பாகிஸ்தான் – காவல் துறையில் முதல் முறையாக ஹிந்து பெண் அதிகாரி நியமனம்

பாகிஸ்தானில், முதல் முறையாக, ஹிந்து பெண் ஒருவர், போலீசாக பணி அமர்த்தப்பட்டுள்ளார்.

பாகிஸ்தானில், 90 லட்சத்துக்கும் அதிகமான ஹிந்துக்கள் வசிக்கின்றனர். ஆனால், பாகிஸ்தான் நிர்வாகத்தில், ஹிந்துக்கள் இடம் பெறுவது, அரிதான ஒன்றாக உள்ளது.இந்த ஆண்டு, ஜனவரி மாதம், சுமன் பவன் போடானி என்கிற ஹிந்து பெண், நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இவர், நீதிபதிகளுக்கான தேர்வில், 54வது இடத்தை பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில், சிந்து மாகாணத்தை சேர்ந்த ஹிந்து பெண், புஷ்பா கோல்ஹி, அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்றதையடுத்து, அங்கே, உதவி சப் – இன்ஸ்பெக்டராக பணியமர்த்தப்பட்டுள்ளார்.

இத்தகவலை, ‘டுவிட்டரில்’ மனித உரிமைகள் ஆர்வலர், கபில் தேவ் வெளியிட்டார். அவர், ”சிந்து அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம், மாகாண போட்டித் தேர்வில் வெற்றி பெற்று, புஷ்பா கோல்ஹி, உதவி சப் – இன்ஸ்பெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார். போலீஸ் பணியில் சேரும், ஹிந்து சமூகத்தைச் சேர்ந்த முதல் பெண் என்ற பெருமையை, புஷ்பா கோல்ஹி பெற்றுள்ளார்,” என்றார்.