‘பொது மன்னிப்பு கேளுங்கள்’: புரி பீடாதிபதிக்கு துறவி பதிலடி

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த புரி மடத்தின் பீடாதிபதி சுவாமி நிச்சலானந்தா சரஸ்வதி, மக்களிடம் பொது மன்னிப்பு கேட்க வேண்டும் என துறவி அதோக் ஷாஜானந்தா தியோ தீர்த் தெரிவித்துள்ளார்.

உத்தர பிரதேசத்தின் அயோத்தியில், ஸ்ரீராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை சார்பில், பிரமாண்ட ராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. இதன் கும்பாபிஷேக விழா, வரும் 22ம் தேதி நடக்கவுள்ளது. விழா ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகின்றன.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று, ராமர் சிலையை பிரதிஷ்டை செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. இதற்கு ஒடிசாவின் புரி பீடாதிபதி சுவாமி நிச்சலானந்தா சரஸ்வதி தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

சமீபத்தில் இதுகுறித்து அவர் கூறுகையில், ”பிரதமர் மோடி, கடவுள் ராமர் சிலையைத் தொட்டு பிரதிஷ்டை செய்யும்போது நான் அங்கு நின்று கைகளை தட்டி கொண்டாட வேண்டுமா! இது நம் கலாசாரத்துக்கு எதிரானது. ”இதனால் நான் அங்கு செல்லப்போவது இல்லை. ராமர் சிலை பிரதிஷ்டையில் கண்ணியம் மீறப்படுவதை என்னால் பார்க்க முடியாது. நான் அந்நிகழ்வை பார்க்க விரும்பவில்லை,” என்றார்.

இதற்கு பல்வேறு தரப்பினரும் தங்கள் கண்டனங்களை தெரிவித்து வரும் நிலையில், துறவி அதோக் ஷாஜானந்த் தியோ தீர்த் கூறியதாவது: சுவாமி நிச்சலானந்த சரஸ்வதி தன் இழிவான பேச்சால், 140 கோடி இந்திய மக்களையும் அவமானப்படுத்தி உள்ளார். எனவே, அவர், பொதுமக்களிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும்.

உலகிலேயே மிகவும் பிரபலமான தலைவர்களில் ஒருவர் நம் பிரதமர் நரேந்திர மோடி. நம் பண்டைய கால வரலாற்றில், பழங்கால கோவில்களை கட்டமைத்த அரசர்களே, இதர நிகழ்ச்சிகளையும் முன்னின்று நடத்துவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேபோல், நம் நாட்டு மக்களின் பிரதிநிதியாக, பிரதமர் மோடி உள்ளார். எனவே, அவர் முன்னின்று அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் செய்வதே சரியானது. இவ்வாறு அவர் கூறினார்.