பி.எஸ்.என்.எல்., சென்னை வட்டத்தில், 4,868 ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் பணியாற்றினர். விருப்ப ஓய்வு திட்டம் செயல்படுத்திய பின், இந்த எண்ணிக்கை, 2,199 ஆக குறைந்தது. தற்போது, 45 சதவீத பணியாளர்கள் மட்டுமே பணியில் உள்ளனர்.விருப்ப ஓய்வில் சென்றவர்களில் பெரும்பாலானோர், சேவை பாதிப்புகளை சரி செய்யும் பணியில் இருந்தவர்கள். தற்போது, பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தின், ‘லேண்ட்லைன், பிராட்பேண்ட்’ சேவைகளில், அடிக்கடி பாதிப்பு ஏற்படுவதாக, வாடிக்கையாளர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.இதுகுறித்து, மேடவாக்கத்தை சேர்ந்த வாடிக்கையாளர் ஒருவர் கூறியதாவது:என் வீட்டு, லேண்ட்லைன் பாதிக்கப்பட்டு, இரண்டு மாதங்களாகிறது. வாடிக்கையாளர் சேவை மையத்தை அணுகினேன். அப்போது, வெவ்வேறு மையங்களுக்கு செல்ல அறிவுறுத்தினர். பல மையங்களுக்கு சென்றும், சேவை சரியாகவில்லை. மன உளைச்சலுக்கு ஆளான நான், லேண்ட்லைன் எண்ணை ஒப்படைத்து விட்டேன். என்னை போல் நிறைய வாடிக்கையாளர்கள், புகார் கூறுகின்றனர்.
இது போன்ற சேவை குறைபாட்டை, பி.எஸ்.என்.எல்., நிர்வாகம் சீர் செய்ய வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.இதுகுறித்து, பி.எஸ்.என்.எல்., சென்னை வட்ட தலைமை பொது மேலாளர், சஞ்சீவி கூறியதாவது:சென்னையில், பி.எஸ்.என்.எல்., சேவையின் தரத்தை உயர்த்த, நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தற்போது, ஊழியர்களின் எண்ணிக்கை பாதியாக குறைந்துள்ளது. இதனால், ஏற்படும் சேவை பாதிப்பை சரி செய்யும் பணியில், ஒப்பந்த நிறுவனங்களை பணியில் அமர்த்த, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
விரைவில், அவர்கள் சேவை பாதிப்பை சரி செய்வர்.சேவை பாதிக்காமல் இருக்க, முக்கியமான வாடிக்கையாளர் சேவை மையங்கள் தவிர்த்து, இதர சேவை மையங்களையும், ஒப்பந்ததாரர்களிடம் தர உள்ளோம். இதனால், சேவை மையங்கள் சிறப்பாக செயல்படும். சேவையின் தரத்தை உயர்த்துவதே, பிரதான நோக்கம்.இவ்வாறு, அவர் கூறினார்.2 லட்சம் உயர்வு வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை ஓராண்டில், இரண்டு லட்சம் உயர்ந்துள்ளது.