பாஜக ஆட்சி அமைக்க மறுத்ததால், சிவசேனை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு

மகாராஷ்டிரத்தில் ஆட்சி அமைக்குமாறு சிவசேனை கட்சிக்கு மாநில ஆளுநர் பகத் சிங் கோஷியாரி ஞாயிற்றுக்கிழமை இரவு அழைப்பு விடுத்தார். இதன் மூலம் மகாராஷ்டிர அரசியல் களத்தில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.

 முன்னதாக, மகாராஷ்டிர பேரவையில் உள்ள 288 இடங்களில், 105 இடங்களுடன் தனிப்பெரும் கட்சியாக உள்ள பாஜகவை ஆட்சி அமைக்குமாறு ஆளுநர் அழைப்பு விடுத்தார். ஆனால், தங்களுக்கு ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மை இல்லை என்று அக்கட்சி ஆளுநரிடம் தெரிவித்துவிட்டது. இதையடுத்து, 56 எம்எல்ஏக்களுடன் இரண்டாவது பெரிய கட்சியாக திகழும் சிவசேனை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்தார். ஆட்சி அமைப்பது தொடர்பாக முடிவெடுக்க திங்கள்கிழமை இரவு 7.30 மணி வரை அக்கட்சிக்கு ஆளுநர் கால அவகாசம் அளித்துள்ளார் என்று ஆளுநர் மாளிகை வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 “மகாராஷ்டிரத்தில் ஆட்சி அமைப்பது தொடர்பாக உங்கள் விருப்பத்தை தெரிந்து கொள்ள விரும்புகிறேன்’ என்று சிவசேனை கட்சியின் சட்டப்பேரவைத் தலைவர் ஏக்நாத் ஷிண்டேவுக்கு ஆளுநர் தகவல் அனுப்பியுள்ளார் என்று தெரியவந்துள்ளது.

 54 எம்எல்ஏக்களைக் கொண்ட தேசியவாத காங்கிரஸ், 44 எம்எல்ஏக்களைக் கொண்ட காங்கிரஸ் ஆகியவை ஆதரவளிக்கும் பட்சத்தில் சிவசேனை கட்சியால் ஆட்சி அமைக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. 288 எம்எல்ஏக்களைக் கொண்டுள்ள மகாராஷ்டிர பேரவையில் ஆட்சி அமைக்க 145 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை. தங்கள் கட்சிக்கு 170 எம்எல்ஏக்கள் ஆதரவு இருப்பதாக சிவசேனை மூத்த தலைவர் சஞ்சய் ரெளத் ஏற்கெனவே அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆட்சி அமைக்க பாஜக மறுப்பு

 பெரும்பான்மை இல்லாததால் பாஜக ஆட்சி அமைக்க மறுத்துள்ளது.  ஆளுநர் பகத் சிங் கோஷியாரியை மாநில பாஜக தலைவர்கள் குழு ஞாயிற்றுக்கிழமை மாலை நேரில் சந்தித்துப் பேசியது. அதற்கு முன்பு பாஜக தலைவர்களின் ஆலோசனைக் கூட்டமும் நடைபெற்றது.

 பாஜக-சிவசேனை கூட்டணி ஆட்சி அமைக்க வேண்டுமென்று மகாராஷ்டிர மக்கள் வாக்களித்தனர். ஆனால் மக்கள் அளித்த தீர்ப்பை சிவசேனை அவமதித்துவிட்டது. மாநிலத்தில் ஆட்சி அமைக்க உரிமை கோருவதில்லை என்று பாஜக முடிவெடுத்துள்ளது. ஏனெனில், எங்களுக்கு ஆட்சி அமைக்க தேவையான அளவுக்கு பெரும்பான்மை இல்லை. இந்தத் தகவலை ஆளுநரிடம் தெரிவித்து விட்டோம்.

 சிவசேனை விரும்பினால் தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸுடன் இணைந்து மாநிலத்தில் ஆட்சி அமைத்துக் கொள்ளலாம். அவர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் மாநில பாஜக தலைவர் சந்திரகாந்த் பாட்டீல்.