ளார். இவர்கள் இருவரும் தற்போது வீட்டிலேயே இருந்து, இயன்றளவில் சங்க, சமிதிப் பணிகளைச் செய்து வருகின்றனர்.
தொடர்ந்து சங்கப்பணி செய்துவரும் பு.ந.சங்கரராமன் ஜி, நம் அனைவருக்கும் ஒரு முன்னுதாரணமான ஸ்வயம்சேவக்காக திகழ்கிறார்.