பாரதத்தின் மிகப்பழமையான மற்றும் உலகப் புகழ்பெற்ற ஆன்மிக விழாக்களில் ஒன்றாக ஒடிசா மாநிலம் பூரியில் நடைபெறும் ஜெகந்நாதர் ரத யாத்திரை (தேர் திருவிழா) கருதப்படுகிறது. தமிழகத்தில் திருவாரூர் ஆழித்தேர், ஸ்ரீரங்கம், காஞ்சிபுரம், பழனி போன்ற கோயில்களின் தேரோட்டங்கள் பக்தர்களின் பேரன்பையும், இறை நம்பிக்கையையும் வெளிப்படுத்துவது போலவே, பூரி ஜெகந்நாதர் தேரோட்டமும் ஆண்டுதோறும் கோடிக்கணக்கான பக்தர்களை ஒரே இடத்தில் ஒன்றிணைக்கும் ஆன்மிகப் பெருவிழாவாகும். இறைவன் கோயிலுக்குள் மட்டும் இல்லாமல், தன்னை தரிசிக்க முடியாத மக்களைத் தேடி வீதிக்கு வருகிறார் என்ற தத்துவத்தை, இந்த ரத யாத்திரை உலகிற்கு எடுத்துக்காட்டுகிறது.
“ஜெகந்நாதர்” என்ற பெயருக்கு “உலகத்தின் நாதன்” அல்லது “பிரபஞ்சத்தின் தலைவர்” என்று பொருள். “ஜகத்” என்பது உலகம், “நாத்” என்பது தலைவர் அல்லது இறைவன். வைணவ மரபுகளின்படி, ஜெகந்நாதர் ஸ்ரீகிருஷ்ணரின் திருவுருவமாகவே வழிபடப்படுகிறார். அவருடன் அவரது அண்ணன் பலபத்ரர் (பலராமர்) மற்றும் சகோதரி சுபத்ரா தேவி எழுந்தருளியுள்ளனர். ஒடிசா மரபில் ஜெகந்நாதர், கிருஷ்ணர், மகாவிஷ்ணு மற்றும் பரம்பொருள் ஆகிய அனைத்தையும் ஒருங்கிணைக்கும் தெய்வீக வடிவமாக வழிபடப்படுகிறார்.
பலபத்ரர் வலிமை, தர்மம், விவசாயம், நேர்மை ஆகியவற்றின் அடையாளமாகக் கருதப்படுகிறார். அதனால் அவரது சிலை வெண்மை நிறத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. சுபத்ரா தேவி மகாபாரதத்தில் அர்ஜுனனின் மனைவியாகவும், அபிமன்யுவின் தாயாகவும் அறியப்படுகிறார். பூரி கோயிலின் மற்றொரு தனிச்சிறப்பு என்னவென்றால், பெரும்பாலான ஹிந்து கோயில்களில் ஆண் தெய்வமே நடுவில் இருப்பது வழக்கம். ஆனால் பூரியில் மட்டும் சகோதரர்களான ஜெகந்நாதர் மற்றும் பலபத்ரருக்கு நடுவில் சுபத்ரா தேவி அமர்ந்திருக்கிறார். இது குடும்ப ஒற்றுமை, அண்ணன் – தங்கை பாசம், பாதுகாப்பு மற்றும் பெண்களுக்கு அளிக்கப்படும் மரியாதையின் அடையாளமாக கருதப்படுகிறது.
பூரி ஜெகந்நாதர் சிலைகளின் உருவமும் மிகவும் வித்தியாசமானது. பெரிய வட்டமான கண்கள், முழுமையடையாத கைகள், கால்கள் கொண்ட மரச் சிலைகளாக இவை காணப்படுகின்றன. இதற்குப் பின்னால் அழகான வரலாறும், புராண கதைகளும் உள்ளன.
அதாவது, “நீலமாதவர்” என்ற விஷ்ணு வடிவத்தை வழிபட்ட மன்னன் இந்திரத்யும்னனுக்கு, கடலில் மிதந்து வரும் புனித வேப்ப மரத்தால் புதிய சிலைகளை உருவாக்குமாறு மகாவிஷ்ணு கனவில் தோன்றி கூறியுள்ளார். அப்படி ஒரு மரத்தை கொண்டு வந்த பிறகு, “விஸ்வகர்மா” வயதான தச்சர் வேடத்தில் வந்து, 21 நாட்கள் யாரும் கதவைத் திறக்கக் கூடாது என்ற நிபந்தனையுடன் சிலைகளை செதுக்கத் தொடங்கினார். ஆனால், வெகு நாட்களாக அந்த அறையில் சத்தமே வரவில்லை என மன்னன் பொறுமை இழந்து கதவைத் திறந்ததால், விஸ்வகர்மா மறைந்து விட்டார். இதனால் சிலைகளின் கைகளும், கால்களும் முழுமையடையாமல் போனதாக புராணக் கதைகள் சொல்கின்றன. இப்படியான சிலைகளே இறைவனின் விருப்பமாக கருதி, அதே சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன.
