ஐந்து நாடுகளில் பிரதமர் பஞ்சப்பாட்டு பாடாதே, பாரதம் போடுது வீறுநடை

சமீபத்தில் காங்கிரஸ் தலைவர் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். பத்திரிகையாளர் சந்திப்பில் கேள்வியை எதிர்கொள்ள முடியாமல் மோடி சங்கடப்படுகிறார் என்று குறை கூறியிருந்தார். மேலும் அவர் சில இடங்களில் பேசும்போது பாரதத்தை பொருளாதாரப் புயல் நெருங்குவதாகவும், தொடர்ந்து பாரதியர்கள் இங்கே பதட்டத்தில் இருக்க மோடியோ வெளிநாடுகளில் என்ஜாய் செய்து கொண்டிருக்கிறார் என்றார். பிரதமரின் 5 நாடுகள் சுற்றுப் பயணத்தில் பாரதம் முதலீடுகளை செழுமையாக அறுவடை செய்திருக்கிற விவரத்தை விவரித்துள்ளார் அரசியல் விமர்சகர் சுபா சதீஷ்குமார்.

 

ஐக்கிய அரபு அமீரகம், நெதர்லாந்து, ஸ்வீடன், நார்வே, இத்தாலி ஆகிய ஐந்து நாடுகளுக்கு பாரத பிரதமர் அரசு முறைப் பயணம் மேற்கொண்டதன் முக்கிய நோக்கம், சர்வதேச வர்த்தகம், எரிசக்தி பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு தொடர்பான ஒப்பந்தங்கள் மேற்கொள்வதற்கே. இந்தப் பயணங்களின் மூலம் கணிசமான முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன.
ஐக்கிய அரபு அமீரகத்தில் கையெழுத்தான ஆறு முக்கிய ஒப்பந்தங்களின் மூலம் பல்லாயிரம் கோடி டாலர் எரிசக்தி பாதுகாப்பு, கனிமங்கள் தொடர்பான துறைகளுக்கு ஈர்க்கப்பட்டுள்ளது. நமது நாட்டின் ஏற்றுமதியாளர்களுக்கு பெரும் வாய்ப்புகளை உருவாக்கும் பயணமாக இது அமைந்தது. ஐக்கிய அரபு அமீரகத்தில் பெட்ரோலிய இருப்புகள், நீண்ட கால எல்.பி.ஜி விநியோகம், பாதுகாப்பு, கப்பல் போக்குவரத்து ஆகியவற்றை உள்ளடங்கிய தொடர்ச்சியான ஒப்பந்தங்களில் பாரதம் கையெழுத்திட்டது. அமெரிக்காவின் அதிக வரி விதிப்பு பாரதத்திற்கு எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தாதவாறு, இந்த ஒப்பந்தங்கள் அமைந்தன.
அபுதாபி, ஐந்து பில்லியன் அமெரிக்க டாலர்களை நமது நாட்டில் முதலீடு செய்வதாக உறுதி அளித்துள்ளது. இது அமெரிக்காவுக்கு, பாரதம் விடுத்த மறைமுக எச்சரிக்கையாக சர்வதேச வல்லுநர்கள் கருதுகின்றனர். பாரத பிரதமரின் நெதர்லாந்து பயணத்தின் போது, பாதுகாப்பு, முக்கிய கனிமங்கள், உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக 17 புதிய ஒப்பந்தங்களில் நமது நாடு கையெழுத்திட்டது.
பாரதப் பிரதமரின் விமானத்திற்கு ஸ்வீடன் போர் விமானங்கள் பாதுகாப்புடன் பறந்து வந்து கொடுத்த பிரம்மாண்ட வரவேற்பை உலகமே அதிசயமாக பார்த்தது. மோடி அவர்களின் ஸ்வீடன் பயணத்தின் போது, அந்த நாட்டுப் பிரதமர் உல்ப் கிரஸ் தெர்ஷன் விமான நிலையத்திற்கு வந்து அவரை வரவேற்றார். இந்த இரு நிகழ்வுகளும் இரு நாடுகளுக்கு இடையேயான இணக்கம், பரஸ்பர மரியாதை உள்ளிட்ட வளர்ந்து வரும் உத்திசார் உறவுகளை பிரதிபலித்தன.
