பாஜக ஸ்தாபன தினம் ஏப்ரல் மாதம் 6ம் தேதி உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. 1980ம் ஆண்டு தொடங்கப்பட்ட பாஜக 46 ஆண்டுகளை நிறைவு செய்து, 47வது வருடத்தில் அடியெடுத்து வைத்துள்ளது. சுமார் அரை நூற்றாண்டு கால வரலாற்றில் ஏற்றங்களையும், இறக்கங்களையும் பாஜக சந்தித்துள்ளது. சோதனைகளை சாதனைகளாக மாற்றிக் காட்டியுள்ளது.
பாஜகவின் வளர்ச்சிக்கும், எழுச்சிக்கும், கார்யகர்த்தர்களின் தொய்வற்ற சேவைதான் பிரதானக் காரணம். வளர்ச்சியடைந்த பாரதம் 2047ல் நனவாக வேண்டும் என்பதை நோக்கி, நாம் பயணிக்கிறோம் என்று ஸ்தாபன தினத்தையொட்டி பிரதமர் நரேந்திர மோடி விடுத்துள்ள செய்தி முற்றிலும் பொருத்தமானதே.
1951ம் ஆண்டு, டாக்டர் சியாம பிரசாத் முகர்ஜியால் பாரதிய ஜனசங்கம் தொடங்கப்பட்டது. இதுதான் பாஜகவின் தாய் கட்சியாகும். கலாச்சார தேசியத்தை பாரதிய ஜனசங்கம் முதன்மைப்படுத்தியது. தீனதயாள் உபாத்யாய வலியுறுத்திய ஏகாத்ம மாணவ வாதத்துக்கும், பாரதிய ஜனசங்கம் முக்கியத்துவம் அளித்தது. இப்போதும் இந்த 2 கோட்பாடுகளும் பாஜகவை இயக்கி வருகின்றன. பாஜக வெறும் அரசியல் கட்சியல்ல. லட்சிய மரபின் தொடர்ச்சியாக பாஜக இயங்குகிறது என்று உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார். இது பாஜகவின் நுண்ணியல்பை துல்லியமாக பிரதிபலிக்கிறது.
நெருக்கடி நிலை பிரகடனப்படுத்தப்பட்ட போது, அதை எதிர்க்க எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டனர். ஜனதா கட்சியில் பாரதிய ஜனசங்கமும் சங்கமித்தது. ஆனால் சில ஆண்டுகளுக்குள்ளாகவே பிரச்சினை வெடித்தது. ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தில் அங்கம் வகிப்பவர்கள், ஜனதாவில் பணியாற்றக் கூடாது என்று சிலர் விஷமத்தனமான நோக்குடன் கூறினார்கள். அதனால் பிரச்சினை உக்கிரமடைந்தது.
1980ம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 6ம் தேதி அடல் பிஹாரி வாஜ்பாய் தலைமையில், பாரதிய ஜனதா கட்சி உதயமானது. 1984ல், இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்டார். இதையடுத்து நடைபெற்ற மக்களவைத் தேர்தலில், பாஜகவுக்கு 2 இடங்கள் மட்டுமே கிடைத்தன. இதையடுத்து, பாஜக தனது வியூகத்தை மாற்றிக் கொண்டது. எல்.கே.அத்வானி தலைமைப் பொறுப்பை ஏற்றார். ராமர் கோயில் அமைக்கக்கோரி 1990ல் சோம்நாத்திலிருந்து அயோத்தி வரை, அவர் நடத்திய ரத யாத்திரை திருப்புமுனையை ஏற்படுத்தியது. இது பாஜகவிற்கு உந்துவிசையளித்தது. வடக்கு பாரதத்திலும், மேற்கு பாரதத்திலும், பாஜகவின் செல்வாக்கு தலைத்தோங்கியது. 1989ல், 85 இடங்களைக் கைப்பற்றிய பாஜக, 1991ல் 120 இடங்களில் வெற்றி வாகை சூடியது. 1996ல் நடைபெற்ற தேர்தலில், பாஜகவுக்கு அறுதிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை என்ற போதிலும், முதன்மை கட்சியாக உருவெடுத்தது. ஆனால், அப்போது பதவியேற்ற வாஜ்பாய் தலைமையிலான அரசு 13 நாட்கள் மட்டுமே நீடித்தது. மற்ற கட்சிகள் எதுவும் ஒத்துழைக்கவில்லை.
