சட்டவிரோதமாக தமிழகத்தில் தங்கியதாக 40 வங்கதேசத்தவரை திருப்பி அனுப்பிய போலீஸார்

றையான ஆவணங்கள் இன்றி தமிழகத்தில் சட்டவிரோதமாக தங்கி பணிபுரிந்து வந்ததாக வங்கதேசத்தைச் சேர்ந்த சுமார் 40 பேர் அவர்களது நாட்டுக்கே திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதுதவிர போலி பாஸ்போர்ட்டில் இலங்கை செல்ல முயன்ற 2 வங்க தேசத்தினர் பிடிபட்டுள்ளனர்.

பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் கல்வி, வேலை, மருத்துவம் உட்பட பல்வேறு தேவைகளுக்காக தமிழகம் வருகின்றனர். சிலர் இங்கேயே தங்கி விடுகின்றனர். இதேபோல் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களில் சிலரும் முறையான ஆவணங்கள் இன்றி தமிழகத்தில் சட்ட விரோதமாக தங்கிவிடுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

தொடர் விசாரணை

இதுகுறித்து மத்திய உளவு பிரிவு, தமிழக கியூ பிரிவு உள்ளிட்ட புலனாய்வு பிரிவு போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர். இதில், வங்க தேசத்தைச் சேர்ந்த சுமார் 40 பேர் தமிழகத்தில் சட்டவிரோதமாக தங்கி பணி செய்து வந்தது தெரியவந்ததாகவும் அவர்கள் அடையாளம் காணப்பட்டு மீண்டும் அவர்களது நாட்டுக்கே திருப்பி அனுப்பி வைக்கப்பட்டதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் மேலும் கூறும்போது,கடந்த பல ஆண்டுகளுக்கு முன்னர் வங்கதேசத்தில் இருந்துகொல்கத்தாவுக்குள் சட்ட விரோதமாக நுழைந்தவர்கள் அங்குள்ளவர்கள் போல போலி ஆவணம் தயார் செய்து தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களுக்குள் நுழைந்ததாகவும் அவர்களை சொந்த நாட்டுக்கே திருப்பி அனுப்பும் பணி நடந்து வருவதாகவும் தெரிவித்தனர்.

போலி பாஸ்போர்ட்

இதற்கிடையே சென்னை விமான நிலையத்தில் இருந்து கொழும்புவுக்கு நேற்று முன்தினம் விமானம் ஒன்று புறப்பட்டது. முன்னதாக அதில் செல்ல வந்த பயணிகளை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் சோதனை செய்துள்ளனர். அப் போது புத்தமத துறவிகள் உடை யில் இந்திய பாஸ்போர்ட்டில் டூடுல், மின்டொ ஆகிய 2 பேர் இலங்கை செல்வதற்காக வந்திருந்தனர். அவர்களிடம் இருந்த பாஸ்போர்ட்டை சோதனை செய்தபோது அவை போலி எனத் தெரியவந்தது.

விசாரணையில், அவர்கள் வங்க தேசத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் போலி பாஸ்போர்ட் மூலம் இலங்கை செல்ல முயன்றதும் தெரிந்தது. இதையடுத்து அவர்களின் விமான பயணத்தை ரத்துசெய்த அதிகாரிகள், மேல் விசாரணைக்காக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸாரிடம் ஒப்படைத்தனர். இவர்களுக்கு பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு உள்ளதா என்ற கோணத்திலும் விசாரணை நடக்கிறது.