பாரத வம்சாவளியினரின் உற்சாக வரவேற்பு உலகையே கவர்ந்தது. அரிய சேவைகள் செய்யும் ஒரு தேசத்தின் தலைவருக்கு, ஸ்வீடன் அரசினால் வழங்கப்படும் உயரிய விருதான “ராயல் ஆர்டர் ஆப் த போலார் ஸ்டார் கவுண்ட்டர் கிராண்ட் கிராஸ்” பாரத பிரதமருக்கு அந்த நாட்டு பட்டத்து இளவரசி விக்டோரியா அவர்கள் வழங்கி கௌரவித்தார். சர்வதேச அளவில் பாரத பிரதமர் 32 விருதுகள் பெற்றுள்ளார். 40 ஆண்டுகளுக்குப் பிறகு நார்வே செல்லும் பாரத பிரதமர் என்ற முறையில் நரேந்திர மோடி பயணம் மேற்கொண்டார். பிரதமரின் நார்வே பயணம் மிகவும் சுவாரசியமாகவும், பயங்கரவாத எதிர்ப்பில் இரட்டை நிலைப்பாடு கூடாது என்ற உன்னத கோட்பாட்டை உலகிற்கு உணர்த்துவதாக இருந்தது. தொடர்ந்து பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில், நார்வேயுடன் தோளோடு தோள் நின்றதாக பாரத பிரதமர் குறிப்பிட்டார். இவருடைய ராஜதந்திரம் எதிர்காலத்திற்கு தயாரான கூட்டாண்மைகளை உருவாக்குவதில், ஒரு சிறந்த பாடமாக பார்க்கப்படுகிறது.
தொடர்ந்து ஐஸ்லாந்து, பின்லாந்து, டென்மார்க் தலைவர்களுடன் பயனுள்ள சந்திப்புகளையும் பாரதப் பிரதமர் நிகழ்த்தினார். நார்வே நாட்டிற்கு சென்றபோது தூய்மையான எரிசக்தி, பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் திறன், கடல்வள பொருளாதாரம், மாசுப்படுத்தாத கப்பல் போக்குவரத்து, டிஜிட்டல் தொழில்நுட்பம், விண்வெளி போன்ற துறைகளில் ஒத்துழைப்பை விரிவு படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது. நார்வேயின் உயரிய விருதும் பாரத பிரதமருக்கு வழங்கப்பட்டது. “ரோமுக்கு, நல்வரவு நண்பரே” என்னும் இத்தாலி நாட்டு பிரதமரின் வார்த்தைகளுடன், பாரதப் பிரதமரின் இத்தாலி பயணம் இனிதே தொடங்கியது 2025 ஆம் ஆண்டு இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தகம் 16.77 பில்லியன் டாலரை எட்டிய நிலையில், இத்தாலியில் இருந்து பாரதத்திற்கு மொத்த நேரடி வெளிநாட்டு முதலீடு 3.6 பில்லியன் டாலராக பதிவு செய்யப்பட்டுள்ளது.
இத்தனை விஷயங்கள் பாரத பிரதமர் நரேந்திர மோடி பயணத்தில் ஏற்பட்டிருக்க, சுதந்திரத்திற்குப் பின்பு இன்று வரை ஊழலை மட்டுமே (நிலக்கரி சுரங்க ஊழல், காமன்வெல்த் ஊழல், லாரி ஊழல், போபர்ஸ் ஊழல்) அடிப்படையாகக் கொண்டு இயங்கும் காங்கிரசின் ராகுல் காந்தி போன்றோரால் இப்படி ஒரு மலிவான பார்வை மட்டுமே பார்க்க முடியும். ஒருவகையில் ராகுல் காந்தி சொன்னது உண்மைதான். எப்படி?
பாரத பிரதமர் நரேந்திர மோடி என்ஜாய் செய்கிறார் -− நமது நாடு முன்னேறுகிறது,
பாரத பிரதமர் என்ஜாய் − செய்கிறார் – முதலீடுகளை ஈர்க்கிறது,
பாரத பிரதமர் என்ஜாய் செய்கிறார் – தொழில் வளர்ச்சி பெறுகிறது,
பாரத பிரதமர் என்ஜாய் செய்கிறார் – உலகமே நமது நாட்டின் உயர்வை உற்று நோக்குகிறது,
பாரத பிரதமர் என்ஜாய் செய்கிறார் – நமது பொருளாதாரம் உலகிலேயே மூன்றாம் இடத்தை நோக்கி முன்னேறுகிறது,
பாரத பிரதமர் என்ஜாய் செய்கிறார் – நமது வளர்ச்சியைக் கண்டு அமெரிக்காவே வியக்கிறது,
பாரத பிரதமர் என்ஜாய் செய்கிறார் – நமது நாட்டின் மதிப்பு உலகத்தரத்தில் சர்வதேச அளவில் உயர்கிறது.