இதையடுத்து, கூட்டணி அரசியலுக்கு பாஜக முதன்மை அளிக்க முற்பட்டது. இதுதான் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மையப்புள்ளியாகும். பாரத வரலாற்றிலேயே கூட்டணி அரசை 5 ஆண்டுகள் முழுமையாக நடத்திய முதலாவது தலைவர் என்ற பெருமை, வாஜ்பாய்க்கே உரியதாகும். `பொக்ரான் 2’ அணு சோதனை நடத்தப்பட்டது. கார்கிலில் நமது பராக்கிரமத்தை நிலைநாட்டினோம். உட்கட்டமைப்பு வசதிக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. தங்க நாற்கர சாலைக்கு வாஜ்பாய் வித்திட்டார். போராட்டம் நடத்தத்தான் பாஜகவுக்கு தெரியும் என்ற நிலை மாறி, செம்மையாக ஆட்சி நடத்தவும் பாஜகவுக்குத் தெரியும் என்பது துல்லியமாக நிரூபிக்கப்பட்டது.
2024ல், பாஜகவுக்கு பின்னடைவு ஏற்பட்டது. 2016ல், நரேந்திர மோடி தலைமையில் பாஜக மீண்டும் பதவிக்கு வந்தது. 3 தசாப்த வரலாற்றில் மக்களவையில் தனிப்பட்ட ஒரு கட்சிக்கு அறுதிப் பெரும்பான்மை கிடைத்தது 2014ம் ஆண்டுதான். பாஜக 282 இடங்களை கைப்பற்றியது அபார சாதனையாகும். இதை 2019ல் பாஜகவே முறியடித்தது. நரேந்திர மோடியின் தலைமையிலான நல்லரசு தொடர வேண்டும் என்ற அடிப்படையில், பாஜகவை மக்கள் உணர்ச்சிப் பெருக்குடன் ஆதரித்ததால் 303 தொகுதிகளில் தாமரை மலர்ந்தது.
பிரதமர் நரேந்திர மோடி, கட்சி எவற்றையெல்லாம் நிறைவேற்ற வேண்டும் என்று கடந்த காலத்தில் வற்புறுத்தியதோ அவற்றையெல்லாம் ஒன்றன் பின் ஒன்றாக நிறைவேற்றினார். காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்த 370 அரசியல் சாசனப் பிரிவு அடியோடு நீக்கப்பட்டது. பொருளாதார ரீதியாக பல்வேறு சீர்திருத்தங்கள் அமலாக்கப்பட்டன. குறிப்பாக சரக்கு – சேவை வரி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். அயோத்தியில் ராமருக்கு விண்ணளாவ ஆலயம் எழுப்பப்பட்டுள்ளது. கோடிக்கணக்கான பக்தர்கள் இதை எண்ணி, பெருமிதம் கொள்கிறார்கள்.
கடயனுக்கும் கடைத்தேற்றம் என்பதுதான் `அந்தியோதயா’. தீனதயாள் உபாத்தியாய இதைத்தான் வற்புறுத்தினார். முதலில் தேசம், அடுத்தபடியாக கட்சி, இறுதியாக தனிநபர் என்பதுதான் பாஜகவின் லட்சிய முழக்கமாகும்.
உலகிலேயே மிகப்பெரிய அரசியல் கட்சியாக பாஜக உருவெடுத்துள்ளது. உள்ளாட்சி முதல் நாடாளுமன்றம் வரை பாஜக வலுவாக வேரூன்றி உள்ளது. 2047ம் ஆண்டு வளர்ந்த பாரதத்தை நனவாக்க வேண்டும் என்ற அடிப்படையில், பொருளியல் ரீதியாகவும், சமுகவியல் ரீதியாகவும் பல்வேறு மாற்றங்களை மோடி தலைமையிலான பாஜக அரசு தொடர்ந்து அமலாக்கி வருகிறது.
கட்டுரையாளர் : செய்தியாளர்
ஆர்கனைசர் ஆங்கில இணையத்திலிருந்து
தமிழில் : அடவி வணங்கி