பெரியசாமிக்கு எதிரான வழக்கில் வீடுகளுக்கு ‘நோட்டீஸ்’ அனுப்ப உத்தரவு

கடந்த 2006 – 11ம் ஆண்டில், தி.மு.க., அமைச்சரவையில், வீட்டுவசதித் துறை அமைச்சராக ஐ.பெரியசாமி பதவி வகித்தார்.

சென்னையில் முகப்பேர் ஏரி திட்டத்தின் கீழ், வீட்டுவசதி வாரிய நிலத்தை, 74 லட்சம் ரூபாய் விலையில், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பாதுகாவலராக இருந்த இன்ஸ்பெக்டர் கணேசன் என்பவருக்கு ஒதுக்கியதில் முறைகேடு நடந்ததாக, பெரியசாமி உள்ளிட்டோருக்கு எதிராக, 2012ல் லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிந்தது.

இவ்வழக்கில் இருந்து அமைச்சர் பெரியசாமியை விடுவித்து, மார்ச்சில் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை மறுஆய்வு செய்யும் வகையில், தாமாக முன்வந்து, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், வழக்கை விசாரணைக்கு எடுத்தார். அதேபோல், அ.தி.மு.க., ஆட்சியில் சமூக நலத்துறை அமைச்சராக இருந்த வளர்மதியை விடுவித்த வழக்கும் மறு ஆய்வு செய்யும் விதமாக விசாரணைக்கு எடுக்கப்பட்டது.

இந்த இரு வழக்குகளும், நீதிபதி ஜெயச்சந்திரன் முன், நேற்று விசாரணைக்கு வந்தன. வளர்மதி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், விசாரணையை தள்ளி வைக்க கோரினார். அதை ஏற்று, விசாரணையை, நவம்பர் 6க்கு தள்ளி வைத்து, அன்று கட்டாயம் வாதாட வேண்டும் என நீதிபதி அறிவுறுத்தினார். அமைச்சர் பெரியசாமி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தங்களுக்கு நோட்டீஸ் வரவில்லை என கூறியதால், திண்டுக்கல் மற்றும் சென்னையில் உள்ள அவரது வீடுகளின் முகவரிக்கு நோட்டீஸ் அனுப்ப, நீதிபதி உத்தரவிட்டார்.

விசாரணையை, நவம்பர் 1க்கு தள்ளி வைத்தார்.