பிரதமரின் சூரிய மின் திட்டம்: 7 நாளில் 25,000 விண்ணப்பம்

பிரதமர் நரேந்திர மோடி, நாடு முழுதும் ஒரு கோடி வீடுகளுக்கு, சூரிய சக்தி இலவச மின் திட்டத்தை அறிவித்துள்ளார். அத்திட்டத்தில், 1 கிலோ வாட் திறனில் சூரியசக்தி மின் நிலையம் அமைக்க, 30,000 ரூபாயும்; 2 கிலோ வாட் அமைக்க, 60,000 ரூபாயும் மானியம் வழங்கப்படுகிறது.

அதற்கு மேல் அமைத்தால், 78,000 ரூபாய் மானியம். இந்த மானிய தொகை, மின் நிலையம் அமைத்து முடித்ததும், பயனாளிகளின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும். சூரியசக்தி மின்சாரத்தை பயன்படுத்துவதால், மின் வாரியத்திற்கு செலுத்தும் கட்டணமும் குறையும். தமிழகத்தில் பிரதமர் திட்டத்தில், 25 லட்சம் வீடுகளில் சூரியசக்தி மின் நிலையம் அமைக்க மின் வாரியம் திட்டமிட்டு உள்ளது.

அதற்கு ஏற்ப இம்மாதம், 20ம் தேதி முதல் மக்களிடம் திட்டம் குறித்து விளம்பரப்படுத்தி, விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டு வருகிறது. அதனால், கடந்த ஒரு வாரத்தில் மட்டும் மின் நிலையம் அமைக்க, 25,000 பேர் விண்ணப்பம் செய்துஉள்ளனர். இதுகுறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘பிரதமரின் சூரிய மின் திட்டத்திற்கு, மத்திய அரசின் இணையதளத்தில் விண்ணப் பிக்க வேண்டும். அதற்கு மின் வாரியமும் ஒப்புதல் தர வேண்டும். அதன்படி, உடனுக்குடன் ஒப்புதல் வழங்கப் பட்டு வருகிறது’ என்றார்.