பிரமாண்ட ராமானுஜர் சிலை

வைணவ ஆச்சாரியார் ராமானுஜர் அவதரித்து 1,000 ஆண்டுகள் நிறைவுற்றதை கொண்டாடும் வகையில், தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை அடுத்துள்ள முச்சிந்தல் பகுதியில் உள்ள சின்ன ஜீயர் ஆசிரமத்தில் 45 ஏக்கர் பரப்பளவில் மிக பிரமாண்டமாக பத்ம பீடத்தின் மீது 216 அடி உயரத்தில் ராமானுஜருக்கு பஞ்சலோக சிலை அமைக்கப்பட்டுள்ளது. ரூ. 1,000 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள ‘சமத்துவ சிலை’ என்றழைக்கப்படும் இந்த சிலையை நேற்று பிரதமர் மோடி திறந்து வைத்தார். இந்த வளாகத்தில் வேத மின்னணு நூலகம், ஆராய்ச்சி மையம், ஸ்ரீ ராமானுஜரின் பல படைப்புகளை விவரிக்கும் கல்விக் கூடம், தியான வளாகம் ஆகியவையும் இடம் பெற்றுள்ளன. ரமானுஜர் சிலையை பார்வையிட 7ம் தேதி பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கும், 8ம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும், 13ம் தேதி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தும் வருகை தர உள்ளனர். 14ம் தேதிக்குப் பிறகு பொதுமக்கள் இதனை பார்வையிட அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, ஹைதராபாத்தின் பதன்செருவு பகுதியில் அமைந்துள்ள விவசாயம் மற்றும் புதுமை தொடர்பான அம்சங்களில் செயல்படும் நிறுவனமான அரை வறண்ட வெப்பமண்டலத்திற்கான சர்வதேச பயிர்கள் ஆராய்ச்சி நிறுவனத்தின் (ICRISAT) பொன்விழா கொண்டாட்டங்களிலும் பிரதமர் மோடி கலந்துகொண்டு உரையாற்றினார்.