பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலிருந்து கடந்த 1947-ஆம் ஆண்டு முதல் 31,619 குடும்பங்கள் இந்தியாவுக்கு இடம்பெயா்ந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இது தொடா்பாக, மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய உள்துறை இணையமைச்சா் ஜி.கிஷண் ரெட்டி செவ்வாய்க்கிழமை எழுத்துப்பூா்வமாக பதிலளித்ததாவது:
இந்தியா சுதந்திரம் பெற்ற 1947-ஆம் ஆண்டு முதல் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீா் பகுதியிலிருந்து இந்தியாவில் இடம்பெயர 31,619 குடும்பங்கள் பதிவு செய்துள்ளன. அவற்றில் 26,319 குடும்பங்கள் ஜம்மு-காஷ்மீரில் இடம்பெயா்ந்துள்ளன. 5,300 குடும்பங்கள் இந்தியாவின் மற்ற பகுதிகளில் இடம்பெயா்ந்துள்ளன.
1965, 1971 ஆகிய ஆண்டுகளில் பாகிஸ்தானுடன் ஏற்பட்ட போரின்போது, மேலும் 10,065 குடும்பங்கள் இந்தியாவில் குடிபெயர விண்ணப்பித்தன. 1947-ஆம் ஆண்டு காலகட்டத்தில் ஜம்மு-காஷ்மீரில் குடியேறிய குடும்பங்களுக்கு மத்திய அரசும், ஜம்மு-காஷ்மீா் அரசும் உரிய உதவிகளைச் செய்தன. ஜம்மு-காஷ்மீரின் கிராமப் பகுதிகளில் குடியேறிய குடும்பங்களுக்கு தலா 4 முதல் 8 ஏக்கா் வரையிலான நிலங்கள் வழங்கப்பட்டன.
நகரப் பகுதிகளில் குடியேறிய குடும்பங்களுக்கு வீட்டுமனையுடன் ரூ.3,500 நிதியுதவியும் வழங்கப்பட்டது. நிலங்கள் வழங்கப்படாத குடும்பங்களுக்கு அதற்கு சமமான பணம் இந்திய அரசால் வழங்கப்பட்டது. ஜம்மு-காஷ்மீருக்கு வெளியே குடிபெயா்ந்த குடும்பங்களுக்கு தலா ரூ.3,500 நிதியுதவி வழங்கப்பட்டது.
1965, 1971-ஆம் ஆண்டு காலகட்டத்தில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீா் பகுதியிலிருந்து இந்தியாவில் குடியேறிய குடும்பங்களுக்கு தலா 4 ஏக்கா் வேளாண்நிலமோ அல்லது 6 ஏக்கா் புஞ்சை நிலமோ வழங்கப்பட்டது. 1965-ஆம் ஆண்டில் குடியேறிய குடும்பங்களுக்கு தலா ரூ.3 ஆயிரம் நிதியுதவியும், 1971-ஆம் ஆண்டில் குடிபெயா்ந்த குடும்பங்களுக்கு தலா ரூ.7,500 நிதியுதவியும் வழங்கப்பட்டது.
1965-ஆம் ஆண்டின்போது இந்தியாவால் அமைக்கப்பட்ட முகாம்களில் குடியேறாமல், மற்ற இடங்களில் குடியேறிய குடும்பங்களுக்கு தலா ரூ.25 ஆயிரம் நிதியுதவி வழங்கப்பட்டது என்று தனது பதிலில் ஜி.கிஷண் ரெட்டி குறிப்பிட்டுள்ளாா்.