புராதன ஆணைய சட்டம் 2 மாதத்தில் அமல்

தமிழகத்தில் உள்ள புராதன சின்னங்களை பாதுகாக்க, 2012ல் புராதன ஆணைய சட்டம் இயற்றப்பட்டது. இந்த சட்டத்தின் கீழ், புராதன ஆணையம் அமைக்கக் கோரி, இந்திய தேசிய கலை மற்றும் கலாச்சார பாரம்பரிய அறக்கட்டளை வழக்கு தொடர்ந்தது.

மனு, தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா, நீதிபதி பரத சக்ரவர்த்தி அடங்கிய, ‘முதல் பெஞ்ச்’ முன், விசாரணைக்கு வந்தது. சட்டம் அமலுக்கு வரும் தேதி அறிவிக்கப்படவில்லை என்றும், விதிகளை வகுப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாகவும், அதன்பின் சட்டம் அமலுக்கு வரும் என்றும், அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, சட்டம் இயற்றி 12 ஆண்டுகள் ஆகியும், அதை அமல்படுத்தாமல் இருப்பதால், எந்த பயனும் இல்லை என்றும், சட்டம் அமலுக்கு வருவது குறித்து, இரண்டு மாதங்களில் அறிவிப்பு வெளியிடும்படியும், தமிழக அரசுக்கு முதல் பெஞ்ச் உத்தரவிட்டது. சட்டத்தின் கீழ் விதிகளை வகுக்க, எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து தெரிவிக்கும்படி உத்தரவிட்டு, விசாரணையை, ஏப்ரல் 26க்கு முதல் பெஞ்ச் தள்ளி வைத்தது.