புலன் விசாரணை செய்வது அமலாக்கத்துறையின் கடமை

சட்டவிரோத பணபரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியை விடுவிக்கக்கோரி அவரது மனைவி மேகலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு, மாறுபட்ட தீர்ப்புகளை வழங்கினர். இதனால் வழக்கை விசாரிக்க மூன்றாவது நீதிபதியாக சி.வி.கார்த்திகேயன் நியமிக்கப்பட்டார். நேற்று (ஜூலை 12) 2வது நாளாக இந்த வழக்கு சி.வி.கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை சார்பில் மத்திய சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வாதிட்டார்.

காவலில் எடுத்து விசாரிக்க சட்டத்தில் அனுமதி வழங்காவிடிலும் சட்டவிரோத பண பரிமாற்ற தடைச் சட்டத்தின்படி புலன் விசாரணை செய்வது அமலாக்கத் துறையின் கடமை. குற்றத்தை கண்டுபிடிக்க, சொத்துகளை முடக்க, சோதனை செய்ய, வழக்கு தொடர அமலாக்கத்துறைக்கு அதிகாரம் உள்ளது. எந்த அழுத்தத்துக்கும் அமலாக்கத்துறை உட்படுவதில்லை. விருப்பம் போல் கைது நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக கூற முடியாது.

ஆதாரங்களை சேகரிக்கும் அமலாக்கத்துறையின் அனைத்து நடவடிக்கையும் புலன் விசாரணை தான். தவறாக கைது நடவடிக்கை எடுத்தால் அமலாக்கத்துறை அதிகாரிகளையே கைது செய்ய விதி உள்ளது. அப்பாவிகள் கைது செய்யப்படவில்லை என்பதை உறுதி செய்ய சட்டத்தில் கடுமையான பிரிவுகள் சேர்க்கப்பட்டுள்ளன. அமலாக்கத்துறைக்கு போலீஸ் அதிகாரம் இல்லை என உச்சநீதிமன்றம் வேறு சூழலில் தெரிவித்தது. காவலில் வைத்து விசாரிக்கும் உரிமையை பறிக்க முடியாது. செந்தில் பாலாஜி சட்ட விரோதமாக கைது செய்யப்பட்டதாக இரு நீதிபதிகளும் கூறவில்லை. இவ்வாறு வாதிட்டார்.

நீதிபதி கார்த்திகேயன் கூறுகையில், ‘செந்தில் பாலாஜியை விசாரிக்க அமலாக்கத்துறைக்கு ஏற்கனவே 8 நாட்கள் வழங்கப்பட்டது. 8 நாட்கள் கஸ்டடி வழங்கியும் விசாரிக்காதது ஏன்? அதில் ஒரு நாளாவது கஸ்டடி எடுக்க முயற்சி எடுத்திருக்க வேண்டும்; முடியாத பட்சத்தில் நீதிமன்றத்தில் தெரிவித்திருக்க வேண்டும். விசாரிக்கவில்லை என்பதற்காக சிகிச்சை நாட்களை காவல் நாட்களாக ஏன் கருத கூடாது?’ எனக் கேள்வி எழுப்பினார்.

அப்போது குறுக்கிட்ட வழக்கறிஞர் துஷார் மேத்தா, ‘மருத்துவமனைக்கு மாற்றப்பட்டவர் நீதிமன்ற காவலில் நீடிக்கவேண்டும் என்ற உத்தரவு ஜாமின் மறுப்புதான். உடல்நலக்குறைவாக உள்ளபோது, காவலில் எடுத்து ஏதேனும் நிகழ்ந்தால் பொறுப்பேற்க வேண்டிவரும். அதனால்தான் காவலில் எடுத்து விசாரிக்க முடியவில்லை எனவும், நிபந்தனைகளை எதிர்த்தும் உச்சநீதிமன்றத்தை நாடினோம்’ என வாதிட்டார். இரு தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில், வழக்கை வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார். செந்தில் பாலாஜிக்கு நீதிமன்ற காவல் நேற்றுடன் (ஜூலை 12) முடிந்த நிலையில், அவரது காவலை ஜூலை 26ம் தேதி வரை நீடித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவிட்டார்.