பொற்றாமரை நிகழ்ச்சியில் வெளிப்பட்ட கலை, இலக்கிய ஆழமும் அர்த்தமும்

பொற்றாமரை கலை இலக்கிய அரங்கத்தின் 13-ஆம் ஆண்டு தொடக்க விழா, ஜூன் 26 தி.நகர் வாணி மகாலில் நடைபெற்றது.

காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திர சரஸ்வதி

கலைகள் தர்ம பிரச்சாரம் செய்யப் பயன்படுகின்றன. அதன் மூலம் பொது ஒழுங்கு உண்டாகிறது. வேதத்திலே சுருக்கமாகச் சொல்லப்பட்ட நன்னெறிகளை விரிவாக எடுத்துரைப்பவை புராணங்கள். கட்டளை இடாமல், மனதிற்கு இதமான வகையில், வார்த்தை பொருள் அலங்காரங்களுடன் நண்பனின் வாக்கைப் போலே அவை அமைக்கப்படுவதால் சம்ஸ்க்ருதத்தில் இதை மித்ர சம்ஹிதா என்று சொல்வார்கள்.

சேத்துப்பட்டு சங்கராலயத்தில் மடத்தின் மூலமாகத் தமிழ்ப் பாடசாலை நடைபெற்று வருகிறது. பிரதி ஞாயிறு அங்கு பழந்தமிழ் இலக்கியங்கள் இலவசமாகப் பயிற்றுவிக்கப்படுகின்றன. சீர்காழி வேத பாடசாலையில் சிவாச்சாரியார்கள் தேவாரமும் படித்துவருகிறார்கள். நல்ல விஷயங்களுக்கு மொழி பேதமில்லை. விதைகளைப் பாதுகாத்தால், விழுதுகள் அதிகரிக்கும்.

ஆசியுரையைத் தொடர்ந்து முதுபெரும் தமிழ்ப் பேரறிஞர் தஞ்சை தி.ந.இராமச்சந்திரன், தமிழ்க்கடல் சேலம் இரா.ருக்மணி, மரபுக் கவிஞர் கோவை மரபின் மைந்தன் முத்தையா ஆகிய மூவருக்கும் இந்த ஹேவிளம்பி ஆண்டின் பொற்றாமரை விருது வழங்கப்பட்டது.

தெ. ஞானசுந்தரம் விருது பெறுவோர் அறிமுகம் செய்துவைத்தார்.

தி.ந.இராமச்சந்திரன்

ஜாதிகள் இல்லையடி பாப்பா என பாரதி சொல்லவே இல்லை. ஜாதிப் பெருமைகள் இல்லையடி என்று தான் பாடினார். நாலு குலங்கள் அமைத்தான் அதை நாசமுறப் புரிந்தனர் மூடர் என்று குறிப்பிட்டவர் பாரதி.

சைவ சமயத்தில் மட்டுமே பார்த்தோமானால் சேக்கிழார் பெருமானின் பெருமை பேசுகிறார் உமாபதியார்.  திருஞான சம்பந்தர், மெய்கண்டார், ஆறுமுக நாவலர் ஆகியோர் வேளாள மரபினர். அவரது சிஷ்யர்களோ அந்தணரான அப்பூதி அடிகள், சகல ஆகம அருள் நந்தி சிவம், காசிவாசி செந்திநாத ஐயர் ஆகியோர். மகா வித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையின் சிஷ்யர் தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாத ஐயர். எனவே ஜாதிகளை அழிக்கத் தேவையில்லை. ஜாதிகளைக் கடந்தால் போதும் பக்தர்களாகிவிடுவோம். அப்படி அனைவரும் பக்தர்களாகிட வேண்டி தெய்வங்களாக இங்கிருக்கும் பெரியவர்கள் ஆசி வழங்க வேண்டும்.

பர்வீன் சுல்தானா

கலை, இலக்கியம் எதுவாகிலும் மனிதனை இப்போதிருக்கும் நிலையில் இருந்து அடுத்த உயர் நிலைக்கு இட்டுச் செல்ல வேண்டும். அதற்குப் பண்டைய தமிழ் இலக்கியங்கள் அவசியம். ஆதலால் கலை, இலக்கியத்தை முன்னெடுப்பது நம் கடமை என அழகுபட உரைத்தார். பண்பட்ட மனத்தின் மகத்துவத்தை உணர்த்தும் வகையில் கம்ப ராமாயணம், மகாபாரதம் இரண்டிலிருந்தும் மேற்கோள் காட்டினார்.

வெ.இறையன்பு

பல வண்ணங்களின் கலவையே வெண்மை நிறம் என்பது போல அனைத்து விதமான அறிவுகளையும் உள்ளடக்கியது கல்வி. எனவே தான் கல்விக்கு அதிபதியாக விளங்குகிற கலை மகள் வெண் தாமரையில் வீற்றிருக்கிறாள் போலும்.

நாகரிகம் வெளியிலிருந்தும் வரலாம். ஆனால் பண்பாடு நம்மிலிருந்து வெளிப்படுவது. நம் பாரத நாடு உன்னத நிலைக்கு வர வேண்டுமானால் நமது பண்பாடு, கலை, இலக்கியங்கள் நமது மூச்சாக இருக்க வேண்டும். அப்போது தான் நாமும் மேன்மை பெறுவோம்.

சுவாமி விவேகானந்தர் கூறிய படி, மனிதனைப் புனிதனாக்கும் கலைப் பணியில் ஈடுபட்டுள்ள பொற்றாமரையின் தொண்டு சிறக்க வேண்டும் என வாழ்த்தி ராமகிருஷ்ண மடத் துறவி சுவாமி விமூர்த்தானந்தர் அவர்கள் அருளுரை வழங்கினார். நிறைவாக பொற்றாமரைத் தலைவர் திரு இல.கணேசன் அவர்களது தலைமை உரைக்குப் பின் நாட்டு வாழ்த்துடன் நிகழ்ச்சி நிறைவுற்றது.

அமுதசுரபி ஆசிரியர் திருப்பூர் கிருஷ்ணன், விஜயபாரதம் ஆசிரியர் ம.வீரபாகு, ஒரே நாடு ஆசிரியர் நம்பி.நாராயணன் உள்ளிட்ட பத்திரிகைத் துறையினரும், பல்வேறு முக்கியப் பிரமுகர்களும், பொது மக்களும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

தொடக்கத்தில் கலைமகன் இறை வணக்கம் பாட, அதைத் தொடர்ந்து பார்வதி பாலசுப்ரமணியம் குழுவினரின் நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது.

One thought on “பொற்றாமரை நிகழ்ச்சியில் வெளிப்பட்ட கலை, இலக்கிய ஆழமும் அர்த்தமும்

  1. நான் பொற்றாமரை நிகழ்ச்சிகளில் பங்கேற்க விரும்புகிறேன். விஜய் பாரதம்?

Comments are closed.