‘யுனிசெப்’ மாநாட்டில் பாகிஸ்தானிற்கு மூக்குடைப்பு

இலங்கையில் நடைபெற்ற, ‘யுனிசெப்’ எனப்படும், ஐ.நா., சர்வதேச குழந்தைகள் நிதியத்தின் கூட்டத்தில், காஷ்மீர் விவகாரத்தை இழுத்த பாகிஸ்தானுக்கு, இந்திய எம்.பி.,க்கள், தக்க பதிலடி கொடுத்தனர்.

யுனிசெப் எனப்படும், ஐ.நா., சர்வதேச குழந்தைகள் நிதியத்தின், குழந்தைகள் உரிமை மாநாடு, அண்டை நாடான இலங்கையில் நடந்தது.இதில், இந்தியா சார்பில், காங்., எம்.பி., கவுரவ் கோகோய் மற்றும் பா.ஜ., எம்.பி., சஞ்சய் ஜெய்ஸ்வால் பங்கேற்றனர்இதில், பாக்., சார்பில் பங்கேற்ற அந்நாட்டு எம்.பி.,க்கள், ஜம்மு – காஷ்மீர் விவகாரத்தை, கொண்டு வந்தனர். இதற்கு, இந்திய எம்.பி.,க்கள் தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. ‘குழந்தைகள் உரிமை மாநாட்டில், சம்பந்தமில்லாமல் காஷ்மீர் விவகாரத்தை பேச, அந்நாடு முயற்சிப்பது துரதிஷ்டவசமானது.

‘ஜம்மு – காஷ்மீர் என்பது, முழுக்க முழுக்க இந்தியாவுக்கு சொந்தமான பகுதி. இதில் பாக்., தலையிட எந்த உரிமையும் இல்லை’ என பதிலடி தரப்பட்டது.

இதேபோல், மாலத்தீவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தெற்காசிய நாடுகளின் நாடாளுமன்றத் தலைவர்களின் மாநாட்டிலும் பாகிஸ்தானின் முயற்சி முறியடிக்கப்பட்டது. அந்த மாநாட்டில் பங்கேற்ற பாகிஸ்தான் பிரதிநிதிகள், ஜம்மு-காஷ்மீர் விவகாரம் குறித்துப் பேச முயன்றனர். அப்போது, இந்தியப் பிரதிநிதிகள் குறுக்கிட்டு பாகிஸ்தானின் முயற்சியை முறியடித்தனர். மேலும், மனித குலத்துக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கும் பயங்கரவாதத்துக்கு ஆதரவு அளிப்பதை நிறுத்துங்கள் என்று இந்தியப் பிரதிநிதிகள் பதிலடி கொடுத்தனர்.

ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை இந்தியா ரத்து செய்த பிறகு, இந்த விவகாரத்தை உலகளாவிய பிரச்னையாக்கி, சர்வதேச நாடுகளின் ஆதரவை திரட்டும் முயற்சியில் பாகிஸ்தான் ஈடுபடுகிறது. ஆனால் அதற்கு பலன் கிடைக்கவில்லை.