பாகிஸ்தான் தூண்டுதலால்தான் கேரள ரயில் எரிப்பு: என்.ஐ.ஏ

 

பாகிஸ்தான் பயங்கரவாதம் எந்த அளவுக்கு எல்லைதாண்டி ஊடுருவி உள்ளது என்பதற்கு பல்வேறு நிகழ்வுகளைச் சுட்டிக்காட்ட முடியும். இளைஞர்களை மூளைச் சலவை செய்து, அவர்களை பொம்மைகளைப் போல ஆட்டிப்படைத்து கொடூர நிகழ்வுகளை பாகிஸ்தான் வரைமுறையின்றி அரங்கேற்றி வருகிறது. பாகிஸ்தானின் எல்லையோரத்தில் உள்ள மாநிலங்களில் மட்டுமே கொடூர நிகழ்வுகள் நடைபெறுகின்றன என்று யாரும் முடிவு கட்டிவிடக்கூடாது. தென்மாநிலங்களிலும் இத்தகைய கொடூர நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன.

இரண்டு ஆண்டுகளுக்கு முன் கேரளாவில் நடைபெற்ற கொடூர நிகழ்வே சான்றாக உள்ளது. 2023ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 2ம் தேதி கேரளாவில் உள்ள கோழிக்கோட்டில் ஆலப்புழா – கண்ணூர் எக்ஸ்பிரஸ் ரயிலின் டி1 பெட்டியை ஒரு நபர் தீவைத்து கொளுத்தினார். நெருப்பு மளமளவென கொழுந்து விட்டு எரிந்தது. மூன்று பயணிகள் கருகி சாம்பலானார்கள். உயிரிழந்தவர்களில் ஒரு குழந்தையும் அடங்கும் என்பது மிகவும் வேதனைக்குரியது. 9 பேர் பலத்த தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்கள். இந்த ரயிலை எரித்த பயங்கரவாதி மகாராஷ்ட்ராவில் உள்ள ரத்தினகிரி என்ற இடத்தில் சுற்றி வளைத்து பிடிக்கப்பட்டதையடுத்து திடுக்கிடும் தகவல்கள் ஒன்றன்பின் ஒன்றாக வெளிச்சத்துக்கு வந்தன.

ரயிலுக்கு தீ வைத்த நபர் ஷாருக் ஸைபி. டெல்லியில் உள்ள ஷாகின்பாக் பகுதியைச் சேர்ந்த ஸைபிக்கு பல்வேறு பயங்கரவாதிகளுடன் தொடர்பு உள்ளது. குறிப்பாக பாகிஸ்தானைச் சேர்ந்த ஜிகாதியை ஏவி விடும் மதவெறியர்கள் ஜாஹீர் நாயக், தாரிக் ஜமீல், இஸ்ரார் அகமது, தைமு அகமது ஆகியோருடன் தொடர்பு இருந்திருக்கிறது. அவர்களின் மதத்துவேஷ கருத்துக்களை, மாற்று மதத்தினரை அழித்து ஒழிக்க வேண்டும் என்ற ஜிகாதியிசத்தால் ஸைபி ஈர்க்கப்பட்டதுதான் இந்த கொடூர நிகழ்வுக்கு மூலகாரணமாக உள்ளது.

சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஸைபி மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த கொடுஞ்செயலை நேரடியாக ஸைபி மட்டுமே செய்துள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. முதலில் இந்த வழக்கை ரயில்வே போலீசார்தான் விசாரித்தனர். பிறகு இது தேசிய புலனாய்வு முகைமை(என்.ஐ.ஏ)யிடம் ஒப்படைக்கப்பட்டது.

கொச்சியில் உள்ள என்.ஐ.ஏ நீதிமன்றத்தில் இதுபற்றிய ஆவணங்கள் அனைத்தும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த ஆவணங்களை உன்னிப்பாக பரிசீலனை செய்த என்.ஐ.ஏ நீதிமன்றம் ஸைபி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து விட்டது.

ஆர்கனைசர் ஆங்கில வார இதழிலிருந்து தமிழில் : நிகரியவாதி