பாரதத்தின் குரல் பாரெங்கும் ஒலித்தது!

தொழிலாளர்களின் உரிமைக்கு குரல் கொடுக்கும் சர்வதேச தொழிலாளர் அமைப்பின் 105வது மாநாடு ஜூன் மாதம் 12ம் நாள் ஜெனிவாவில் நடைபெற்றது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 172 பிரதிநிதிகள் பங்கேற்றனர். இந்தியாவின் சார்பாக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேய அவர்களின் தலைமையில் தொழிலாளர்கள், தொழிலதிபர்கள், அரசு அதிகாரிகள் பங்கேற்றனர். இந்த மாநாட்டில் கலந்துகொண்ட பாரதிய மஸ்தூர் சங்கம் (BMS)  அகில இந்திய இணை அமைப்பு செயலாளர் சுரேந்திராவுடன்  ‘விஜயபாரத’திற்காக காந்தி கிராம கிராமிய பல்கலைக் கழக பயிற்சி மாணவர்கள் சந்தோஷ், மணிகண்டன், கிருஷ்ணகுமார் ஆகியோர் கலந்துரையாடியதிலிருந்து:

ஜெனிவா மாநாட்டில் தொழிலாளர்களின் இரண்டு முக்கிய பிரச்சினைகள் குறித்து  தீர்மானங்கள் BMS-JENIVAநிறைவேற்றப்பட்டன:

* உலக தொழில் நிறுவனங்களுக்கு தொழிலாளர்களை தேர்வு செய்தல். இதில் தொழிலாளர்களின் தகுதி, திறமை, சம்பளம் போன்றவை அடங்கும். * உள்நாடு, வெளிநாட்டுப் பிரச்சினைகள், இயற்கை சீற்றங்களால் இடம்பெயர்தல் போன்றவற்றால் தவிக்கும் மக்களுக்கு வேலை வாய்ப்பினை ஏற்படுத்தித் தருதல்.

ஐ.எல்.ஓ மாநாட்டில் பி.எம்.எஸ் சார்பாக பேசப்பட்ட முக்கிய கருத்துக்கள்: தொழிலாளர்களின் திறன், தரம் போன்றவற்றை மேம்படுத்துதல். உதாரணமாக பெண்களின் பணி அளவினை குறைத்தல், பாதுகாப்பு வசதி ஏற்படுத்தித் தருதல், வேலைக்கேற்ற சம்பளம் அளித்தல், குழந்தை தொழிலாளர் ஒழிப்பு போன்றவைகள்.

பிரிக்ஸ் (BRICS) அமைப்பு என்பது  தொழிலாளர்களின் நலன் கருதி பாடுபடும் மற்றொரு பன்னாட்டு அமைப்பு. பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகள் பிரிக்ஸ் அமைப்பில் உறுப்பினராக உள்ளன. பிரிக்ஸ் மாநாடு இந்த ஆண்டு வருகிற நவம்பர் 19ல் பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் கோவாவில்  நடைபெற உள்ளது. இந்த மாநாடு நடைபெறுவதற்கு முன்னரே தொழிலாளர்கள், தொழிலதிபர்கள், அரசு அதிகாரிகள் ஆகியவர்களுக்கு தனித்தனியே மாநாடு நடத்தப்பட்டது. இந்த மாநாட்டில் இந்தியாவில் செயல்படும் அயல்நாட்டு நிறுவனங்கள் இந்திய அரசின் சட்ட திட்டங்களுக்கு கட்டுப்பட்டு செயல்பட வேண்டும்; மீறும் பட்சத்தில் அதன் தொழில் உரிமம் பறிக்கப்பட வேண்டும் என்ற விவாதம் நடைபெறும். இவ்வாறு சுரேந்திரா தெரிவித்தார்.