பா.ஜ.,வுடன் இணைந்தது பாபுலால் மராண்டி கட்சி

ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் பாபுலால் மராண்டியின், ஜார்க்கண்ட் விகாஸ் மோர்ச்சா கட்சி, பா.ஜ.,வுடன் இணைந்தது.

ஜார்க்கண்டில், முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையில், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்., ராஷ்ட்ரீய ஜனதா தள கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. இம்மாநில தலைநகர் ராஞ்சியில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா முன்னிலையில் நடைபெற்ற விழாவில், பாபுலால் மராண்டியின் ஜார்க்கண்ட் விகாஸ் மோர்ச்சா கட்சி, பா.ஜ.,வுடன் இணைந்தது. இதில், இரு கட்சிகளையும் சேர்ந்த ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் அமித் ஷா பேசியதாவது:ஜார்க்கண்ட் மாநிலம் உருவான பின், அதன் முதல் முதல்வராக பொறுப்பேற்றவர் பாபுலால் மராண்டி. நான்கு முறை எம்.பி.,யாக இருந்தவர்.அவர், 2006ல், பா.ஜ., வில் இருந்து விலகி, தனிக்கட்சி துவங்கினார். அவரை, மீண்டும், பா.ஜ.,வுக்கு வரவழைக்க, 2014 முதல் முயற்சித்தேன். அது, இப்போது கைகூடியுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.