“பிரதமர் மோடி உள்நோக்கத்துடன் பேசவில்லை” – ‘சொத்து’ பேச்சுக்கு தமிழிசை விளக்கம்

கேவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சவுந்தரராஜன், “தேர்தலில் வாக்களிப்பது மக்களின் உரிமை. அடையாள அட்டை வைத்திருந்த போதும் வாக்களிக்கும் உரிமை மறுக்கப்பட்டுள்ளது. தேர்தல் அதிகாரிகள் உரிய முறையில் கண்காணித்திருக்க வேண்டும். ஒரு வாக்காளருக்கு வாக்கு உரிமை மறுக்கப்பட்டால் கூட ஜனநாயகம் சரியில்லை என்பது தான் எங்களின் வாதம்.
ஒன்றிணைந்த வளர்ச்சி என்பதுதான் பிரதமரின் தாரக மந்திரம். சிறுபான்மை மக்களை வேற்றுமைப்படுத்தி பார்ததில்லை. 10 கோடி இலவச காஸ் இணைப்பு திட்டத்தின்கீழ் குறிப்பிட்ட சதவீதம் இஸ்லாமியர்களுக்கு கிடைத்துள்ளது. பிரதமரின் மருத்துவ காப்பீடு திட்டத்தில் கூட அனைவரும் பயன்பெற்றுள்ளனர். 50 ஆண்டுகள் இந்தியாவை ஆண்ட காங்கிரஸ் கட்சி சிறுபான்மையினரை அடித்தட்டில் வைத்துவிட்டு, வாக்கு வங்கியாக பயன்படுத்தி வந்தது. 2006-ல் மன்மோகன் சிங் நாட்டின் சொத்தில் சிறுபான்மையினருக்கு முதல் உரிமை இருக்கிறது என்று பேசினார். வேற்றுமையை விதைத்துவிட்டு இஸ்லாமியர்களை எந்த விதத்தில் முன்னேற்ற நினைக்கவில்லை. பிரதமர் இஸ்லாமிய பெண்களுக்கு முத்தலாக் உள்ளிட்ட பல நன்மைகளை செய்துள்ளார்.
பெண் உரிமை குறித்து ஸ்டாலின் பேசுகிறார். ஆனால், ஹஜ் புனித யாத்திரைக்கு பெண்கள் தனியாக செல்லும் உரிமையை மீட்டெடுக்க முடியவில்லை. பிரதமர் மோடிதான் பெண்களுக்கு தனியாக விசா வழங்க தளர்வுகளை ஏற்படுத்தி கொடுத்துள்ளார். அலிகர் பல்கலைக்கழகத்தில் முதல் முறையாக பெண் துணைவேந்தராக நியமிக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் கட்சியினர்தான் பிரதமர், இஸ்லாமியர்களுக்கு எதிராக உள்ளதை போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி தேர்தலில் முன்னெடுத்துச் செல்கின்றனர்.
ஊடுருவல்காரர்களிடம் நம் சொத்துகள் பறிபோய்விடக் கூடாது என்பதைத்தான் பிரதமர் தெளிவாக கூறியுள்ளார். அவர் உள்நோக்கத்துடன் பேசவில்லை. மேற்கு வங்கத்தில் கோடிக்கணக்கான எண்ணிக்கையில் ஊடுருவல்காரர்கள் உள்ளனர். ராகுல் காந்தி எங்கே சென்றுள்ளார் என தெரியவில்லை. மக்களவைத் தேர்தல் நடக்கும்போது மக்களுடன் நிற்க முடியாத தலைவரை வைத்துக் கொண்டு காங்கிரஸ் தேர்தலை எதிர்கொள்கிறது.
25 கோடி மக்களை வறுமையில் இருந்து மீட்டெடுத்துள்ளோம். கரோனா நோய்தொற்றை சிறப்பான முறையில் பிரதமர் எதிர்கொண்டார். இதனால் 45 லட்சம் பேர் இறப்பது தடுக்கப்பட்டது. இந்தத் தேர்தல் வளர்ச்சிக்கான தேர்தல். அதை திசை திருப்பும் முயற்சியை காங்கிரஸ் கட்சியினர் மேற்கொண்டுள்ளனர். கோவையில் பலருக்கு வாக்குரிமை பறிக்கப்பட்ட நிலையில், ஏன் முதல்வர் மற்றும் கூட்டணி கட்சியினர் மவுனம் காக்கின்றனர். தமிழகத்தில் போட்டியிட்ட நான் உள்ளிட்ட பாஜக மற்றும் கூட்டணியினர் தேர்தலில் வெற்றி பெறுவோம்.
தமிழக அரசியலில் அடிதடி என்ற நிலை காணப்படுகிறது. எங்கு பார்த்தாலும் போதைப் பொருட்கள் காணப்படுகிறது. அதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் சிறையில் ஒரு அமைச்சர் உள்ளார். இந்தியாவில் இரண்டு முதல்வர்கள் சிறையில் உள்ளனர். இவர்களை வைத்துக்கொண்டு இண்டியா கூட்டணி என பேசி வருகின்றனர். விஜயகாந்த் மீது பிரதமரும், பாஜகவினரும் மிகுந்த அன்பும், மரியாதையும் வைத்துள்ளனர். எனவே யாரும் அவரை கொச்சைப்படுத்த வேண்டாம்” என்று தமிழிசை தெரிவித்துள்ளார்.