கட்டுரையாளர் : அரசியல் விமர்சகர்

 

பரிசுப் பொருட்கள் பறைசாற்றிய பாரத நுண்கலைப் பெருமிதம்

 

இத்தாலியின் ரோம் நகருக்கு சென்றபோது, அந்நாட்டு பிரதமர் ஜார்ஜியா மெலோனிக்கு, பிரத்யேகமாக தேர்ந்தெடுக்கப்பட்ட 2 பட்டு சால்வைகளை (முகா பட்டு சால்வை, ஷிருய் லில்லி பட்டு சால்வை) மோடி பரிசாக வழங்கினார்.
அசாமின் ‘தங்கப் பட்டு’ என்று அழைக்கப்படும் முகா பட்டு, பிரம்மபுத்ரா பள்ளத்தாக்கின் அரிய வகை கைத்தறி ஜவுளியாகும். செயற்கை சாயங்கள் ஏதுமின்றி, அதன் இயற்கையான தங்க நிறம், நீடித்து உழைக்கும் தன்மை, சூழலுக்கு பாதிப்பில்லா தயாரிப்பு ஆகியவற்றுக்காக இது மிகவும் மதிக்கப்படுகிறது.
இத்தாலிய அதிபர் செர்ஜியோ மட்டரெல்லாவுக்கு, பாரம்பரிய பளிங்கு வேலைப்பாடு கொண்ட பெட்டியுடன் இந்திய இசை மேதைகளான பண்டிட் பீம்சென் ஜோஷி, எம்.எஸ்.சுப்புலட்சுமி ஆகியோரின் இசை குறுந்தகடுகளையும் பிரதமர் மோடி பரிசாக வழங்கினார்.
ஐ.நா. சபையின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் இயக்குநர் ஜெனரல் கியூ டோங்யுவிடம் இந்தியாவின் மிகச்சிறந்த தானியங்களின் தொகுப்பை பிரதமர் மோடி வழங்கினார். இதில் கேரளா வின் பாலக்காடு சிவப்பு அரிசி, மேற்கு வங்கத்தின் கோவிந்தோபோக் அரிசி, இந்தோ-கங்கை சமவெளியின் பாஸ்மதி அரிசி, அசாம் பிரம்மபுத்ரா பள்ளத்தாக்கின் ஜோஹா அரிசி, உ.பி.யின் காலாநமக் அரிசி ஆகியவை இடம்பெற்றிருந்தன.
நார்வே ராணி சோன்ஜாவுக்கு ஒடிசாவின் பழமையான கலை வடிவங்களில் ஒன்றான பனை ஓலை பட்டசித்ரா வழங்கப்பட்டது. நார்வே பிரதமர் ஜோனாஸ் கர் ஸ்டோருக்கு சிக்கிம் மாநிலத்தின் ஆர்க்கிட் ஓவியங்கள் மற்றும் ஆர்க்கிட் பேப்பர் வெயிட்டுகள் பரிசாக வழங்கப்பட்டன.
நெதர்லாந்து பிரதமர் ராப் ஜெட்டனுக்கு மீன் வடிவத்தைக் கொண்ட மதுபானி ஓவியத்தை பிரதமர் மோடி பரிசாக வழங்கினார். நெதர்லாந்து மன்னர் வில்லெம்-அலெக்சாண்டருக்கு ஜெய்ப்பூரின் நீல மண்பாண்டத்தை பரிசாக வழங்கினார்.
இது குவார்ட்ஸ் தூள், கண்ணாடி ஆகியவற்றிலிருந்து தயாரிக்கப்படும் தனித்துவமான வடிவமைப்புகளுக்கு பெயர் பெற்ற ஒரு புவிசார் குறியீடு பெற்ற கைவினைப் பொருளாகும். நெதர்லாந்து ராணி மாக்சிமாவுக்கு ராஜஸ்தானின் மீனாகாரி மற்றும் குந்தன் வேலைப்பாடு கொண்ட கம்மல்கள் பரிசாக வழங்கப்பட்டன.

 

மோடியால் உலகப் புகழ் பெற்ற பார்லே நிறுவனத்தின் மெலோடி சாக்லேட்

இத்தாலி பயணத்தின்போது பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டுப் பிரதமர் ஜார்ஜியா மெலோனிக்கு இந்தியாவில் பிரபலமான பார்லே (Parle) நிறுவனத்தின் ‘மெலோடி’ (Melody) சாக்லேட்டைப் பரிசளித்தார். இந்த வீடியோவை மெலோனி தனது எக்ஸ் தளத்தில் வெளியிட, வேகமாக வைரலானது.
மெலோடி சாக்லேட் வாங்குபவர்களின் எண்ணிக்கை பெருமளவு அதிகரித்தது. இதன் விளைவாக இந்த சாக்லேட்டுக்க உலகம் முழுவதும் அதிகளவில் தேவை ஏற்பட்டு மொத்தமும் விற்றுத் தீர்ந்தது
இதுபற்றிய பேசிய பார்லே நிறுவனத்தின் துணைத் தலைவர் மயங்க் ஷா, “நாடு முழுவதும் மெலோடி சாக்லேட்டுக்கான தேவை அதிகரித்துள்ளது. அதனால் விநியோகஸ்தர்களிடம் கூடுதல் ஸ்டாக் அனுப்புமாறு கூறியுள்ளோம்” என்றார். இந்நிலையில் உற்பத்தியையும் அதிகரிக்கவும் திட்டமுள்ளதாகக்
கூறினார். இதனால் நமது நாட்டின்
தயாரிப்பு உலக அளவில் பேசும் பொருளானது. 