இதனுடன் தொடர்புடைய மற்றொரு பக்தி மரபுக் கதை கிருஷ்ணரின் இறுதி அவதாரத்தோடு இணைக்கப்படுகிறது. மகாபாரதப் போருக்குப் பிறகு, ஸ்ரீகிருஷ்ணர் காட்டில் ஓய்வெடுத்து கொண்டிருந்தபோது, அவரது பாதத்தை மானின் காதாக நினைத்த வேடன் தவறுதலாக அம்பு எய்தினான். பின்னர் உண்மையை அறிந்த வேடன் கதறி மன்னிப்பு கேட்டான். கிருஷ்ணர் தனது உடலை தகனம் செய்யும்படி கூறினார். உடல் முழுவதும் எரிந்தபோதும், அவரது இதயம் மட்டும் எரியவில்லை. அந்த புனித இதயத்தை மரப்பெட்டியில் வைத்து கடலில் விட்டபோது, பின்னர் அது விஸ்வகர்மாவிடம் கிடைத்து, ஜெகந்நாதர் சிலைக்குள் ‘பிரம்ம பதார்த்தம்’ என்ற தெய்வீக சக்தியாக நிறுவப்பட்டதாக, பூரி ஜெகந்நாத ஸ்தல வரலாறு தெரிவிக்கின்றது.
தமிழகத்தில் பெரும்பாலான கோயில்களில், 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடைபெறுவது போல, பூரி ஜெகந்நாதர் கோயிலிலும் 12 அல்லது 19 ஆண்டுகளுக்கு ஒருமுறை “நபகலேபரா” என்ற சிறப்பு சடங்கு நடைபெறுகிறது. அந்த நேரத்தில் புதிய புனித வேப்ப மரம் தேர்வு செய்யப்பட்டு, புதிய தெய்வ சிலைகள் உருவாக்கப்படுகின்றன. பின்னர் பழைய சிலையில் இருக்கும் பிரம்ம பதார்த்தம் (கிருஷ்ணரின் இதயம்) மிகுந்த ரகசியத்துடன் புதிய சிலைகளுக்கு மாற்றப்படுகிறது. இது உலகிலேயே மிகவும் அரிய ஆன்மிக மரபுகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
ரத யாத்திரையின் போது ஜெகந்நாதர், பலபத்ரர், சுபத்ரா ஆகியோர் முறையே நந்திகோஷா, தாலத்வஜா, தர்பதலனா என்ற மூன்று தனித்தனி தேர்களில் எழுந்தருளுகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் இந்த தேர்கள் புதிதாக மரத்தால் கட்டப்படுவது குறிப்பிடத்தக்கது. பல தலைமுறைகளாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பாரம்பரிய தச்சர்களே, இந்தப் பணியை மேற்கொள்கின்றனர். லட்சக்கணக்கான பக்தர்கள் ஒன்றாக சேர்ந்து, இந்த தேர்களை வடம் பிடித்து இழுக்கின்றனர். இந்த தேரை இழுப்பது மிகப்பெரிய புண்ணியமாக கருதப்படுகிறது. மேலும், பூரி மன்னர் தங்கபிடி போட்ட துடைப்பத்தால் தேரை சுத்தம் செய்யும் “சேரா பஹாரா” என்ற சடங்கு, “இறைவன் முன் அனைவரும் சமம்” என்ற உயர்ந்த தத்துவத்தை எடுத்துரைக்கிறது.
பூரி கோயிலின் மற்றொரு சிறப்பு அதன் மகாபிரசாதம். உலகின் மிகப்பெரிய கோயில் சமையலறைகளில் ஒன்றாக விளங்கும் இங்கு, மண்பானைகளில் பாரம்பரிய முறையில் சமைக்கப்படும் 56 வகையான “சப்பன் போக்” நைவேத்தியம் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது. ஆயிரக்கணக்கானோர் சாப்பிட்டாலும், மகாபிரசாதம் குறையாது என்பது பக்தர்களின் உறுதியான நம்பிக்கையாகும்.தமிழர்களைப் பொறுத்தவரை, பூரி ஜெகந்நாதர் தேரோட்டம் என்பது ஒடிசாவின் ஒரு திருவிழா மட்டுமல்ல.
தமிழகத்தின் தேரோட்ட மரபு, வைணவ பக்தி இயக்கம், ஆழ்வார்களின் இறைப்பணி, “இறைவன் மக்களைத் தேடி வருகிறார்” என்ற ஆன்மிக தத்துவம் ஆகியவற்றோடு ஆழமாக இணைந்திருக்கும் தேசிய ஆன்மிக பாரம்பரியமாகும். அதனால்தான் பூரி ஜெகந்நாதர் ரதயாத்திரை, நமது நாட்டின் மத ஒற்றுமை, கலாச்சார பாரம்பரியம் மற்றும் பக்தியின் உச்சமாக உலகம் முழுவதும் போற்றப்படுகிறது.
கட்டுரையாளர்: அன்னபூர்ணா பிள்ளை