சேவா பஸ்தி மக்களை ஒன்றிணைத்து மதமாற்றத்தை தடுக்க பல வழிகளை மேற்கொண்ட உன்னி கிருஷ்ணன் ஜி

ஆர்.எஸ்.எஸ் சாமான்யர்களையும், அசாதாரமானவர்களாக மாற்றுகிறது அந்தவகையில் சாதாரண குடும்பத்து நபர், சங்கத் தொடர்பின் மூலம் சமூகப் பணியும் செய்து, தனது குடும்பத்தையும் திறம்பட நடத்தி, எளிய வாழ்க்கை வாழ்ந்து, சங்க கார்யகர்த்தர்களுக்கு முன்னுதாரணமாக செயல்பட்ட, உன்னி கிருஷ்ணன் ஜியைப் பற்றி இந்த இதழில் அறிவோம்…

 

கேரளத்தில் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள பலம்பாலக்கோட்டில், ராமன் குட்டி – தேவகி அம்மாளுக்கு மகனாக, 1947 ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஏழாம் தேதி பிறந்தார், உன்னி கிருஷ்ணன் ஜி. தந்தை ஐந்து வயதிலேயே காலமானதால், விவசாயத் தொழிலில் கூலி வேலை செய்து, மொத்த குடும்பப் பொறுப்பையும் தாயார் தேவகி அம்மாள் கவனித்துக் கொண்டார். உன்னிகிருஷ்ணன் ஜி, பலம்பாலக்கோட்டில் உள்ள சங்கரா மெமோரியல் மேல்நிலைப் பள்ளியில், தனது பள்ளிப் படிப்பைத் தொடங்கினார். குடும்ப சூழ்நிலை காரணமாக, மூன்றாவது வரை மட்டுமே படித்தார். தாய்க்கு உதவியாக அவரும் வயல் வேலைக்கு சென்றார்.
கால ஓட்டத்தில் தையல் தொழிலைக் கற்று, கோயம்புத்தூரில் உள்ள ஒரு தையல் கடையில் வேலைக்கு சேர்ந்தார். அங்கு ரவி என்ற நண்பர் மூலமாக, உன்னி கிருஷ்ணன் ஜிக்கு சங்க அறிமுகம் கிடைத்தது. அவருடன் சேர்ந்து, மாரண்ண கௌண்டர் பள்ளியில், 1973 ஆம் ஆண்டு யுகாதி விழாவில் கலந்து கொண்டார். அன்றைய யுகாதி நிகழ்ச்சியில் இருந்த சிவராம் ஜி, உன்னி ஜியை பார்த்தவுடனே “நீ தினமும் ஷாகா வர வேண்டும்” என கூறினார். அவரது பேச்சைக் கேட்டு உந்துதல் அடைந்து, சங்கத்தைப் பற்றி தெரிந்து கொண்டு, தொடர்ந்து ஷாகா வந்தார், உன்னி ஜி.
1973ல், கோவையில் நடைபெற்ற சங்கப் பயிற்சி முகாமில், ரக்ஷக் (பாதுகாப்பு) துறையில் இருந்தார், உன்னி ஜி. அப்போது அந்த முகாமை பார்வையிட புகழ் பெற்ற விஞ்ஞானி ஜி.டி. நாயுடு வந்திருந்தார். அவரை யாரென அடையாளம் தெரியாத உன்னி ஜி, அவரை உள்ளே அனுமதிக்கவில்லை. பிரவேசிகா (அடையாள அட்டை) கார்ட் இருந்தால் மட்டுமே அனுமதிக்க முடியும் என கூறினார்.
இதனைப் பார்த்துக் கொண்டிருந்த சூரி ஜி, அந்த இடத்திற்கு வந்து உன்னி ஜியிடம் அவர்தான் இந்த இடத்தின் உரிமையாளர், அவரை அனுமதிக்கவும் என கூறினார். இதனைக் கண்ட ஜி.டி நாயுடு, இதுதான் ஸ்வயம்சேவகத் தன்மை. யாராக இருந்தாலும் ஒரே மாதிரி நடந்து கொள்வதுதான், சரியான அணுகுமுறை என கூறி, உன்னி ஜியை மனதாரப் பாராட்டினார், ஜி.டி. நாயுடு. இந்த சம்பவம் தனது வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு நிகழ்வு என நம்மிடம் பகிர்ந்து கொண்டார், உன்னி கிருஷ்ணன் ஜி.
குருஜியை நேரில் சந்தித்து உரையாடியது தனது வாழ்க்கையில் மறக்க முடியாத நிகழ்வு என தெரிவித்தார். உன்னி ஜியிடம் உனது பெயர் என்ன? என ஆங்கிலத்தில் கேட்டார் குருஜி. தனது தாய்மொழியான மலையாளத்தில், ஆங்கிலம் தெரியாது என பதிலளித்தார். உடனே குருஜி, அதே கேள்வியை மலையாளம் மொழியில் கேட்டார். பல மொழி அறிந்த குருஜியை நேரில் பார்த்தது, தனது வாழ்நாள் பாக்கியம் என தெரிவித்தார், உன்னி ஜி,
1974ல், முதலாம் ஆண்டு சங்கப் பயிற்சி முகாமை முடித்தார் உன்னி ஜி. 1975ல், அன்றைய பிரதமர் இந்திரா காந்தி அறிவித்த ‘எமர்ஜென்சி’ கொடுந்துயரத்தால், மக்கள் பெரிதும் அவதியுற்றனர். அதனை எதிர்த்து கோவையில் உள்ள புகழ்பெற்ற கோனியம்மன் கோயில் அருகே சத்தியாகிரகப் போராட்டம் நடந்தது. அதில் கலந்து கொண்டு, கோயம்புத்தூரில் உள்ள உக்கடம் காவல் நிலையத்தில் அடைக்கப்பட்டார். விடுதலை செய்யப்பட்ட பிறகு, மீண்டும் கோவை பூ மார்க்கெட் அருகில் எமர்ஜென்சியை எதிர்த்து சத்தியாகிரகம் போராட்டத்தில் கலந்து கொண்டார்.
அடிக்கடி சிறையில் அடைக்கப்பட்டதால், சங்க அதிகாரிகளின் வழிகாட்டுதலில் சென்னைக்கு குடியேறி, சென்னை பிராட்வேயில் உள்ள புகழ்பெற்ற தையல் கடையில் வேலை செய்து கொண்டே, சங்க வேலையையும் தொடர்ந்து செய்து வந்தார். சிவராம் ஜி, பீஷ்மா ஜி, யாதவராவ் ஜோஷி ஜி என பல ஷேத்ர, பிராந்த மூத்த சங்க அதிகாரிகளுடன் நெருங்கிப் பழகியுள்ளார்.
தர்ம ரக்ஷண ஸமிதியில் தொடர்ந்து பல வருடங்களாக பொறுப்பில் இருந்து ஆடி மாதம் அம்மன் வழிபாடு, கார்த்திகை மாதம் ஐயப்பன் பூஜை, இளம் பிள்ளைகளுக்கு பண்பாட்டு வகுப்புகள் என பல வழிகள் மூலம், மதமாற்றத்தை தடுக்க பாடுபட்டார். சென்னையில் உள்ள பல சேவா பஸ்திகளுக்கு நேரே சென்று தொடர்பு கொண்டு, ஐயப்பன் குருமார்களை சந்தித்து, அவர்களை ஒன்றுபடுத்தி வருடந்தோறும் ஐயப்ப குருமார்களுக்காகவே நிகழ்ச்சிகள் நடத்தினார்.
1976 ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம் 19 ஆம் தேதி ஸ்ரீ தேவி அம்மாளை திருமணம் செய்த உன்னி ஜிக்கு, கோகுல் என்ற ஒரு மகனும், கீதா, கிரிஜா என்ற இரண்டு மகள்களும் உள்ளனர். மூத்து மகன் கோகுல் ஜி, சென்னையில் பாஹ் அளவில் சங்கப் பொறுப்பில் உள்ளார். இரண்டு மகள்களுக்கும் பல சங்க நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளனர்.
குடும்பமே சங்க வேலைக்கு ஆதரவு அளிப்பதாகவும், இதுவரை ஒருநாள்கூட ஏன் செல்கிறீர்கள்? என கேட்கவில்லை, மாறாக இன்று ஏன் சங்கப்பணிக்கு செல்லவில்லை என கேட்பதே, தான் தொடர்ந்து சங்கப்பணி செய்ய உத்வேகம் அளித்ததாக கூறிய உன்னி கிருஷ்ணன் ஜி, முதிய வயதிலும் ஏதேனும் ஒருவகையில் சங்க வேலை செய்து, நம் அனைவருக்கும் ஒரு முன்னுதாரணமான ஸ்வயம்சேவக்காக திகழ்கிறார்.

 

அ. ஓம்பிரகாஷ்